ஞாயிறு, 14 நவம்பர், 2004

மரமும் மனிதனும்


மரமும் மனிதனும்

அது வசந்த காலம்.
சாலையோரத்தில் ஒரு அழகான மரம்.
பச்சை இலைகளோடும்,சிவப்புப் பூக்களோடும்
பார்ப்போரின் விழிகளுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தது.
கோடை வந்தது. வறட்சியின் வன்முறை தொடங்கியது.
நீர் பற்றாக்குறையால் மரம் வாடியது; வதங்கியது.
தேடித் தேடி வேர் கொண்டுவந்த கொஞ்சம் நீரை,
இலைகள் ஆவியாக்கி விடுமோ என்ற அச்சத்தில்,
அவற்றை உதிர்த்து விட்டு, உயிரை தக்க வைத்துக் கொண்டது.
அடுத்து வந்த மழைக் காலத்தில் மரம் தன் வனப்பை
மீட்டுக்கொண்டது.

சாலையின் மறுபுறத்தில் அழகான மாளிகை ஒன்று
அமைந்திருந்தது . ஒரு ஆலை அதிபர் தன் அழகான
மனைவியோடும், கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும்
மகளோடும் அங்கு வசித்து வந்தார்.
ஏராளமான செல்வம்; தாராளமான செலவு;
ஆடம்பரம் அங்கு கொடிகட்டிப் பறந்தது.
விருந்து, விழா என்று பணம் தண்ணீராகச் செலவழிந்தது.
ஆலையில் பேரிழப்பு ஏற்பட்ட பின்னரும் கூட,
ஆடம்பரம் நின்றபாடில்லை. கடன் வாங்கியாவது
அது தொடர்ந்தது. கடன் சுமை அழுத்த, ஒரு நாள்
ஒட்டு மொத்தக் குடும்பமும் நஞ்சருந்தி மாண்டது.

உயிர் பிழைக்க, இலைகள் கூட ஆடம்பரம் எனக் கருதி ,
அவற்றை தியாகம் செய்யும் மரத்திடமிருந்து,
கடன் வாங்கியாவது ஆடம்பரமாக
வாழ நினைக்கும் மனிதன்,
நல்ல பாடம் படிக்கலாமே !

