சனி, 31 ஜனவரி, 2015

உடலுக்குள் ஒரு விவாதம்

ஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. "நாங்கள்  இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் " என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா? "நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது " என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்?இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள்  அல்லவா? என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. "எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை? நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்?" என்று எதிர்க் குரல் கொடுத்தன. " கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை? நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்." என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா?"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. "செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்? "என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். "நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே? நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் ." என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்."உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே? என்று பரிதாபமாகக்  கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை  மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, "உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே? "
                                            எல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, "சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் "என்று கட்டளை பிறப்பித்தது.

திங்கள், 26 ஜனவரி, 2015

அன்பென்ற மொழியாலே

வார்த்தைகளால் யாரையுமே பழிக்காதே
வசவுகளால் இதயங்களைக் கிழிக்காதே
நல்லுறவை வன்முறையால் இழக்காதே
நட்புறவை இழிமொழியால் துளைக்காதே

அன்பென்ற மொழியாலே அகிலத்தை இணைக்கலாம்
அறிவிலாப் போர்ப்பூசல் நிகழாமல் தடுக்கலாம்
எல்லோரும் ஓரினமாய் எப்போதும் கூடலாம்
ஏழைபணக் காரரென்ற பேதத்தை ஒழிக்கலாம்

பழிக்குப்பழி என்பதெல்லாம் நல்ல வழியில்லை
பகையுணர்வு கொண்டுவரும் மாளாத தொல்லை
மறக்காதே என்றைக்கும் வள்ளுவனின் சொல்லை
மனிதர்தமை நேசிக்க இல்லையொரு எல்லை

ஏழைக்கு என்றென்றும் நேசம் காட்டு
எதிரிக்கும் நட்புடனே கரத்தை நீட்டு
எவ்வுயிரும் இன்பமுற அன்பை மீட்டு
என்றுமே அன்புவெல்லும் எனும் தமிழ்பாட்டு

சலித்தாலும் சபித்தாலும் துயரங்கள் தீராது
சன்மானம் கொடுப்பதனால் தரித்திரமும் போகாது
எதிர்நின்று போராடி வாழ்க்கையிலே வெல்லலாம்
எண்ணற்ற வெற்றிகளை உழைப்பாலே அள்ளலாம்

முன்னேறத் துடிப்பார்க்கு வேண்டும்நல் முயற்சி
முதுமையிலும் நலமாக தேவையுடற் பயிற்சி
உழைப்போர்க்கு என்றுமுண்டு வாழ்விலே உயர்ச்சி
உண்மையே உரைப்பார்க்கு ஏதிங்கு தாழ்ச்சி?
(வசந்த வாசல் கவிதைச் சிறகுகள்-2015)


  

இது ஆத்திச் சூடி அல்ல

அன்பே வெல்லும்            
ஆதவன் வணங்கு
இனியன மொழி
ஈரம் நெஞ்சில் கொள்
உறவு மதி
ஊருக்கு உழை
எட்டுக சிகரம்
ஏணியாய் இரு
ஐயம் நீக்கு
ஒன்றே உலகம்
ஓதுதல் ஒழியேல்
ஔவை வழி நில்

கணினி கைக்கொள்
காவியம் செய்
கிசு கிசு தவிர்
கீழ்மை விலக்கு
குற்றம் ஒதுக்கு
கூர்மதி பெறு
கைத்திறன் பெருக்கு
கொல்லல் ஒழி
கோபம் அடக்கு

சங்காய் முழங்கு
சாதி வெறு
சிரம் உயர்த்தி நட
சீறுதல் கவசம்
சுவர்களை உடை
சூது வெறு
சைவம் நன்று
சொற்றிறம் பழகு
சோம்பல் கெடுதி

தன்னை அறி
தானம் செய்
திங்கள் போற்று
தீயன மறு
தன்னலம் தவிர்
தங்கம் வெல்
தடை உடை
தனிமை கொடுமை
தலைமை கொள்

