ஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. "நாங்கள் இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் " என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா? "நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது " என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்?இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள் அல்லவா? என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. "எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை? நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்?" என்று எதிர்க் குரல் கொடுத்தன. " கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை? நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்." என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா?"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. "செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்? "என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். "நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே? நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் ." என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்."உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே? என்று பரிதாபமாகக் கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, "உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே? "
எல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, "சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் "என்று கட்டளை பிறப்பித்தது.
எல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, "சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் "என்று கட்டளை பிறப்பித்தது.