வியாழன், 28 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 12


  1. கற்றும் நேர்பட வாழாதவன் இவ்வுலகில் இருந்து என்ன பயன்? கற்றவன் நல்லவனாய் இருக்கும் பொழுது மட்டுமே இவ்வுலகம் நல்லதாய் அமையும்.
  2. வசதி உள்ளவர்கள் வறுமையில் வாடுவோருக்கு உதவ வேண்டும். அதற்காகத் தான் அவர்களுக்கு வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
  3. எந்த நாட்டில் விவசாயி துன்பப்படுகிறானோ, அந்த நாடு விரைவில் பசியில் துடிக்கும்.
  4. நம்மில் பலருக்கு வாழ்த்த மனம் வருவதில்லை.வசை பாட மட்டுமே கற்றிருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்முடைய தவறுகள் நமக்கே புரியும். நம்மைச் சற்றே மாற்றிக் கொண்டால் வாழ்க்கை எவ்வளவு இனியதாய் மாறும்!
  5. எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் தவறு செய்யக்கூடும். அது மனித இயல்பு. சிலர் திருத்திக் கொள்கிறார்கள்; பலர் திருந்துவதில்லை.
  6. நம்மையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துவதிலேயே நமது காலத்தில் பாதி பயனில்லாமல் கழிகிறது.
  7. காந்தியின் எளிமை குறித்துப் பெருமைப் படுகிறோம். வாய் கிழிய மேடையில் முழங்குகிறோம். ஆனால், காந்தி போல எளிமையாக வாழ்வதற்கோ, உண்மை பேசுவதற்கோ நாம் முயற்சி செய்வதில்லை.
  8. சொல் ஒன்றாய், செயல் வேறொன்றாய் போலியாய் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம், நாமாக என்று வாழப் போகிறோம்?
  9. இன்சொல், பேசுபவருக்கும், கேட்பவருக்கும் மகிழ்ச்சி தரும். இதயங்களை நெகிழ வைக்கும். நல்லுறவைச் சாத்தியமாக்கும்.
  10. எந்தப் பொருளைப் பயன்படுத்தும் பொழுதும் சிக்கனம் வேண்டும். நீரோ, மின்சாரமோ, சமையல் எரி வாயுவோ எதுவாக இருந்தாலும் சரியே. அப்பொழுது தான் எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாய்க் கிடைக்கும். 




புதன், 27 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 11


  1. எவ்வளவுதான் மனதிற்குக் கடிவாளமிட்டாலும், சிலரைப் பார்க்கும்பொழுது வெறுப்புணர்வு பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது. தவறு எனத் தெரிகிறது. ஆனால் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறோம். இன்னமும் நம் மனங்கள் பக்குவப்படவில்லை. இன்னும் நாம் நம் மனங்களை அதிகப்படியான அன்பால் நிரப்பிக் கொள்ள வேண்டியுள்ளது.
  2. யோகா பயில்கிறார்கள்; தியானம் செய்கிறார்கள்; நீதி நூல்கள் படிக்கிறார்கள்; உபதேசம் கேட்கிறார்கள். ஆனாலும் அவர்களால் சினத்தை அடக்குவதற்கு முடியவில்லை. பெற்ற பயிற்சியால் பயன் என்ன?
  3. எதிலும் குறை காண்பதும், எதையும் எதிர்மறையாய் அணுகுவதும் நல்ல உறவுக்கு வழி வகுக்காது.
  4. உறவுச் சிதைவுக்குக் காரணம் அதிக எதிர்பார்ப்புகள், புரிதல் இல்லாமை, விட்டுக் கொடுக்காமை மற்றும் மனம் விட்டுப் பேசாமை.
  5. படித்தால் மட்டும் போதாது; படித்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதலும், அதன்படி நடத்தலும் மிக மிக முக்கியம்.
  6. சண்டை போட்டுக் கொள்வது மிகவும் சுலபம். சமாதானமாக வாழ்தல் கடினம். அசாத்தியமான பொறுமையும், மனப் பக்குவமும் இருந்தால் மட்டுமே பின்னது சாத்தியமாகும்.
  7. தோண்டினால் பூமி பொறுத்துக் கொள்கிறது. மாறாக, நீர் தருகிறது; கனி வளங்களை வாரி வழங்குகிறது. பூமியிடமிருந்து நாம் நிரம்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  8. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவன் வாழ்வில் ஏமாற்றங்களே மிஞ்சும்.
  9. சிறியது என்று எதையும் இகழாதே. சிறியதிலும் சிறந்தது இருக்கக் கூடும்.
  10. ' இல்லையே' என ஏங்காதீர். உம்மிலும் ' இல்லாரை' எண்ணிப் பார்த்தால், உங்கள் ஏக்கம் விலகும்.