நல்லன எண்ணுக
நாட்டை நேசி
நித்திரை குறை
நீதி தவறேல்
நுங்காய் பயனளி
நூலகம் செல்
நோதல் தவிர்

தாயே தெய்வம்
தாமரை அழகு
திங்கள் போற்று
தூண் என நில்
தேன் நல்மருந்து
புனிதனாய் வாழ்
புதுமை காண்
பழமை நன்று

அன்பு செய்
அறிவை விரி
அருள் பெறு
அல்லல் ஒழி
இதமாய் பழகு
இழிசெயல் விலக்கு

வல்லமை வளர்
வன்முறை வெறு
வண்டமிழ் விரும்பு
வானினும் உயர்
விருந்து பேண்
விழுதென உதவு
வைதல் தவறு
வையம் நேசி

பூமியாய் பொறு
பெண்மை போற்று
பேதமை விலக்கு
பேடிமை நீக்கு
எளிமை போற்று
ஏற்றமுற வாழ்      



    

வெள்ளி, 16 ஜனவரி, 2015

அழகின் சிரிப்பு

வான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலும்
    வைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்
தேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்
      தெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்
மீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்
        மின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்
கானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்
        காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

ஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்
     உருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்
ஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்
     எழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்
சீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்
     செங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்
கார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்
    காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

ஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்
     ஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்
பாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்
      பகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே
தேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே
       தென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே
கூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்
       காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

சனி, 29 நவம்பர், 2014

இனியவை கூறல்

இனியவை கூறல்
கனிபோன்ற இன்சொற்கள் விலக்கி நச்சுக்
     காயன்ன கடுஞ்சொற்கள் மொழிவோர் மூடர்.
நுனிநாக்கில் சனிபுகுந்தால் சண்டை மூளும் ;
       நூற்றுக்கு நூறிந்த மூதுரை உண்மை.
தொனியதிலே கடுமையதைச் சற்றே குறைத்துத்
       தோழமையாய் மொழிகின்ற இனிய சொற்கள்
மனமெங்கும் மகிழ்ச்சியதைப் பூக்கச் செய்யும்;
        மனிதத்தை உச்சிக்கே கொண்டு சேர்க்கும்.

நல்லதொரு ஆபரணம் இன்சொல் ஒன்றே ;
          நகைமற்றும் முத்தெல்லாம் வெற்றுப் பொருளே!
இல்லத்தில் ஊர்களிலே தேசம் எங்கும்
          இன்சொல்லே ஒற்றுமையைப் பேணிக் காக்கும்.
கல்லெறிந்தால் உடலினிலே வடுவுண்  டாகும்;
          கடுஞ்சொல்லால் இதயமதோ வெடித்துச் சிதறும்.
சொல்லெல்லாம் அன்புதனைக் கலந்து சொன்னால்
           சொல்வோரும் கேட்பவரும் மகிழ்ந்து சிரிப்பர்.

துன்பம்தரும் வார்த்தைகளைச் செவி மடுப்போர்
             துடிதுடித்தே முகந்திரிவார்; கொடுமை யன்றோ!
இன்பம்தரும் சொற்களையே பேசிடுவோம்.
             இதயத்தை அன்பாலே நிரப் பிடுவோம்.
மன்பதையில் வாழ்கையிலும் மறைந்த பின்னும்
               மகிழ்வூட்டும் இசைபெருக்கும் இன்சொல் லன்றோ!
வன்சொற்கள் என்றென்றும் நட்பை முறிக்கும்.
               வள்ளுவரின் அடிவணங்கி இன்சொல் நவில்வோம்.
         