சனி, 13 நவம்பர், 2004

அலகிலா விளையாட்டு

ஆண்டவனின் விளையாட்டை
அலகிலா விளையாட்டு என்பார் கம்பர்.
ஆண்டவனே வந்தாலும் ஆடமுடியாத விளையாட்டை
அறிமுகம் செய்யப் போகிறேன்.
விசித்திரமான குயுக்தியான விளையாட்டு;
கடினமானதும், முரட்டுத்தனமானதும் கூட.
வினாடிக்கு வினாடி மாறும் தந்திரமான ஆட்டம்.
ஆடுகளத்திற்கு அளவோ, எல்லைகளோ இல்லை.
வரையறுக்கப்பட்ட விதிகள் ஏதுமில்லை.
ஆடுவோர்க்கு சீருடை என்று ஒன்றில்லை.
அணியின் உறுப்பினர் எண்ணிக்கை வரம்பற்றது.
காலக்கெடு என்று ஒன்றில்லாததால்,
ஆடும் நேரத்திற்கு அளவில்லை.
ஆடுவோர்க்கு வயது வரம்பு முக்கியமில்லை;
பதினெட்டு வயது வாக்கில் தொடங்கி
படுகிழம் ஆகிற வரைக்கும் தொடரலாம்.
ஆட்டத்திற்கு பயிற்சி ஏதும் அவசியமில்லை.
அறிவு கூட இங்கு அளவுகோல் இல்லை.
ஒவ்வொரு தேசத்திலும் , ஒவ்வொரு காலத்திலும்
வெவ்வேறு விதமாய் விளையாடப் படுவதால்
இதுவரை ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை.
பணக்கார நாடுகளில் ஒரு விதமாகவும்
ஏழை நாடுகளில் வேறு விதமாகவும்
ஆட்டம் அமைவதில் ஆச்சரியம் ஏதுமில்லை;
ஏனெனில் இதில் பணத்தின் பங்கு கணிசமானது.
ஜனநாயக நாட்டில் எவரும் ஆடலாம்;
சர்வாதிகார நாட்டில் இது ' தனிநபர் ' விளையாட்டு.
பழுத்த, பயிற்சி பெற்றவர்கள் கூட
புதிய முகங்களிடம் மண்ணைக் கவ்வுதல்
இவ் விளையாட்டில் சர்வ சகஜம்
அறிவாளிகள் பொதுவாக இவ்வாட்டத்தில்
அதிகம் பங்கெடுப்பதில்லை.
வினோதமான இவ் விளையாட்டில்
அணிமாறல் அடிக்கடி நிகழும்.
வெற்றி பெறும் அணியிலேயே வாழ்நாள் முழுதும்
ஒட்டிக்கொண்டு வாழும் உண்ணிகள் சில பேர்.
கைகளையும் கால்களையும் பயன்படுத்தி
ஆடும் ஆட்டங்கள் பல அறிவோம்.
இந்த ஆட்டத்தை பொறுத்த மட்டில்
நாவும், பேனாவும், மைக்கும், பெருக்கியும் முக்கிய கருவிகள்.
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி பக்க பலங்கள்.
ஆபத்தான விளையாட்டு என்பதால்,
அழுகிய முட்டையை குறி பார்த்து எறிதலும்
அக்கினித் திராவகம் வீசலும்
ஈருருளிச் சங்கிலியை லாவகமாய் சுழற்றலும்
கூடுதல் தகுதிகளாகக் கொள்ளப்படும்.
அண்டப் புளுகுகளும் போலி வாக்குறுதிகளும்
ஆட்டத்தில் வெற்றி பெற சில (கு)யுக்திகள்
முதுகில் குத்தலும், காலை வாரிவிடுதலும்,
இந்த ஆட்டத்தில் ராஜ தந்திரங்கள்.
நியாயமாக விளையாட முனைபவர் உண்டு;
அந்தோ பாவம்,அவர்கள் பெறுவது தோல்வி.
இந்த விளையாட்டிலும் மக்களே பார்வையாளர்கள்;
அடிக்கடி முட்டாள்களாகும் பாக்கியம் அவர்களுக்கே!
எந்த அணி வெற்றி பெற்றாலும்
தோற்றுப் போவதென்னவோ மக்களே!
டென்னிசைக் காட்டிலும் பணம் பண்ணலாம்.
முதலீடு தேவையில்லாத காரணத்தால்
இந்த வியாபார விளையாட்டில் போட்டா போட்டி.
சந்தை இழந்த நடிக, நடிகையரும்,
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களும்
கடைசியில் இவ் விளையாட்டில் கலப்பதுண்டு.
அரிசுடாட்டில், பிளாட்டோ,ரூசோ
வள்ளுவர், சாணக்கியர் என்று பல பேர்கள்
ஆட்ட முறை பற்றி அறிவுறுத்தி இருந்தாலும்,
அவரவர் விருப்பப் படி தான்
ஆட்டத்தை ஆடுகிறார்கள்.
இன்னுமா தெரியவில்லை,தோழர்களே,
விளையாட்டின் திருநாமம் என்னவென்று?
'யாருடைய கடைசிப் புகலிடம் இவ் விளையாட்டு?' என்று
பெர்னாட்சாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

