புதன், 22 டிசம்பர், 2010

நிறுத்து அழுகையை

இழப்புகள்
அழுகையால்
சரியாகாது.

ஏழ்மை
புலம்பலால்
விலகிடாது.

கவலைகள்
கதறலால்
கரைந்திடாது.

வீழ்ச்சிகள்
நோவதால்
விடைபெறாது.

இறப்பென்ன
பார்க்காத
புது நிகழ்வா?

இழப்பென்ன
நடக்காத
அதிசயமா?

வாழ்வென்ன
வற்றாத
பேராறா?

நிறுத்து
அழுகையை!
உயர்த்து
கரங்களை!
துணிவு கொள்
நெஞ்சில்!
தொடர்ந்து நட
நேர்வழியில்!

தொகை தொகையாய்
தொடரும்
துயரங்கள்
பொடிப் பொடியாய்ப்
போகும்
விரைவில்.

நம்பிக்கை தான்
வாழ்க்கை!
அது தான்
புதிய வேதம்!
உள்ளத்தில்
பதிக்க வேண்டிய
இனிய கீதம்!

சனி, 18 டிசம்பர், 2010

மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்

அளவுக்கு மீறி உணவு ஊட்டினால், குழந்தையின் உடல் நலத்துக்கு ஊறு வந்து சேரும். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால், குழந்தையின் மனதிற்கு ஊறு வந்து சேரும்.

பூ போன்ற மனதில் புயல் வேகத்தில் எண்ணங்களைத் திணித்தால் பட்டுப் போவது குழந்தைகள் மட்டுமல்ல... தேசமும் தான்.

புத்தகங்களின் கனத்தால் குழந்தையின் மனம் அழுத்தப்படக் கூடாது.

பாடமானாலும் பாலானாலும் அளவறிந்து புகட்டுதலே அறிவுடைமை.

பாடப் பொருளோடு அன்பையும் குழைத்துக் கற்றுத் தரும் ஆசிரியரே குழந்தையின் உற்ற நண்பராவார்.

ஆசிரியரைப் பார்த்து குழந்தை அச்சப்படும் பொழுது அந்த இடத்தில் கற்பித்தல் தோற்றுப் போகிறது.

கல்வி சரியான காலத்தில், சரியான அர்த்தத்தில் புகட்டப்படாத பொழுது தான் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், வன்முறையாளர்களும், சமூக விரோதிகளும் நாட்டில் உருவாகிறார்கள்.

சாதி, மதம், நிறம், இனம், மொழி இவற்றைத் தாண்டி, எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கிற மனிதர்களை உருவாக்குவதே சரியான கல்வி முறை.

இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். அப்பொழுது தான் இந்த பூமியில் எப்பொழுதும் இயற்கை எழில் நிரம்பி வழியும்.

குழந்தையிடம் ஏராளமான ஆற்றல்களும் திறமைகளும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை முழு வீச்சில் வெளிக் கொணர்வது ஒரு சிறந்த ஆசிரியனின் கடமையாகும்.

குழந்தைகளுக்கு அன்போடு சேர்த்து, அறிவைப் புகட்டும் பொழுது, நாட்டிற்கு எல்லோரையும் நேசிக்கிற அறிவாளிகள் கிடைக்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு எல்லாம் தெரியும் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாத வண்ணம் ஆசிரியர்கள் தங்கள் அறிவை நாள்தோறும் விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

எப்பொழுதும் ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் தற்கால குழந்தைகளின் உள்ளங்களில் கேள்விகளும் ஐயங்களும் முளைத்த வண்ணம் உள்ளன.

குழந்தைகளின் வயது, மனது, ஈர்க்கும் சக்தி, உடல்நலம், தனிநபர் வேறுபாடுகள் ஆகிவற்றைக் கருத்தில் கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்களே கற்பித்தலில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு சராசரியான குழந்தையின் மனதில் அன்றைய பாடப்பொருளை வெற்றிகரமாகப் பதிய வைக்கும் ஆசிரியாருக்கு அன்றைய பொழுது அர்த்தமுள்ள பொழுதாக அமைகிறது. அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியை விட அவருக்கு வேறு எந்தப் பரிசும் தேவையில்லை.

பின் தங்கிய குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுதல் என்பது வறண்ட களர் நிலத்தை வளமான விளைநிலமாக மாற்றுவதற்கு ஒப்பாகும்.