  

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 10

  1. ஒரு இலக்கை அடைய பல பாதைகள் இருந்தாலும் அதில் நேர் பாதையைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.
  2. இன்று மழை வரவில்லை என்பது உழவனுக்கு ஏமாற்றம் தான். அதற்காக அவன் ஒரே அடியாக மனம் உடைய வேண்டியதில்லை. அவன் செய்ய வேண்டியதெல்லாம் நாளை மழை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பது தான்.
  3. நாம் பிறரிடம் குற்றம் காண்பதிலேயே நிறைய நேரம் செலவழிக்கிறோம். நமக்குள் உள்ள குறைகளைக் கண்டு கொள்வதுமில்லை. ஒப்புக் கொள்வதுமில்லை. திருத்த முயல்வதுமில்லை.
  4. குழு மனப்பான்மை என்பது  மனிதர்களுக்கு இடையே முகிழ்க்கும் நல்ல உறவுகளை முறித்துவிடும். மனித நேயத்தை குலைத்து  விடும்.
  5. எந்த ஒரு பகுதியிலும் ஒரு சிலரே பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் அச்சத்தால் அவர்களை விட்டு விலகி ஓடுகிறார்கள். அந்த ஒரு சிலர் வைத்ததே சட்டமாகி விடுகிறது.
  6. தேர்வில் தோற்றுப் போனால் தற்கொலை ஒன்று தான் தீர்வா? தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெல்வதில்லையா? உலக வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தோமானால் பல சாதனையாளர்கள் தேர்வுகளில் தோல்வியுற்ற செய்திகளைக் கண்ணுறலாம்.
  7. யாரும் உங்களை விட்டு விலக காரணமாக இருக்காதீர்கள். அனைவரையும் அன்போடு அரவணைத்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.
  8. ஒருவன் உயர, உயரப் பணிவு வர வேண்டும். அது தான் அறிவின் ஆரம்பம்.
  9. ஒருவன் எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், உயர் பதவி வகித்தாலும், அடக்கம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் செய்தால், அவனை அறிவுடையோர் மதிக்க மாட்டார்கள்.
  10. நல்ல பேச்சுக்கு ஆர்ப்பாட்டம் அவசியமில்லை.அடக்கமே அதன் அணிகலன். 


திங்கள், 25 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 9

  1. சேராத இடம் சேர்ந்தவர்கள் எவரும் வாழ்க்கையில்  கரை சேர்ந்ததாக வரலாற்றில் பதிவு இல்லை.
  2. நல்லோர் சொல் கேள். அவர் பக்கம் நில். அவர்கள் வகுத்த பாதையில் செல். வாழ்க்கையில் வெல்.
  3. சொல் ஒன்று; செயல் வேறு என்ற ரீதியில் வாழ்வோர் எவரும் வாழ்வில் உயர்ந்ததாக வரலாறு இல்லை.
  4. முதுமையைப் பார்த்து இளமை பரிகசிக்கும். முதுமையோ இளமையைப் பார்த்துப் பரிதாபப்படும்.
  5. இளமை கூறியது, "நான் எவ்வளவு அழகாகவும், பலசாலியாகவும் உள்ளேன் பார்த்தாயா? " முதுமை அடக்கத்தோடு சொன்னது, "நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்." புரிந்துகொண்ட இளமை தலை குனிந்தது. 
  6. பேரண்டப் பெரு வெளியில் நாம் ஒன்றுமே இல்லை என்பது அறிந்தும் நம்மால் தற்பெருமை, மமதை, அகங்காரம், வீண் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியவில்லையே!
  7. ஓராண்டு வாழ்ந்தாலும், நூறாண்டு வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதே பிறவி எடுத்ததன் பயனாகும்.
  8. ஒரு வயதான மூதாட்டிக்கு சாலையைக் கடக்க ஒருவன் உதவினால், அவன் அந்த நாளை பயனுள்ள நாளாக வாழ்ந்தவனாகிறான்.
  9. வெளிச்சம் வர இருள் விலகும். கதிரொளி பட்டதும் காலைப் பனி காணாமல் போகும். அது போல் தான் துயரங்களும். காலம் தரும் ஒத்தடத்தில் கரைந்து போகும். 
  10. நல்லவர்களைப் பாராட்டுங்கள். இன்னும் நல்லது செய்வார்கள்.