திங்கள், 8 நவம்பர், 2004

எத்தனை விதமாய் மனிதர்கள்

எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
பாலமாய் சில பேர்கள்
பாதையாய் சில பேர்கள்
பாதமாய் சில பேர்கள்
பாடமாய் சில பேர்கள்
பாவமாய் சில பேர்கள்
பாரமாய் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
சுகமாய் சில பேர்கள்
சுழலில் சில பேர்கள்
சுவடாய் சில பேர்கள்
சுடராய் சில பேர்கள்
சுவராய் சில பேர்கள்
சுமையாய் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
வீணாய் சில பேர்கள்
வீணையாய் சில பேர்கள்
விதையாய் சில பேர்கள்
வேராய் சில பேர்கள்
விழுதாய் சில பேர்கள்
விசையாய் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே
அனலாய் சில பேர்கள்
அலையாய் சில பேர்கள்
அமிழ்தாய் சில பேர்கள்
அரவமாய் சில பேர்கள்
அர்த்தமுடன் சில பேர்கள்
அடங்காமல் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
இசையாக சில பேர்கள்
இடியாக சில பேர்கள்
இனிப்பாக சில பேர்கள்
இழிவாக சில பேர்கள்
இல்லாமல் சில பேர்கள்
இயலாமல் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
வளமாக சில பேர்கள்
வறட்சியிலே சில பேர்கள்
வருத்தமுடன் சில பேர்கள்
வஞ்சகராய் சில பேர்கள்
வாழ்வதற்கு சில பேர்கள்
வாடவென்றே சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
மழையாய் சில பேர்கள்
மரமாய் சில பேர்கள்
மடமாய் சில பேர்கள்
மதத்தில் சில பேர்கள்
மண்ணாய் சில பேர்கள்
மண்டியிட்டு சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
ஏமாற சில பேர்கள்
ஏமாற்ற சில பேர்கள்
ஏணியாய் சில பேர்கள்
எத்தராய் சில பேர்கள்
ஏற்றத்தில் சில பேர்கள்
ஏக்கத்தில் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
கனலாய் சில பேர்கள்
கரும்பாய் சில பேர்கள்
புனலாய் சில பேர்கள்
புயலாய் சில பேர்கள்
புகழில் சில பேர்கள்
பொருளற்று சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
நாயாய் சில பேர்கள்
நரியாய் சில பேர்கள்
நடைப் பிணமாய் சில பேர்கள்
தாயாய் சில பேர்கள்
தரித்திரத்தில் சில பேர்கள்
தரிசாக சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
நாதமாய் சில பேர்கள்
நரகத்தில் சில பேர்கள்
வேதமாய் சில பேர்கள்
வெட்டியாய் சில பேர்கள்
பேதையாய் சில பேர்கள்
பேரின்றி சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.
சரித்திரமாய் சில பேர்கள்
சத்தியமாய் சில பேர்கள்
சக்தியுடன் சில பேர்கள்
சருகாக சில பேர்கள்
சலிப்பில் சில பேர்கள்
சஞ்சலத்தில் சில பேர்கள்
எத்தனை விதமாய் மனிதர்கள்
எத்தனை ரகங்கள் அவர்களிலே.

சனி, 6 நவம்பர், 2004

ஆருயிர் நண்பன்

எவனின் பிடியில் இறுக்கம் இழைகிறதோ
எவனின் சிரிப்பு ஒளியுடன் மலர்கிறதோ
எவனின் செயல்கள் வெளிப்படையாய் உள்ளனவோ
அவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.

எவன் பெறும் அதே வேகத்தில் வழங்கவும் வல்லவனோ
எவன் இன்று போலவே நாளையும் இருப்பானோ
எவன் உன் வாழ்விலும் தாழ்விலும் சமபங்கு கொள்வானோ
அவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.

எவனின் சிந்தனை தூயதாய் உள்ளதோ
எவனின் உள்ளம் கூர்மையாய் உணருமோ
எவனால் அற்ப விசயங்களை ஒதுக்க இயலுமோ
அவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.

எவனின் இதயம் உனது பிரிவில் துயரில் துடிக்குமோ
எவனின் உள்ளம் உனது வரவில் மகிழ்ந்து பறக்குமோ
எவனின் நாக்கு சினத்தின் நடுவில் அமைதி காக்குமோ
அவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.

அவலம் தனிலும் அழகாய் வாழ எவனால் இயலுமோ
எவனின் கொள்கைகள் உனக்குள் என்றும் பதிந்து இருக்குமோ
எவனால் உனக்கு, இருப்பதையெல்லாம் கொடுக்க முடியுமோ
அவன் தான் உந்தன் ஆருயிர் நண்பன்.

