சனி, 28 ஜூலை, 2012

மலரட்டும் சமத்துவம்

மனிதனை மனிதன் நேசிக்கும்
மகத்துவம் மண்ணில் நிகழட்டும்.
புனிதன் காந்தி வழியினிலே
புதிய உலகம் அமையட்டும்.
இனிமை எங்கும் நிலவட்டும் .
இன்னாச் செயல்கள் ஒழியட்டும்.
கனியாய் வாழ்க்கை எல்லோர்க்கும்
காலம் முழுதும் இனிக்கட்டும்.


பெரியவர் சிறியவர் பேதமில்லை.
பிறவியில் அனைவரும் சரிசமமே.
அரியும் சிவனும் நமக்கொன்றே.
அல்லா ஏசு அது போன்றே.
மரியும் மாரியும் இரண்டல்ல.
மனிதர் தனித்தனி கூறல்ல.
சரிநிகர் சமமாய் வாழ்ந்திடுவோம்
சமத்துவம் எங்கும் மலர்ந்திடவே!

ஆறாம் அறிவைப் பெற்றிருந்தும்
அறிவிலி யாய்சிலர் வாழ்கின்றார்.
தேராச் செயல்கள் புரிகின்றார்.
தேய்ந்து வாழ்வில் உழல்கின்றார்.
மாறா எவர்க்கும் வெற்றியில்லை.
மருந்துக்குக் கூட வளர்ச்சியில்லை.
கூராய் அறிவைத் துணைகொண்டே
குறியாய்ப் பாரில் உயர்ந்திடுவோம்.

எத்தனை செல்வம் குவித்தாலும்
என்றும் பணிவு நன்றாகும்.
நித்திரை நீங்கி செயல்பட்டால்
நிம்மதி நாட்டில் பூப்பூக்கும்.
இத்தரை முழுதும் இனிதாகும்;
இன்மை என்பது அரிதாகும்.
பத்தரை மாற்றுப் பொன்னாக
பாரினில் தேசம் ஒளிர்ந்திடுமே!

கடந்தது போகட்டும் விட்டுவிடு.
கண்ணீர் வடித்து என்னபயன்?
நடப்பது நன்றாய் அமையட்டும்.
நாசங்கள் அடியோடு  ஒழியட்டும்.
அடக்கமா யிருப்பதில் தவறில்லை.
அடிமையா யிருப்பதே அவமானம் .
ஒடித்திடு தடைகளைக் காலத்தே.
உயர்ந்திடு உலகில் எப்போதும்!
 


திங்கள், 23 ஜூலை, 2012

திண்டாட்டம்

மழை வேண்டி
தவங் கிடக்கும்
உழவன்.
வேண்டாமென்று
இறைஞ்சும்
குயவன்.
இருவருக்கும்
இடையிலே
செய்வதறியாமல்
இறைவன்!

சனி, 21 ஜூலை, 2012

எரிச்சல்

'பாத்து நட'
தடுக்கி விழப் போன
என்னை
எச்சரித்தார் தாத்தா;
எரிச்சலாக வந்தது.

'பாத்து செலவு செய்யக்கூடாதா/?'
பிளாக்கில்
பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு
முப்பது கொடுத்து
சினிமா பார்த்ததற்கு
அறிவுரை கூறினார் அப்பா;
எரிச்சலாக வந்தது.

'பாத்துப் போ மகனே'
அசுர வேகத்தில்
பைக்கைக் கிளப்பியபொழுது
பதறினாள் அம்மா;
எரிச்சலாக வந்தது.

இன்று
இதையே நாங்கள்
எங்கள் மகனிடம்
சொல்லும்பொழுது
எரிச்சலாய் வருகிறது
அவனுக்கும்.  

உள்ளுக்குள்ளே

செதுக்காத வரைக்கும்
கல்லுக்குள்
சிலையிருப்பது தெரியாது.

பிழியாத வரைக்கும்
கரும்புக்குள்
சாறிருப்பது தெரியாது.

கடையாத வரைக்கும்
தயிருக்குள்
நெய்யிருப்பது தெரியாது.

எரியாத வரைக்கும்
மெழுகுக்குள்
ஒளியிருப்பது தெரியாது.

செயல்படாத வரைக்கும்
உனக்குள்
ஆற்றலிருப்பது தெரியாது.

வெள்ளி, 20 ஜூலை, 2012

கோபம் ....கோபம்.....கோபம்

கோபங்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் விதவிதம்.

கண்ணகியின் கோபம்
மதுரையை எரித்தது ;
கூடலனை கூடாக்கியது.
துரோபதையின் கோபம்
குருசேத்திரம் நிகழ்த்தியது.
சிவனின் ரௌத்திரம்
திரிபுரம் எரித்தது;
தக்கனின் யாகத்தை
தவிடு பொடியாக்கியது.

சிலரது கோபம்
வெற்று வெடி போல.
ஏழையின் கோபம்
சபிப்பதோடு முடிவுறும்.

சிலர் கோபத்திலும்
அழகாக இருப்பார்கள்.

மீசை துடிப்பது
ஒரு வகைக் கோபம்.
கண்கள் சிவப்பது
பிறிதொரு வகையாம்.

கோபத்தின் உச்சத்தில்
சிலருக்கு பேச்சு வராது.
சில சமயம்
மூச்சு நின்று விடுதல்
நிகழ்தலும் உண்டு.

சினிமாக் கோபக்காரர்களின்
கண்கள் பிதுங்கும்;
பற்கள் நற  நறக்கும்;
கழுத்து நரம்புகளில்
மின்னல் தெறிக்கும்;

கோபம் இருக்குமிடத்தில்
குணமிருக்கும் என்பது பழமொழி.
பணக்காரனின் கோபம்
சற்றே வலியது தான்.
எது எப்படியாயினும்
சிரித்தபடி கோபப்படுபவன்
சந்தேகமின்றி ஆபத்தானவனே

மனிதனுக்கே கோபமெனில்
படைத்த இயற்கைக்கு
இல்லாமலிருக்குமா
பொல்லாத கோபம்?
கடலின் கோபம் வெள்ளம்.
காற்றின் கோபம் புயல்.
பூமியின் கோபம் நடுக்கம்.

சேர்ந்தாரைக் கொல்லி என்றான்
சினந் தன்னை வள்ளுவன்.
சினப்பதற்கு முன்,மனிதா ,
சற்றிதை நீ சிந்தித்தல் நலமே!  .