   

சனி, 23 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-8


  1. திறந்து வைக்கப்பட்டுள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் காகிதங்கள், பைகள் போன்ற வேண்டாத பொருள்களைப் போடுபவர்கள் சமூகக் குற்றவாளிகள்.  மழைக் காலங்களில் சாக்கடைகள் அடைபடுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு அவர்களே காரணம்.
  2. சாதாரணமாகச் சொன்னாலோ அல்லது வேண்டிக் கொண்டாலோ யாரும்  எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதனால் தான் கண்ணதாசன்  "ஜனநாயகத்தை விடுத்து, சற்றே கையில் சவுக்கு எடுப்போம்" என்று பாடிச் சென்றார்.
  3. தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்கள் வாழ்த்த வேண்டும். வெற்றியாளர்கள் அடக்கத்தோடு எல்லோரையும் பாகுபாடின்றி  நடத்த வேண்டும். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர்க்கொருவர்  பிறந்த நாள் வாழ்த்துக் கூற வேண்டும். எல்லோரும் எல்லோர் வீட்டு  விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் வருமா அந்த  நயத்தக்க நாகரிகம்?
  4. பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ன தான் புறத் தோற்றத்தில் விலங்குகளிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அவனின் உள் மனதில் இன்னும் விலங்கு உணர்வுகளே நிரம்பியுள்ளன.
  5. ஆசை போட்டியை ஏற்படுத்துகிறது; பொறாமையை வளர்க்கிறது; வெறுப்பை  உருவாக்குகிறது; மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முடிவில் மன அமைதி  வெளியேறுகிறது; உடல் நலம் கெடுகிறது; வாழும் நாட்கள் குறைகின்றன. அதனால் தான் அன்றே புத்தன் சொன்னான், 'ஆசையை ஒழி' என்று.
  6. நேர்மறையாக எண்ணுங்கள். மனிதர்கள் யாவரும் நல்லவர்கள்.    இனியவர்கள். உங்கள் தோழர்கள். ஐயக் கண்ணால் யாரையும் பார்க்காதீர். யாவரையும் அன்போடு அணுகுங்கள். சூழ்நிலைத் தவறுகளை பெரிய  மனதோடு மன்னியுங்கள். புல், பூண்டு முதல் மனிதர் வரை எல்லோரையும்  நேசியுங்கள். உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்; வாழ்க்கை வசந்தமாய்  சிரிக்கும்.
  7. மழையைக் கண்டு மகிழாதவன் நெஞ்சில் ஈரமில்லாதவன்.
  8. நாள் முழுதும் உண்மையாக உழைப்பவன் மட்டுமே உண்ணவும் உறங்கவும்  தகுதி உடையவன்.
  9. தவறு செய்வது மனித இயல்பு. அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது அறிவுடைமை அல்ல.
  10. மழைக்காக உழவன் இறைவனை வேண்டுகிறான். மண்பானை செய்பவனோ மழை பெய்யக் கூடாது என இறைஞ்சுகிறான். என்ன செய்வான் இறைவன், பாவம்!

 
    

