வெள்ளி, 8 டிசம்பர், 2017

கவிதை

கவிதை என்பது கவிஞனின் விதைப்பு.
கவிதை என்பது உணர்ச்சிகள்  ஊர்வலம்.
காலம் கடந்தும் நிற்பது கவிதை.
ஞாலம் செழிக்க முளைக்கும் அதன் விதை.
போர் வாளாகி அநீதி அறுக்கும்.
புரட்சி விதைகளை எங்கும் தூவும்.
புதுமை மலரப் போர்க்கொடி உயர்த்தும்.
புதிய பாதை சமைக்க உதவிடும்.
காதல் துளிர்க்க கைகள் நீட்டும்
அன்பெனும் வீணையை அழகாய் மீட்டும்.
சாதிப் பேய்க்கு சவுக்கடி கொடுக்கும்
சமய வெறிக்கு சவக்குழி தோண்டும்..
கவிதைக்கு என்றும் சாவென்ப தில்லை
சரித்திரமாய் அது நின்று நிலைக்கும்.
பட்டாம் பூச்சி பறக்கும்  கவிதை.
பறையின் முழக்கம் அதிரும் கவிதை..
வானம் எழுதும் வானவில் கவிதை.
மின்னல் என்பது மறையும் கவிதை.
கொட்டும் அருவி இயற்கையின் கவிதை.
இடியின் முழக்கம் புரட்சிக் கவிதை.
நந்தி வர்மனைக் கொன்றது கவிதை.
கம்பன் மகனைக் கவிழ்த்தது கவிதை.
கீரனை எரித்தது சிவனின் கவிதை.
வேலனை ஈர்த்தது அவ்வையின் கவிதை.
சின்னக் குழந்தையின் சிரிப்பொரு கவிதை.
கன்னக் குழியின் அழகொரு கவிதை.
காவிரி நதியின் பாய்ச்சல் கவிதை.
காட்டு அருவியின் வீழ்ச்சியும் கவிதை.
மழலையின் அழுகை மாபெரும் கவிதை.
ஆண்மயில் ஆட்டம் அழைக்கும் கவிதை
குயிலின் இசையோ உருக்கும் கவிதை..
பேரூர் சிற்பம்... பேசாக் கவிதை.
ரவி  வர்மாவின் ஓவியம் கவிதை.

காதலை வளர்க்கும் கவிதை வாழ்க!
மோதல்கள் தடுக்கும் கவிதை வாழ்க!
பாதைகள் போடும்  கவிதை வாழ்க !.
மாதரைப் போற்றும் கவிதை வாழ்க !

ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஈகை என்பது தமிழனின் ஒப்பற்ற பண்பாடு. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரன் தமிழன். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாதவன். வாரி வழங்கிய வள்ளல்களைப் பற்றி தமிழ் இலக்கியம் கதை கதையாகச் சொல்லும் .
படர்வதற்கு கொழுகொம்பில்லாத முல்லைக் கொடிக்கு தேரீந்தான் பாரி வள்ளல்.
தோகை விரித்து ஆடிய மயிலுக்கு , குளிரில் நடுங்குகிறது என நினைத்து நனைந்த அதன் உடலுக்கு பொன்னாடை போர்த்தினான் பேகன்.
குருசேத்திர யுத்தத்தில் இருதரப்புப் படை வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்தான் உதியஞ் சேரலாதன் என்னும் மன்னன்.
தலையையே கொடுக்கத் துணிந்தான் குமணன்.
இப்படிக் கொடுத்து மகிழ்தலும் விருந்து புரத்தலும் அருந்தமிழ் மன்னர்களின் குணமாய் இருந்தது.
அதியமான் நெடுமானஞ்சி என்றொரு அரசன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். விருந்தினர்களை உபசரிப்பதிலே அவனை விஞ்சும் வேந்தர்கள் யாருமில்லை. புன்னகை பூத்த இன்முகத்தோடு தன்னை நாடி வரும் விருந்தினர்களை உபசரிப்பானாம். ஒருநாள் சென்றாலும் ,இருநாள் சென்றாலும், பலநாள் சென்றாலும், தனியாகச் சென்றாலும் பலரோடு சேர்ந்து சென்றாலும் முதல் நாள் எப்படி விரும்பி வரவேற்று உபசரித்தானோ அப்படி எல்லா நாட்களிலும் விருந்தினர்களை முகம் கோணாது அகமலர்ச்சியுடன் அதே விருப்பத்தோடு உபசரிப்பானாம் அதியமான் நெடுமானஞ்சி. இதை அவ்வைப் பாட்டி ஒரு அருமையான பாடலில் அழகாக விவரிக்கிறார்:
                     "ஒரு நாட் செல்லலம்; இருநாட் செல்லலம் ;
                        பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
                       தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!
இதுவல்லவோ விருந்து புரத்தல்!
                       

திங்கள், 30 அக்டோபர், 2017

அளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின் மூளைத்திறன் பாதிக்கப்படும். மயிற்பீலி மிகவும் லேசானது தான். ஆனாலும் அதை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு  முறிந்து போகும். இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகிறது கீழ்க்காணும் குறள்.
                          " பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
                            சால மிகுத்துப் பெயின்"
எனவே அளவுக்கு மீறும் எதுவுமே அழிவில் தான் முடியும்.  

சனி, 28 அக்டோபர், 2017

தமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரியதொரு காரணம் ஏதுமில்லை.,சோம்பலைத் தவிர. இனி ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதத் திட்டம். எல்லோர்க்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றி.