             
        

திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

ஒரு நாள்  போல்
மறு நாளில்லை.
நேற்றைய சந்தோசம்
இன்று காணோம்.
இன்றைய சோகங்கள்
நாளை மாறலாம்.
மாறாமல் போவதும்
சாத்தியமானதே.
வாய்த்த படிக்கு
வாழ்ந்து முடிப்போம்.
ஒற்றை இரவில்
உற்ற துன்பங்கள்
விலகுதல் என்பது
விளையாட்டல்ல.
இறக்கை இல்லாமல்
பறக்க முயல்வது
இயற்கைக்கு முரணானது.
திட்டமிட்டாலும்
இல்லாவிடினும்
தன்பாட்டுக்குப் போகும்
வாழ்க்கை.

மீண்டும் குறுங் கவிதைகள்

கடலில்
நல்ல மழை
குருட்டு மேகம்.

மழைத் துளியில்
மாயா ஜாலம்
வான வில்.

எத்தனை முறை
ஐயம் கேட்டும்
கோபப்படாத ஆசிரியர்
'டியுசன்' வகுப்பு.

எமன் குறித்த நேரத்துக்கு
முன்னதாகவே மரணம்
தர்மாஸ்பத்திரி.

எல்லா வகை ரத்தமும்
ஒரே உடலில்
கொசு.

கொட்டியதும்
வளைந்தது
சட்டம்.

ஏமாற்றிய காகம்
ஏமாந்தது நரியிடம்
சந்தோசத்தில் பாட்டி.

நிஜம் வெளியே
நிழல் உள்ளே
நிலைக் கண்ணாடி.

வாலை வெட்டு
முதுகை நிமிர்த்து
மனிதன்.

ஆண்டவனுக்கும்
மாண்டவனுக்கும்
அலங்கார தேர்பவனி. 

சனி, 9 நவம்பர், 2013

இன்னும் சில குறுங் கவிதைகள்

வாங்கியும்
சிவக்கலாம்
கரங்கள்.

வெள்ளை மாளிகையில்
கருப்பு அதிபர்
கால மாற்றம்.

மீனையும் காணோம்
பறவையும் வரவில்லை
வற்றிய குளம்.

திரையில்
நட்சத்திரங்கள்
பகலிலும்.

உண்டி கொடுப்போர்
வயிற்றில்
உறு பசி.

நெய்தோர்
உடலெங்கிலும்
அம்மணம்.

மாளிகை கட்டியவன்
வாசம்
மண் குடிசையில்.

சாலை போட்டவன்
வீட்டிற்கு
சரியான பாதையில்லை.

அன்று மட்டும்
வீட்டிலேயே குடித்தார்கள்
காந்தி ஜெயந்தி.

இறக்கைகள் இல்லாமலே
பறக்கிறது
விலைவாசி.  

புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

                                      சம நீதி
ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?
நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம்
சமமாய் எமக்குள் பிரித்துக் கொள்வோம்.

                        புதிய ஜனநாயகம்
மக்களின் பணத்தை
மக்களில் சிலர்
(தம்)மக்களுக்காக
கொள்ளை அடிப்பது.

                           காலத்தின் கோலம்
 பொங்கும் காலம் போய்
 'போ'ங்காலம் வந்து விட்டால்
 அருகம் புல் நட்டாலும்
 அப்படியே கருகி விடும்.  

 






ஞாயிறு, 3 நவம்பர், 2013

குறுங் கவிதைகள்

திருமகளை
அடைவதற்காக
கலைமகளை விற்கிறார்கள்
கல்வி வியாபாரம்.

குய்யோ முறையோ என்று
கூக்குரலிட்டாலும்
உடைந்த மண்பானை
ஒட்டிக் கொள்ளவா போகிறது?

அஸ்தமனமானாலும்
அடுத்த நாள் காலை
புத்தம் புதிதாய்
எழும் ஞாயிறு.

 விழுந்தால் தான்
 உதயமாகும்
 எழ வேண்டும்
 எனும் எண்ணம்.

 சுவரெங்கிலும்
 எழுதப்பட்டிருந்தது
 'சுவற்றில் எழுதாதே'

 நடுவே நெருப்பு
 சுற்றிலும் நீர்
 ஈழம்.