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-7


  1. உருப்படாதவன் என்று யாருக்கும் அவசரப்பட்டு பட்டம் சூட்டி விடாதீர்கள். அவனுக்குள்ளும் ஏதாவது திறன் ஒளிந்து இருக்கலாம். அதைக் கண்டறிந்து அவனுக்கு முறையான பயிற்சி அளித்தால், அவன் உயர்நிலைக்கு வருவான். சற்று காலம் பிடித்தாலும் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து உழைத்தால்  வெற்றி நிச்சயம்.
  2. அடித்தாலும், இடித்தாலும், ஏளனம் செய்தாலும், எள்ளி நகையாடினாலும், வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்தாலும் கொண்ட கொள்கையிலிருந்து  பிறழாமல் உண்மை வழியில் நடப்பதன் பெயர்தான் காந்தியம். 
  3. நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்பதற்காக நீதி நெறிகளை கேலி செய்தல் என்பது அறிவுடைமை அல்ல. நம்மை அளவீடாகக் கொண்டு நாமே உலகத்தை அளத்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.
  4. வெளியே தெரியாமல் மரத்திற்காக நீர் சேகரிக்கிறது வேர். வேர் போன்று சில நல்லவர்கள் அமைதியாக, விளம்பரமில்லாமல் சமுதாயத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சில அற்பப் பதர்கள் மட்டுமே சிறிய சிறிய விசயங்களுக்காக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்; தற்பெருமை  பேசுகிறார்கள்; ஆர்ப்பரித்து, அமர்க்களம் செய்கிறார்கள்.
  5. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதை வகுப்பு  நடத்துபவர்கள், தாங்கள் ஆற்றும் பணிக்கு வெகுமதி இல்லையே, விளம்பரம்  இல்லையே, யாரும் பாராட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள்;   அவதிப் படுகிறார்கள்; விரக்தி அடைகிறார்கள்.
  6. இடிப்பதாலோ, அடிப்பதாலோ யாரும் உண்மையில் திருந்துவதில்லை. தாமே தாம் செய்வது தவறு என உணரும் பொழுது மட்டுமே ஒருவரால் உண்மையில்  திருந்த முடியும். ஆக, திருத்தம் என்பது உள்ளிருந்து முளைவிட வேண்டும்.
  7. ஒரு உணவகத்திற்குச் சென்று நூறு, இருநூறு உரூபா செலவழித்து உணவு அருந்துகிறோம். ஆனால், நம்மில் பலர் உணவு பரிமாறியவருக்கு இரண்டு உரூபா கூடக் கொடுப்பதில்லை. பணமிருந்தும் கொடுக்க மனம் இருப்பது  இல்லை. ஒருவேளை அந்தத் தோழர் பகுதி நேரக் கல்லுரி மாணவராகக் கூட இருக்கலாம். தயவு செய்து அவருக்கு உதவுங்கள்.
  8. அரசு மருத்துவ மனை வளாகத்தில் எச்சில் துப்புகிறோம். புகைக்கிறோம்.     இரைச்சல் போடுகிறோம். நோயாளிகளை நாம் சற்றும் நினைத்துக் கூட    பார்ப்பதில்லை. நாமே சுகாதார சீர்கேட்டை உண்டாக்கலாமா? மருத்துவ    மனைகள் தூய்மையாக இருக்க நாம் உதவ வேண்டும்.
  9. கிராமத்தில் பேருந்தில் ஏறியதும் வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும்  சிலரை கவனியுங்கள்.பயணம் முழுதும் வாயில் போட்டு குதப்பி விட்டு நகரில் வந்து இறங்கியதும் அழகான சாலையில் சிவப்பான தாம்பூலத்தை அனுபவித்துத் துப்புவார்கள். நம் நகரின் அழகையும், சுகாதாரத்தையும் நாமே பாழாக்குவது எவ்வகையில் நியாயம்? 
  10. நடைபாதை நாகரிகம் என்று ஒன்று உள்ளது.நடைபாதையில் நின்ற வண்ணம் ஊர்க் கதைகள் பேசிக்கொண்டு மற்றவர்கள் நடந்து செல்ல  இடையூறாக இருக்கக் கூடாது.