கல்வி என்னும் அகல் விளக்கால் மட்டுமே அறியாமை என்னும் காரிருளை அகற்ற முடியும்.

கல்வி இல்லாத தேசத்தின் மீது வறுமையும் அறியாமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மூட நம்பிக்கைகளும் படையெடுத்துப் பாழ்படுத்தும்.

ஒரு கல்வி முறை வன்முறையாளர்களையும், தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் உருவாக்குமானால் அந்தக் கல்வி முறையை ஒழித்துக் கட்டுவோம்.

எந்தக் கல்வி முறை மனிதநேயம் மிக்க மனிதர்களை உருவாக்குமோ அந்தக் கல்வி முறையை மலர் தூவி வரவேற்போம்.

கல்வி தேர்ந்த மருத்துவர்களையும், திறமையுள்ள பொறியியலாளர்களையும், அறிவுக் கூர்மையுடைய விஞ்ஞானிகளையும், நல்ல மெய்ஞானிகளையும் உருவாக்கட்டும்; கூடவே, அவர்களை மனிதநேயம் மிக்கவர்களாகவும் மாற்றட்டும்.

தலை நிமிரச் செய்வதும், தன்மானம் ஊட்டக்கூடியதும், தன்னம்பிக்கை தழைக்கச் செய்வதும் வாழ்வதற்கான தகுதிகளை வளர்ப்பதும் உண்மையான கல்வியின் மேன்மையான நோக்கமாகும்.

வியாழன், 9 டிசம்பர், 2010

மானுடம் பாடிய குயில்

பாரதி-
இந்திய தேசக்கவி
நம் நேசக்கவி
வெளிவேச மனிதரின்
முகத்திரை கிழித்த
ஆவேசக் கவி.

மனிதனை
மனிதனே ஒதுக்கும்
இப்பாவ பூமியில்
“காக்கை குருவி எங்கள் சாதி”
என
எல்லா உயிரையும்
தன்னோடணைத்த
நேசமிக்க மகாத்மா.

கூழுக்காகவும்
மன்னவரின்
குதூகலத்திற்காகவும்
ஆளுக்காகவும்
ஆழாக்குப் பாலுக்காகவும்
பாட்டெழுதிய
கவிஞர் நடுவில்
இவன்
ஒருவன் மட்டுமே
மானுடம் பாடிய குயில்.
மனித ஜீவன்களுக்காக
ஜெபித்த ஞானாசிரியன்.

பண்டிதர்களின்
பாதாளச் சிறையில்
தண்டிக்கப் பட்ட
அன்னைத் தமிழை
பாமரரின்
செவிகளில் ஒலித்தவன்.
அதனாலேயே
இன்று
வகுப்பறையில்
மாணவன்
வண்டமிழை
அஞ்சாமல் கற்கிறான்.

பாரதியின் கவிதைகள்
வெறிச்சோடிப் போன
மனப்பாதைகளில்
வெளிச்சம் காட்டிய
விளக்குகள்
நிஜத்தின்
பிரவேச வாயில்கள்
உள்ளத் துடிப்புகளின்
பிரசவ சாலைகள்.

பாரதி
வெறும்
தமிழ்க்கவி மட்டுமல்ல
தாகூர் சுட்டிய
“குறுகிய உட்சுவர்” களை
கடந்து வெளிவந்த
தேசியக் கவி:
சர்வதேசக் கவி.
அதனால் தான்
பாரதம் முழுவதும்
பாரதியின்
பா ரதோற்சவம் நடக்கிறது
பொதுவுடைமை மண்ணிலும்
அவனின் புகழ்க்கொடி பறக்கிறது.

பாரதி
அடங்காத
பேராசை நோயில்
சிக்கி
அலைபாயும் மனதினர்க்கு
காணி நிலந்தன்னில்
கட்டாக வாழும் வித்தை
கண்டு தெளிவித்த
கண்கண்ட மருத்துவன்.
சுரண்டிக் கொழுத்து
சுகத்தில் மிதப்பவனை
அண்டிப் பிழைத்தும்
அடிமையின் பசி
அடங்காதது கண்டு
ஜெகத்தினை
அழிக்கக் கிளம்பிய
செந்தீக் கவிஞன்.