 பூவின் மேல்
 இன்னொரு பூ
 வண்ணத்துப் பூச்சி.

 அழுகையும் சிரிப்பும்
 எழுத்துகளில்லாத
 வார்த்தைகள்.

  மூடிய கதவைத் திறக்கும்
  திறந்த கதவை மூடும்
  கொள்கை இல்லாத காற்று.
 
  வந்ததும் போனதும்
   குழந்தைக்குத் தெரியாது
   அப்பாவுக்கு ஐ.டி வேலை.
 



வெள்ளி, 4 அக்டோபர், 2013

எங்கே காந்தியம்?

சாதிப் புயலில்
பிய்ந்து உதிரும்
அமைதிப் பூக்கள்.

மனித நேயம்
கிழித்துக் குதறும்
மதவெறி நகங்கள்.

நீதியின் கரங்களை
வெட்டிச் சாய்க்கும்
வன்முறை வாட்கள்.

மண் எங்கிலும்
ரத்த ஆறுகள்.

தரை முச்சூடும்
தசைத் துண்டங்கள்.

எங்கு காணினும்
பயங்கர வாதம்.

தீரா நோயாய்
தீவிர வாதம்.

மேலை நாடுகள்
காந்தியின் பொருட்களை
ஏலம் போடுதாம்!
ஓ, இதென்ன அதிசயம்?
நாங்கள்
காந்தியத்தையே
ஏலம் போட்டு விட்டோம்!


செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பறவையும் மரமும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இரை தேடிவிட்டு இரவு திரும்பிய பறவையிடம் மரம் வருத்தத்தோடு சொன்னது, " இன்னும் இரண்டு நாட்களில் என்னை அடியோடு வெட்டப் போகிறார்களாம். அதிகாரிகள் பேசிக் கொண்டார்கள். சாலையை அகலப்படுத்தப் போகிறார்களாம்." இதைக் கேட்ட பறவையின் கண்களில் நீர் வழிந்தது. அதைப் பார்த்த மரம், "வருத்தப்படாதே, நண்பனே. வெட்டுப்படுவது எங்களுக்கு வாடிக்கை. காலையில் விரைவாக எழுந்து வேறு மரத்திற்குச்  சென்று விடு. போகும்பொழுது என் சருகுகளையும் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு போ. கூடு கட்ட உதவும். இந்தா, பழம் சாப்பிடு " என்று கூறி கனிவோடு தன் கனிகளைக் கொடுத்தது. பறவையின் கண்கள் கலங்கின. மனம் நெகிழ்ந்தது. " கவலைப்படாதே, நண்பா. நீ கொடுத்த கனிகளைச் சாப்பிட்டுவிட்டு, உன் விதைகளை மண்ணில் பரப்புவேன். நீ மறுபடியும் புதிதாகப் பிறப்பாய்." என்று நன்றியுடன் மொழிந்தது பறவை. சிலிர்த்துச் சிரித்தது மரம்.        