வியாழன், 14 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-6


  1. எடுத்தேன்;கவிழ்த்தேன் என்று செயல்படுதல் சர்வாதிகாரம்; நடைமுறைக்கு  ஒத்து வராத நாகரிகமற்ற ஆட்சி முறை.
  2. ஆசிரியர்களே! ஒரு குழந்தை வீட்டு வேலை செய்து வராவிட்டால் வானம் இடிந்து, விழுந்து  விடப் போவதில்லை. தண்டனைகள் மூலம் இளந்தளிர்களைக் கருக்கி விடாதீர்கள். அன்பு மூலம் மட்டுமே ஒரு குழந்தையை நம் வழிக்குக் கொண்டுவர இயலும்.
  3. மனிதப் பிறவி மிக உயர்ந்தது. ஆடு,மாடுகளைப் போல சாலையிலே அடிபட்டுச் சாவதற்காக நாம் இம்மண்ணில் பிறக்கவில்லை. செயற்கரிய செய்யும்பொருட்டு பிறந்திருக்கிறோம். எனவே எச்சரிக்கையோடும், பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகளையும் அவ்வாறு வாழக் கற்றுக்கொடுங்கள். உங்களை நம்பி உங்கள் குடும்பத்தில் பல பேர்கள் கனவுகளோடு காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
  4. நீ என்னவாக வேண்டுமானாலும் ஆவது உனது விருப்பம்; உனது உரிமை. பொறியாளர், மருத்துவர், வியாபாரி, விஞ்ஞானி, தொழிலதிபர், தொழிலாளி, ஓட்டுனர் இவற்றில் எது என்றாலும் சரியே. தேர்ந்து எடுத்த துறையில் திறமைசாலியாக இரு. அது தான் முக்கியம்.மற்றபடி, செய்யும் தொழிலில் கீழானது, மேலானது என்று எந்த வேற்றுமையும் இல்லை.
  5. எதிர்மறையாக எதைச் சொன்னாலும் அதைச் செய்து பார்க்க முனைவது குழந்தைகளின் இயல்பு. எனவே முடிந்தவரை குழந்தைகளிடம் எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
  6. குழந்தைகள் அப்பா,அம்மாவை உயர்வாகக் கருதுகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்னால் பெற்றோர்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது. குறிப்பாக,சண்டை போட்டுக் கொள்ளல் கூடாது.
  7. எப்போதும் நல்லவர்களுடன் இருங்கள். சில தற்காலிக சில்லரை லாபங்களுக்காக தீயவர் பக்கம் சாயாதீர்கள். அது, உங்களுக்கும் நல்லதல்ல; உங்களை உள்ளடக்கிய சமூகத்திற்கும் நல்லதல்ல.
  8. பணிவாக இருங்கள். பாசமாகப் பழகுங்கள். இனிமையாகப் பேசுங்கள். எல்லோரும் உங்களை நேசிப்பார்கள்.
  9. அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தற்காலிக வெற்றிகளை அடையலாம். அன்பினால் மட்டுமே நிரந்தர வெற்றிகளை ஈட்ட முடியும்.
  10. பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனாலும், ஒரு சில சுயநலவாதிகள் அவர்கள் மீது வன்முறையைத் திணிக்கிறார்கள்.

புதன், 13 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-5


  1. நேசிக்கும் தொழிலை தேர்ந்து எடு அல்லது தேர்ந்து எடுத்த தொழிலை நேசி.
  2. உன் தாத்தா தன் தொழிலில் கோடி,கோடியாக பணம் ஈட்டியிருக்கலாம். உன் அப்பா எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி இருக்கலாம். இரண்டிலிருந்தும் பாடம் படி. நீ முன்னேற பாதைகள் புலப்படும்.
  3. எப்பொழுதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இரு. அது உன் ஆயுளைக் கூட்டும்; நல்ல நண்பர்களை உருவாக்கும்.
  4. நாளை நமக்கு வெற்றி மாலைகளைச் சூட்டக் காத்திருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இன்று அதற்கு நம்மை தகுதியாக்கிக் கொள்வது மட்டுமே.
  5. அளவுக்கு மீறிய அறிவுரைகளும் உபதேசங்களும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
  6. உண்மையான நட்பு நீ துயரப்படும் பொழுது கண்ணீர் துடைக்கும். நீ சந்தோசிக்கும் பொழுது, பரவசப்படும்.
  7. படித்தவன் சூதும் வாதும் செய்தால் 'ஐயோ'வென்று போவான்' என்று சபிக்கிறார் பாரதி. ஆனால், அவன் ஐயோ என்றும் போகவில்லை; அம்மா என்றும் சாகவில்லை.மாறாக, ராஜ போகத்தில் வாழ்கிறான்.
  8. தலைக்கனம் ஆபத்தானது. அது ஒருவனை அதல, பாதாளத்திற்குள் அமிழ்த்து விடும்.
  9. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உள்ளனர், படித்தவர்களில் முட்டாள்கள் இருப்பதைப் போல.
  10. சுற்றுப்புறத்திலிருந்து ஒரு சிறிய குப்பையை நீக்குபவன் கூட தூய்மையான உலகை நிர்மாணிப்பதில் பங்கு கொள்கிறான்.


