காலம்
இது கலி காலம்.
காந்திகளுக்கு
கோட்சேக்கள
அகிம்சை
போதிக்கிறார்கள்
ஆந்தைகள்
குயில்களுக்கு
இசை பாட
கற்றுத் தருகின்றன.
எருக்கம் பூக்கள்
மல்லிகைக்கு
மணம் பற்றி
உபதேசிக்கின்றன
வேப்பங்காய்கள்
அணி வகுத்து
பலாச் சுளைகளுக்கும்
மாம்பழக் கீற்றுகளுக்கும்
இனிப்பது
எப்படியென்று
இலக்கணம்
இயம்புகின்றன.
இதே ரீதியில்
காலம் போனால்.....
பொய்களிடம்
உண்மைகள்
கை கட்டி நிற்கும்
மின்மினிகளிடம்
விண் மீன்கள்
வெளிச்சத்துக்காய்
தவங் கிடக்கும்.
ஹிட்லர்களும்
இடி அமீன்களும்
தலைமை தாங்கும்
மனித நேயக்
கருத்தரங்குகளில்
ஏசு பிரான்களும்
புத்தர்களும்
ஆராய்ச்சிக் கட்டுரைகள்
வாசிப்பர்
சாக்கடைகளிடம்
சேர்ந்து
கங்கையும்
காவிரியும்
சுத்தம் பற்றி
விவாதிக்கக் கூடும்.
கொக்குகள்
மீன்களுக்கு
நீச்சல்
கற்றுத் தர
முன் வரலாம்.
ஏக பத்தினி விரதம்
பற்றி
ராமர்களுக்கு
அர்ச்சுனர்கள்
அறிவுரை
வழங்கக் கூடும்.
ஆதலால்
தோழர்களே,
எதற்கும்
ஆயத்தமாயிருங்கள்.....
காலம்...
இது கலி காலம்!