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ஒன்று வெள்ளத்தில் நீந்தியவாறு எதிரில் வந்தது. " என்னைக் காப்பாற்று" என்று மானைக் கெஞ்சியது எறும்பு. "சரி. என் மீது ஏறிக்கொள் " என்று மான் கூற, எறும்பு மான் மீது ஏறி, அதன் கொம்பில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது. சில மணி நேரத்திற்குப் பின் வெள்ளம் வடிந்தது. மானிடம் நன்றி கூறிவிட்டு எறும்பு தன் இருப்பிடம் சென்றது. பிறிதொரு நாள். நல்ல வெய்யில் நேரம். மரநிழலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது மான். சற்றுத் தொலைவில் புலி ஒன்று மானையே உற்றுப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அது மான் மீது பாய்ந்து தாக்கலாம். திடீரென்று யாரோ மானை பலமாகக் கடித்தார்கள். வலி பொறுக்காது எழுந்த       மானைப் பார்த்து, " பயப்படாதே. நான் தான் உன்னைக் கடித்து எழுப்பினேன். எதிரில் பார்." என்றது எறும்பு. எதிரில் புலியைப் பார்த்த மான் அபாயத்தைப் புரிந்து கொண்டது. எறும்பு நண்பனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு, பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தது மான். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்பா, நலமா?நானும் உன்னுடன் வரலாமா?"என்று பணிவாக வேண்டியது கொக்கு. எருமை நட்புணர்வோடு ஒப்புதல் தந்தது. எருமை செல்லுமிடம் எங்கும் கொக்கும் கூடவே சென்றது. எருமை மேயும் பொழுது புற்களிலிருந்து வெளியேறும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பசியாறியது கொக்கு. கைமாறாக, எருமையின் மீது அமர்ந்து, அதன் ரத்தத்தை உறிஞ்சும் உண்ணிகளைப் பிடித்துத் தின்று எருமைக்குச் சுகமளித்தது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர்கள் விளையாடுவதற்கு வழவழப்பான, உருண்டையான கற்களையே விரும்பித் தெரிவு செய்தனர். இதை ஒரு அவமானமாகக் கருதி வருத்தப்பட்டது அந்தக் கல். ஒரு நாள் பலத்த மழை பெய்தது. வெள்ளம் அந்தக் கல்லை அடித்துச் சென்று ஆற்றில் சேர்த்தது. ஆற்று வெள்ளம் அந்தக் கல்லை புரட்டி, உருட்டி சொரசொரப்பை நீக்கி வழவழப்பாக்கியது. கல் இப்பொழுது உருண்டையாய் அழகிய வடிவத்துடன் காட்சியளித்தது. தன்னைச் செதுக்கிப் பண்படுத்திய ஆற்றுக்கு நன்றி கூறியது கல். 

சனி, 10 ஆகஸ்ட், 2013

பூவும் வண்ணத்துப் பூச்சியும்

தோட்டத்துச் செடியில் பூ ஒன்று அழகாகப் பூத்திருந்தது. பூவின் விரிந்த, பெரிய இதழ்கள் மஞ்சள் பூசி மங்களகரமாகக் காட்சியளித்தன. எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி. பூவைச் சுற்றி சற்று நேரம் வட்டமடித்தது. பிறகு அன்பான குரலில் பூவிடம்,"பூவே, பூவே, உன் மீது அமர்ந்து சற்று ஓய்வெடுக்கலாமா?"என வேண்டியது. "ஓ, தாராளமாக. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீ தங்கலாம். பசித்தால், என்னிடம் தேனுள்ளது. வேண்டுமளவு பருகலாம்,"என்று இனிய குரலில் மொழிந்தது பூ. தேனுண்டு இளைப்பாறிய வண்ணத்துப் பூச்சி,  பூவின் விருந்தோம்பல் பண்புக்கு நன்றி கூறி விடைபெற்றது. போகும்பொழுது, பூவின் மகரந்தத்தை தன் இறக்கையில் எடுத்துக்கொண்டுபோய் வேறொரு பூவில் சேர்த்து இன விருத்திக்கு உதவியது.   