திங்கள், 11 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-4


  1. உன்னிடம் இருப்பதே உனக்குப் போதும். மற்றவனோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது மனநலக் கேட்டுக்கு இட்டுச் செல்லும்.
  2. மரம் மழை தருகிறது. நிழல் தருகிறது. மண் காக்கிறது. பறவைகளுக்கு வீடாகிறது. பயணிகளுக்கு நிழற்குடையாகிறது. நட்புணர்வோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கும் மரத்தை வெட்டலாமா?
  3. இலட்ச, இலட்சமாய் செலவழித்து சாலை அமைக்கிறார்கள். அது நம் சாலை. நமது வரிப் பணத்தில் அமைக்கப்பட்டது. அதில் கட்சிக் கொடிகள் நடவும் அலங்கார வளைவுகள் அமைக்கவும் குழி தோண்டி சாலையைச் சிதைக்கிறோம். இது நியாயமா?
  4. எச்சில் துப்பி, குப்பை கொட்டி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் திருத்துவதில் தவறேதுமில்லை.
  5. சொல்லித் திருந்தாத சில பிறவிகள் கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் மட்டுமே அச்சப்படுவார்கள்.
  6. நல்ல நண்பர்களைப் பார்க்கும்பொழுது, பேசும்பொழுது, சுக, துக்கங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் பொழுது நமது கவலைகள் எல்லாம் கதிரொளி பட்ட காலைப் பனி போல் ஓடி ஒளிந்து கொள்கின்றன.
  7. உண்மையான நட்பு சாதி,மத,இன வேற்றுமைகள் பார்க்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் அதற்கு இல்லை.துன்பத்திலும்,இன்பத்திலும் தொடர்ந்து வரும்.
  8. ஒவ்வொரு முறை உங்களுக்கு இலாபம் கிட்டும் பொழுதும் அதில் ஒரு சிறு பகுதியை நோயாளிகளின் மருத்துவத்திற்காகவோ, ஏழைகளின் கல்விக்காகவோ ஒதுக்குங்கள். உங்களைச் சுற்றி ஒரு நல்ல சமூகம் உருவாக அது வழிவகுக்கும்.
  9. நீங்கள் எப்பொழுதும், எதிலும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்ந்தால், உங்கள் குழந்தைகள் நல்ல குடிமக்களாக உருவாவர்.
  10. சோதனைகள் வரும் பொழுது வேதனைப்படுவது விவேகமல்ல. அவற்றிலிருந்து மீள்தல் பற்றிய வழிகளை யோசிப்பதே அறிவுடைமை.  

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-3


  1. கொடுப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது; ஈரமான மனமும் வேண்டும்.
  2. உறவுகள் வலுப்பட கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உண்மையான நேசம் வேண்டும். மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். ஒப்பீட்டைத் தவிர்க்க வேண்டும். சாதி,மதம்,பொருளாதார ஏற்றத் தாழ்வு இவை தாண்டி அன்பை மட்டுமே அளவீடாகக் கொள்ள வேண்டும்.
  3. சின்னச் சின்ன சில்லரைக் காரணங்களுக்காகப் பிரிதல் என்பது பக்குவமற்ற மனத்தையே காட்டும்.
  4. பொது நலச் சேவை  செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அருகி விட்டனர். ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  5. பை நிறைய ஊதியம் வாங்கியும் மனம் நிறையாததால் கையூட்டு வாங்குகிறார்கள்.
  6. வாழ்க்கை சிலருக்கு வசந்த மாளிகை. பெரும்பாலோருக்கு போர்க்களம். சிலர் மாளிகையில். பலர் குடிசைகளில். இன்னும் சிலரோ நடைபாதைகளில். இந்த ஏற்றத் தாழ்வு இருக்கும் வரை 'ஒன்று பட்ட தேசம்' என்பது வெற்றுக் கனவே.
  7. எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று சட்டம் சொல்வதைக் காட்டிலும் வேடிக்கை வேறொன்று இருக்க முடியாது.
  8. தோற்ற பிறகும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதிலிருந்து பாடம் படிக்காதவன் என்றுமே வெற்றி பெற முடியாது.
  9. எப்படி வெற்றி நிரந்தரம் இல்லையோ, அது போல தோல்வியும் நிரந்தரமல்ல. மீண்டும் வெல்லலாம்.
  10. பதவிக்கு வருவது என்பது பொது மக்களுக்கு உழைப்பதற்கே;தம் மக்களுக்கு அல்ல.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -2