ஆங்கில மூலம்:ஜான் பரோசு
தமிழில் பெயர்ப்பு:ஜகன்சனி, 23 அக்டோபர், 2004

மண்ணுக்குள் மறைந்தபடி

காற்று அசுரத்தனமாய் வீசியது.
மரத்தின் கிளைகள் பேயாட்டம் போட்டன.
இலைகளும் பூக்களும் பலமாக உரசிக்கொண்டன.
இன்றோ நாளையோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மஞ்சள் இலையொன்று வலியில் முனகியது,
"பூவே, என் மீது ஏன் மோதுகிறாய்?"
பூவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"அந்திமக் காலத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அற்பமே! என்னோடா மோதுகிறாய்? நானில்லாவிட்டால் நமது வம்சமே அழிந்து போகும் தெரியுமா? நானல்லவா காயாய்க், கனியாய் மாறி எல்லா உயிர்க்கும் பசி தீர்க்கிறேன்" என்று கொக்கரித்தது.
இலை மட்டும் இளப்பமா, என்ன?
"ஆனால்,உனக்கும் சேர்த்து மரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் உணவு தயாரிப்பது நான் அல்லவா?" பீற்றிக் கொண்டது இலை.
இது வரை இதையெல்லாம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்த தண்டு அதிகாரமாய் முழங்கியது,
"அட, அற்பங்களே! ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்? உங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருப்பதே நான் தான். நானில்லாவிடில் நீங்கள் யாவரும் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போயிருப்பீர்கள்."
இவ்வாறாக பூவும், இலையும், தண்டும் தங்களுக்குள் நாள் முழுக்க விவாதம் நடத்தின.
ஆனால்,மண்ணுக்குள் மறைந்தபடி, மரத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்த வேர் மட்டும் மேற்படி வெட்டி விவாதத்தில் பங்கு கொள்ளவில்லை; மாறாக, கருமமே கண்ணாக, மரத்துக்கான நீரைத் தேடும் பணியில், அமைதியாக,அடக்கமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தது.

சனி, 16 அக்டோபர், 2004

விழுதலும் கூட விழுமியதே!

எழுதலைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள்.
அதிகாலையில் துயிலெழு என்கிறது அறிவு நூல்.
"விழி;எழு" என்கிறார் விவேகானந்தர்.
"எழுந்து நில்;துணிந்து செல்" என்கிறது திரைப்படப் பாடல்.
எழுதல் மட்டுமா சிறப்பு?
விழுதலும் கூட விழுமியதே!
விசும்பிலிருந்து துளி விழுவதால் தான் ஆறு,ஏரி,குளமெல்லாம் நீர் நிரம்பி வழிகிறது.
மலையிலிருந்து நீர் விழுவதால் தான் மின்சாரம் உதயமாகிறது.
மண்ணில் விதையொன்று விழுவதால் தானே,விண்ணுக்குள் மரமொன்று உயர்கிறது!
விழும்பொழுது தான் மனிதன் எழுவதற்கு எத்தனிக்கிறான்.
காலில் விழுவது வேண்டுமானால் காறி உமிழத்தக்க செயலாய் இருக்கலாம்.
மானுடம் சிறப்புற பயனேதும் கிட்டுமாயின்,விழுவதும் தொழுது ஏற்கத் தக்கதே.

வியாழன், 14 அக்டோபர், 2004

சார்பு


உண்ணக் கனியும்
ஓய்ந்திருக்க நிழலும்
கூட்டுக்கு இடமும்
கொடுத்தது மரம்
விதையைச் சுமந்து
விண்ணில் பறந்து
மண்ணில் விதைத்து
மரத்தை வார்த்தது
பறவை.


வெள்ளி, 1 அக்டோபர், 2004

என் வலைப்பூ நுழைவை வரவேற்ற தோழர்களுக்கு நன்றிகள் ஆயிரம்.எனக்குச் சோறு போடும் என் தாய்த் தமிழுக்கு நன்றிக் கடனாய் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தாகத்தோடு நுழைந்துள்ளேன்.
தமிழே உன்னை நேசிக்கிறேன்
தாயாய் என்றும் பூசிக்கிறேன்
நாளும் உன்னை வாசிக்கிறேன்
நல்லது செய்ய யோசிக்கிறேன்
என்ற என் கவிதை வரிகளோடு இன்றைக்கு முடித்துக் கொள்கிறேன்.வணக்கம்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2004

இனிய தோழர்களே!

தமிழ் வயல் எனும் வலைப்பூ மூலம் வண்ணத்தமிழில் என் எண்ணங்களை ஏந்தி வருகிறேன்.உலகம் முழுதும் விரவியுள்ள தமிழ்த் தோழர்களை சென்றடையும் பெரு விருப்பில் இணையதளத்தினுள் முதலடி வைக்கிறேன்."யாதும் ஊரே;யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங்குன்றனின் வைர வரிகளை வழ்வியல் தத்துவமாய்க்கொள்வோம்;சாதி,மதம் கடப்போம்;அன்பை நாளும் விதைப்போம்;மனித நேயம் வளர்ப்போம்.இத்துடன் இன்று விடைபெறுகிறேன்,தற்காலிகமாய்-வாழ்த்துக்களையும் வசைகளையும் எதிர்பார்த்து.

வெள்ளி, 24 செப்டம்பர், 2004

வணக்கங்கள்!

இனிய தோழர்களே!
நெஞ்சார்ந்த வணக்கங்கள்.