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -20


  1. சாதாரணமான மனிதர்கள் இறக்கும் பொழுது பிணமாகிறார்கள். ஆனால் புரட்சியாளர்கள் மரிக்கும் பொழுது புதிதாகப் பிறக்கிறார்கள்.
  2. ஏற்றத் தாழ்வுகளும், வர்க்க பேதங்களும், இன ஒடுக்கல்களும், சுரண்டலும் எந்தச் சமூகத்தில் எல்லை தாண்டிப் பெருகுகின்றனவோ அங்கு நிச்சயம் புரட்சி வெடிக்கும்.
  3. மாற்றங்கள் மனிதர்களிடம் தேடும் தாகத்தையும் செயல்படும் வேகத்தையும் முடுக்கிவிட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும்.
  4. வண்ணங்கள் மாறுபட்டாலும் பூக்கள் ஒன்றையொன்று வெறுப்பதில்லை.
  5. பூக்கள் வெறுமனே பூக்கள் மட்டுமல்ல. அவற்றுக்குள் காய்கள், கனிகள், விதைகள், மரங்கள் என்று எண்ணற்ற ரகசியங்கள் மறைந்துள்ளன.
  6. மகரந்தம் கொணர்ந்த வண்ணத்துப் பூச்சிக்கு தேன் தந்து நன்றி நவின்றது பூ.
  7. விதவைக்குப் பூக்கள் மறுக்கும் உலகம் அவளின் பிணத்தின் மீது பூக்களாய்க் கொட்டும்.
  8. மண்ணுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. சாதி, மதம் இல்லை.யார் தோண்டினாலும் தண்ணீர் தரும். யார் பயிரிட்டாலும் உணவு கொடுக்கும்.
  9. அடித்தாலும், உதைத்தாலும், குதித்தாலும்,சிதைத்தாலும் சினம் கொள்ளாது மண்.
  10. இயற்கைத் தேவன் தன் இன்னுயிர்க் காதலிக்கு வாரி இறைத்த வைரங்களே நட்சத்திரங்கள்.  

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -19

1. எளியோரை ஏளனம் செய்தலும் வலியோர்க்கு சாமரம் வீசலும்            அறிவுடையோர் செயல் அல்ல.
2. நா காத்தல் இரு வகைப்படும். தீய சொற்களைப் பேசாதிருத்தல் ஒரு வகை.    அளவுக்கு மிஞ்சி உணவுண்ணாமல் நாவைக் கட்டுப்படுத்தல் இரண்டாவது  வகை.
3. இருட்டை விரட்டுகின்றன கதிரோனின் ஒளிக் கதிர்கள். அறியாமையை  நீக்குகிறது கல்வி.
4. அரசை எதிர்த்து தீவிரமாக முழங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று  மௌனிகளாகி விட்டால் என்ன பொருள்? பயமுறுத்தப்பட்டிருப்பார்கள்  அல்லது விலை போயிருப்பார்கள்.
5. நம் பகுதிக்கு வருகை தரும் பறவைகளை வரவேற்போம். அப் பறவைகள்  நம்முடைய விருந்தாளிகள். ஓசைகள் எழுப்பி அவற்றை பயமுறுத்த  வேண்டாம். நிம்மதியாகத் தங்கி விட்டுச் செல்லட்டும்.
6. அறிவாளி ஒருவனின் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த ஒரு தேசமும்  உயர்ந்ததாக வரலாறு இல்லை.
7. எதை எதிர்பார்த்து மழை பொழிகிறது? மண் எதை எதிர்பார்த்து  விளைச்சலைக் கொடுக்கிறது? காற்று எதை எதிர்பார்த்துக் குளுமையாக  வீசுகிறது? மழை, மண், காற்று போல நாமும் எந்தக் குறியெதிர்ப்பும்  இல்லாமல் பிறர்க்கு உதவி செய்தல் வேண்டும்.
8. தண்ணீர்ப் பற்றாக்குறையின் பொழுது இலைகளை உதிர்த்து விடுகின்றன  மரங்கள். அது போல, வருமானம் குறையும்பொழுது, நாம் தேவையற்ற  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
9. பலருடைய மன அழுத்தங்களுக்குக் காரணம் அவர்கள் தங்களின்  பிரச்சனைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாததே. வாய்விட்டுப்  பேசினால் மனம் லேசாகும். அழுத்தம் அகலும்.
10. நீதி மன்றங்கள் துணிவாகவும், தெளிவாகவும் தீர்ப்புக்கள் வழங்கும்  ஒவ்வொரு முறையும் மக்களாட்சியின் மீது நமக்கு நம்பிக்கை மலர்கிறது.  ஒருவித பாதுகாப்பு உணர்வும் மனதில் விரிகிறது.       