  1. பாடுபட்டால் மட்டும் போதாது; படும் பாட்டில் ஈடுபாடு வேண்டும். அப்பொழுது தான் அதில் பலனிருக்கும்.
  2. நேற்றைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாது இருந்திருக்கலாம். அதையே நினைத்துப் புலம்பி இன்றைய வாழ்க்கையை துயரமாக்கிக் கொள்வது முட்டாள்தனம்.
  3. நேற்று விதைத்தது இன்று முளைக்காதது பற்றிக் கவலைப்படாதே. நாளை முளைக்கலாம். நாளை மறுநாள் முளைக்கலாம். அப்படியும் முளைக்காவிட்டால் மீண்டும் விதை. மீண்டும் மீண்டும் விதை. நம்பிக்கையும் தொடர் முயற்சியும் தான் வாழ்க்கை.
  4. பல முறை அடித்தும் அம்மி நகரவில்லையா? அடி போதவில்லை. மீண்டும் அடி.தொடர்ந்து அடி. ஏதோ ஒரு அடியில் அம்மி கண்டிப்பாய் நகரும்.
  5. இரவாமல் இருப்பது நன்று.இரந்தும் ஈயாமல் இருப்பது கொடுமை.
  6. தேவைகளைக் குறைத்துக் கொள். சேமிப்பதை தேவை உள்ளவனுக்குக் கொடு.
  7. உன் வழித்தோன்றல்களுக்கு நீ விட்டுச் செல்ல வேண்டியது பணமல்ல-ஒரு நல்ல பாரம்பரியம்.
  8. இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தானே தனக்கான புதைகுழியைத் தோண்டிக் கொள்கிறான்.
  9. ஒரு பக்கம் கடவுள் சிலைக்கு பாலாபிசேகம். மறுபக்கம் பாலுக்கு அழும் பாலகர்கள். இதன் பேர் தான் சமூக அநீதி.
  10. யாரையும் புண்படுத்தாமல் இருப்பதே உயர்ந்த பண்பாடு.

புதன், 6 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -1

  1. இதயங்கள் இணையும் பொழுது உறவுக்குப் பதியம் போடப்படுகிறது.
  2. மதியை இழக்கும் பொழுது விதி மீது நம்பிக்கை ஏற்படுகிறது.
  3. அறிவின் தொடர்ச்சி ஆக்கம். படிப்பின் தொடர்ச்சி படைப்பு.
  4. கத்தி எடுப்பது மட்டுமா வன்முறை? கடுஞ் சொல்லும் ஒருவகை வன்முறையே.
  5. வளர்பிறையும் தேய்பிறையும் வெறும் காட்சிப் பிழைகளே.
  6. நல்லது யார்க்கும் பணிவு. என்றும் வேண்டும் துணிவு.
  7. செல்வத்தில் சிறந்தது அறிவு. அறிந்ததில் வேண்டும் தெளிவு.
  8. கல்லாகிப் போன மண்ணில் காய்க்காது செடி கொடிகள்.
  9. இருளாகிப் போன மனதில் முளைவிடாது கற்பனைகள்.
  10. எண்ணங்கள் நல்லதானால் ஏற்றங்கள் ஓடி வரும்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

அது போதும்

குபேரனாகாட்டிப் பரவாயில்லை,
கூழாவது கிடைக்கணும்
ஒவ்வொரு நாளும் .
ராஜ வாழ்க்கை
கிடைக்காட்டிப் போகட்டும் ;
ராப்பட்டினி கெடக்காம
இருந்தாப் போதும். 

இதயத்தின் குரல்

'அது முடியாது'என்றது கர்வம்.
'அது ஆபத்தானது'என்றது அனுபவம்.
'அது அர்த்தமில்லாதது'என்றது அறிவு.
'முயற்சித்துப் பார்ப்போமே'என்றது இதயம்.
                                                                      -யாரோ 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மூன்று குறுங் கவிதைகள்

                            ஆசை
ஆசைப் படாத
மனம் வேண்டும்
என்பதே
என்னாசை
                              பற்று
பற்றறுக்க வேண்டும்
எனும் நினைப்பைப்
பற்றிக் கொண்டிருக்கிறேன்
கெட்டியாக.
                               எழுத்து
எழுத முடியவில்லை
எனும் என் இயலாமை பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
தற்சமயம்.

                             .




சனி, 2 பிப்ரவரி, 2013

எழுதுதல்

எழுத வேண்டுமெனப்
பீறிடும் ஆசை
வெகு நாளாய்.
எதை எழுதுவதென
தீர்மானிக்க இயலவில்லை.
எதைப் பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம் என்கின்றனர்
ஏற்கெனவே எழுதியவர்கள்.
என்றாலும்
அச்சமாய் இருக்கிறது,
யாரேனும் எழுதியதை
எழுதி விடுவேனோவென்று.