இந்த
தேசபக்திப் பாடகன்
பொன்னில் புரள
ஒருபோதும் நினைத்தவனில்லை
மாறாக
மண்ணில் விழுந்து
அன்னையின்
மடியில் புரண்டதாக
ஆனந்தித்தவன்.

காலங்காலமாக
யுக யுகாந்திரங்களாக
பிள்ளை பெறும்
வெறும்
பண்ணைகளாக இருந்த
பெண்களை
நாய் நிலையிலிருந்து
மீட்க
இவன் தன்
கவிதைச் சவுக்குகளை
சுழற்றிய பொழுது தான்
ஆணினத்தின்
எருமை மனங்களில்
வெட்கக் கோடுகள்
இழுக்கப்பட்டன
விவேக ரேகைகள்
மலரத் துவங்கின.

இந்த
ராஜாளிக் கவிஞனின்
ராட்சதச் சிறகுகள்
படபடத்த பொழுது
எழுந்த
உரிமை உணர்வுச் சூறாவளியில்
அடிமை மரங்களின்
சரிவுகள்
ஆரம்பமாகின.

சுற்றிலும் இருந்த
சமுதாயத்தை
உற்றுப் பார்த்துவிட்டு,
பேனாவில் இருந்த மையை
கீழே ஊற்றிவிட்டு
தன் ரத்தத்தை நிரப்பி
பாரதி
எழுதத் துவங்கிய பொழுது
“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாடலின்
பிரசவம் நிகழ்ந்தது
சத்தியமூர்த்திகளையே
நடுங்க வைத்த
இந்த
ருத்ரமூர்த்தி
இன்னும் இருந்திருந்தால்...
இலக்கியத்திற்காக
நோபல் பரிசு பெற்ற
இந்தியரின் எண்ணிக்கை
இரண்டாக
உயர்ந்திருக்கும்!

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வேண்டாமே தீண்டாமை!

*இது முட்செடி
அது முந்திரி
என
வேற்றுமை பார்த்தா
வீசுகிறது
காற்று?

*பாவியின்
நிலமென்றும்
பரிசுத்தவானின்
நிலமென்றும்
பாகுபடுத்திப் பார்த்தா
பொழிகிறது
மழை?

*கருப்பாயிருந்தாலும்
சிவப்பாயிருந்தாலும்
வெளுப்பாயிருந்தாலும்
படும்
ஒளியிடத்தில் உண்டா
ஓரவஞ்சகம்?

*இன்னார்க்கு
மட்டுமே
விளைவேன் என்று
மண்ணும்
இவர்கட்கு மட்டுமே
பெய்வேன் என்று
விண்ணும்
அடம் பிடித்ததை
யாரேனும்
கண்டதுண்டா?

*யார் நட்டாலென்ன,
முளைக்கவா
மறுக்கிறது
விதை?

*எல்லோர்க்கும்
அல்லவா
தாகம் தீர்க்கிறது
தண்ணீர்!

*இயற்கையில்
இயங்கும்
உறவின் தத்துவத்தை
எங்கோ
தொலைத்துவிட்டு
செயற்கையாய்
நமக்குள்
நெடிய சுவர்களை
எழுப்பிக் கொண்டோம்.

*மாக்களில்
உண்டா
தீண்டாமை?
வண்ணம் கொஞ்சும்
மலர்களில்
உண்டா
நெருங்காமை?
மாந்தரில் மட்டும்
ஏனிந்த
மனப்பான்மை?

*இது கணினி யுகம்
உலகின்
எதிர் எதிர் மூலைகளில்
வசிக்கின்ற
மனிதர்க்கு நடுவில்
நிறம் கடந்து
மொழி தாண்டி
இனம் விலக்கி
மதம் தப்பி
நெருக்கம் பூக்கும்
புதுமை யுகம்.

*மண்ணுக்குள்
புதைக்க வேண்டிய
கற்காலத் தீண்டாமையை
மனதிற்குள்
புற்றாய்
வளர்க்கலாமா?

*மதத்தைத்
தீண்டோம்
எனச் சொல்வோம்
அது தான்
மனதின் பக்குவம்.
சாதியைத் தீண்டோம்
எனச் சொல்வோம்
அதுவே
தமிழ் நாகரிகம்.
மனிதனைத் தீண்டோம்
என்போமானால்
அது மகா அநாகரிகம்.