செவ்வாய், 16 ஜூலை, 2013

சிந்தனை பத்து - 18


  1. துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள். 
  2. நாம் பிறரிடம்  உரையாடும் பொழுது,  அதை அவர்கள் விருப்புடன் கவனிக்கிறார்களா என்பதைத் தெரிந்து  நமது உரையைத் தொடர்தல் நல்லது. 
  3. நடக்க,  நடக்கத்தான் பாதை உருவாகும்.  முயற்சி செய்ய, செய்ய வாழ்க்கை கைகூடும்.    
  4.  நெடுநாள் கழித்து இளமைக்கால நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.  
  5.  வாழ்க்கையை  பாலைவனமாக்குவதும் பசுஞ்சோலையாக்குவதும் நம் எண்ணங்களே.  நல்ல எண்ணங்கள் மெதுவாகவேனும் நம்மை உயர்வு நோக்கி உந்திச் செல்லும்.                                                                                                   
  6. உதவாக்கரை  என்று  ஒருவரை  ஒதுக்கி , ஓரங்கட்டி  விடாதீர்கள் . பிறவியில்  அப்படி  யாரும்  இல்லை . சூழ்நிலை  காரணமாக  ஒருவருக்குள்  இருக்கும்  திறமைகள்  வெளிப்படாமல்  இருக்கலாம் . சூழ்நிலை  கனியும்  பொழுது , அவருக்குள்  இருந்தும்  ஒரு  அற்புதமான  ஆற்றலாளன்  வெளிவரக்கூடும் .
  7. எளிமை என்பது ஒரு விலைமதிப்பற்ற ஆபரணம். அதை அணிந்ததனால் தான் காந்தி, காமராசர் போன்றோர்  உலகெங்கும் அறியப்படுகின்றனர்.
  8. அலமாரியில் உள்ள புத்தகங்களைத்  தொட்டு, எடுத்து, தூய்மைப்படுத்தி, நல்ல முறையில் ஒழுங்காக அடுக்கி வைக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி மலரும். புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு விசாலமடையும்.   
  9. இயற்கையை  அழிப்பதால்  ஏற்படும் இழப்புக்கள்  பெரிய  அளவில்  நம்மைப் பாதிக்காமல்  இருக்கலாம். ஆனால்  வருங்காலத்  தலைமுறையினர் மழையையே  பார்க்காத  அவலத்தைச்  சந்திக்கப் போகிறார்கள்  என்பது மட்டும்  மகா சத்தியம்.
  10. அதிகார போதை  அபாயகரமானது . அதை உங்களுக்குள்ளே  அனுமதிக்காதீர்கள் . உங்களை  அது  படுகுழியில்  தள்ளிவிடும் . அன்பு  ஒன்றே  நிலையானது . அன்பு  காட்டுங்கள் . மனம்  லேசாகும் . வாழ்க்கை  சுகமாகும் . 

புதன், 10 ஏப்ரல், 2013

சிந்தனை பத்து -17



  1. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு;  எரிச்சலின் நண்பன்; உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆதலினால், பொறாமை தவிர்ப்பீர்.
  2.   நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது. உன்னைச் சுற்றிலும் கெட்டவர்களே அதிகம் இருக்கும் போது, நீ வல்லமை படைத்தவனாக இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும்.
  3. சினத்தை ' சேர்ந்தாரைக் கொல்லி' எனச் செப்புகிறான் அய்யன் வள்ளுவன். சினம் இதயத்தை உடைத்துவிடும் என்கிறது மருத்துவ நூல். மன்னர்களின் சினத்தால் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சிதறி, சின்னாபின்னமாகின என்கிறது வரலாறு. நம் சினம் அடுத்தவர் மனதைப் புண்படுத்துகிறது. சினத்தினால் யாரும் இலாபம் ஈட்டியதாகச் செய்திகள் இல்லை. சினம் எதையும் சாதிப்பதும் இல்லை. ஆதலினால் சினம் தவிர்ப்பீர். 
  4. அள்ளிக் கொடுக்க நம்மிடம் அளவில்லாத அன்பு உள்ளது. நேசிக்க பரந்த மனம் உள்ளது. யோசிக்க அறிவு உள்ளது. பின் எதற்காக வன்முறை? ஏன் வெறியாட்டம்?
  5. எல்லோரும் நம் சகோதர, சகோதரிகள். மதம், சாதி, இனம் தாண்டி, மனிதர்களாக ஒன்றாக வாழ்வதை விட்டு விட்டு, வன்முறையால் ரத்தம் சிந்தலாமா? நன்முறைகளைப் போதித்த நீதி நூல்கள் எழுந்த தேசத்தில், வன்முறையின் கோர ஆட்சி நிகழ்வது சரியா? 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற மகத்தான உறவு முறை மலர்ந்த மண்ணில், எதற்கு கத்தி? எதற்கு தோட்டா? எதன் பொருட்டு வெடி குண்டு? அன்பைப் பரப்புவோம்; நட்புணர்வை வளர்ப்போம்; வன்முறையைத் தவிர்ப்போம்.
  6. உன்னிடம் பிறர்க்குக் கொடுக்க எதுவுமில்லை என்று வருத்தப்படாதே. கொடுக்க வேண்டும் என்ற மனம் உள்ளதல்லவா? அது போதும்.
  7. எந்நேரமும் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன் அமர்ந்து சுற்றுப் புறத்தையே மறந்து போன சின்னஞ் சிறு அரும்புகளே, கொஞ்சம் வெளியே வாருங்கள். என்ன அழகாகப் பூத்திருக்கின்றன மலர்கள்! அந்த வண்ண மலர்களின் மீது பூத்திருக்கின்ற சின்னச் சின்ன வண்ணத்துப் பூச்சிகளை பாருங்கள். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நடக்கும் மழை நெசவைக் கண்டு களியுங்கள். அதோ, கிழக்கு வானில் வானவில்!யாருக்காகக் காத்திருக்கிறது, ராமனுக்காகவா அல்லது அர்ச்சுனனுக்காகவா? இருவருக்கும் இல்லை. நீங்கள் ரசிப்பதற்காக மட்டுமே. துள்ளுகின்ற பசுக் கன்றுகளையும் தாவும் அணில்களையும் கீச்சிடும் பறவைகளையும் நோக்குங்கள். மெல்ல ரகசியம் பேசிச் செல்லும் காற்றின் மொழியை அனுபவியுங்கள். அதோ, அந்த நீல மலைகளைப் போர்த்தி நிற்கும் வெண் மேகங்களை தரிசியுங்கள். உங்கள் ரசனை விரியும். அறிவு பெருகும். இதயம் வலுவடையும். பார்வை கூர்மை அடையும். வாழ்நாள் கூடும். உங்களுக்கும் இயற்கைக்குமான உறவு வலுப்படும். வாருங்கள் குழந்தைகளே, வெளியே!
  8. பேருந்தில் நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்கும்பொழுது 'நன்றி' எனச் சொல்லிப் பாருங்கள்.....அவர் முகத்தில் தான் எவ்வளவு மலர்ச்சி! அன்று முழுதும் அவர் தனது பணியை மகிழ்ச்சியுடன் செய்வார் என்பது திண்ணம்.
  9. ஒரு குழந்தையிடம் 'நன்றி' கூறும் பொழுதும் 'வருந்துகிறேன்' என வருத்தம் தெரிவிக்கும் பொழுதும், அந்தப் பிஞ்சு மனதில் உங்களைப் பற்றி உயர்வான எண்ணம் உருவாகிறது. அது மட்டுமல்ல....நன்றி தெரிவிக்கும் பண்பாடும் வருத்தம் தெரிவிக்கும் நாகரிகமும் அந்தக் குழந்தையின் மனதில் பதியமாகின்றன.
  10. அதிகாரமாகச் சொல்லாமல், அன்பாகச் சொல்லிப் பாருங்கள்....எல்லோரும் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.