புதன், 10 ஏப்ரல், 2013

சிந்தனை பத்து -17



  1. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு;  எரிச்சலின் நண்பன்; உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆதலினால், பொறாமை தவிர்ப்பீர்.
  2.   நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது. உன்னைச் சுற்றிலும் கெட்டவர்களே அதிகம் இருக்கும் போது, நீ வல்லமை படைத்தவனாக இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும்.
  3. சினத்தை ' சேர்ந்தாரைக் கொல்லி' எனச் செப்புகிறான் அய்யன் வள்ளுவன். சினம் இதயத்தை உடைத்துவிடும் என்கிறது மருத்துவ நூல். மன்னர்களின் சினத்தால் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சிதறி, சின்னாபின்னமாகின என்கிறது வரலாறு. நம் சினம் அடுத்தவர் மனதைப் புண்படுத்துகிறது. சினத்தினால் யாரும் இலாபம் ஈட்டியதாகச் செய்திகள் இல்லை. சினம் எதையும் சாதிப்பதும் இல்லை. ஆதலினால் சினம் தவிர்ப்பீர். 
  4. அள்ளிக் கொடுக்க நம்மிடம் அளவில்லாத அன்பு உள்ளது. நேசிக்க பரந்த மனம் உள்ளது. யோசிக்க அறிவு உள்ளது. பின் எதற்காக வன்முறை? ஏன் வெறியாட்டம்?
  5. எல்லோரும் நம் சகோதர, சகோதரிகள். மதம், சாதி, இனம் தாண்டி, மனிதர்களாக ஒன்றாக வாழ்வதை விட்டு விட்டு, வன்முறையால் ரத்தம் சிந்தலாமா? நன்முறைகளைப் போதித்த நீதி நூல்கள் எழுந்த தேசத்தில், வன்முறையின் கோர ஆட்சி நிகழ்வது சரியா? 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற மகத்தான உறவு முறை மலர்ந்த மண்ணில், எதற்கு கத்தி? எதற்கு தோட்டா? எதன் பொருட்டு வெடி குண்டு? அன்பைப் பரப்புவோம்; நட்புணர்வை வளர்ப்போம்; வன்முறையைத் தவிர்ப்போம்.
  6. உன்னிடம் பிறர்க்குக் கொடுக்க எதுவுமில்லை என்று வருத்தப்படாதே. கொடுக்க வேண்டும் என்ற மனம் உள்ளதல்லவா? அது போதும்.
  7. எந்நேரமும் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன் அமர்ந்து சுற்றுப் புறத்தையே மறந்து போன சின்னஞ் சிறு அரும்புகளே, கொஞ்சம் வெளியே வாருங்கள். என்ன அழகாகப் பூத்திருக்கின்றன மலர்கள்! அந்த வண்ண மலர்களின் மீது பூத்திருக்கின்ற சின்னச் சின்ன வண்ணத்துப் பூச்சிகளை பாருங்கள். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நடக்கும் மழை நெசவைக் கண்டு களியுங்கள். அதோ, கிழக்கு வானில் வானவில்!யாருக்காகக் காத்திருக்கிறது, ராமனுக்காகவா அல்லது அர்ச்சுனனுக்காகவா? இருவருக்கும் இல்லை. நீங்கள் ரசிப்பதற்காக மட்டுமே. துள்ளுகின்ற பசுக் கன்றுகளையும் தாவும் அணில்களையும் கீச்சிடும் பறவைகளையும் நோக்குங்கள். மெல்ல ரகசியம் பேசிச் செல்லும் காற்றின் மொழியை அனுபவியுங்கள். அதோ, அந்த நீல மலைகளைப் போர்த்தி நிற்கும் வெண் மேகங்களை தரிசியுங்கள். உங்கள் ரசனை விரியும். அறிவு பெருகும். இதயம் வலுவடையும். பார்வை கூர்மை அடையும். வாழ்நாள் கூடும். உங்களுக்கும் இயற்கைக்குமான உறவு வலுப்படும். வாருங்கள் குழந்தைகளே, வெளியே!
  8. பேருந்தில் நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்கும்பொழுது 'நன்றி' எனச் சொல்லிப் பாருங்கள்.....அவர் முகத்தில் தான் எவ்வளவு மலர்ச்சி! அன்று முழுதும் அவர் தனது பணியை மகிழ்ச்சியுடன் செய்வார் என்பது திண்ணம்.
  9. ஒரு குழந்தையிடம் 'நன்றி' கூறும் பொழுதும் 'வருந்துகிறேன்' என வருத்தம் தெரிவிக்கும் பொழுதும், அந்தப் பிஞ்சு மனதில் உங்களைப் பற்றி உயர்வான எண்ணம் உருவாகிறது. அது மட்டுமல்ல....நன்றி தெரிவிக்கும் பண்பாடும் வருத்தம் தெரிவிக்கும் நாகரிகமும் அந்தக் குழந்தையின் மனதில் பதியமாகின்றன.
  10. அதிகாரமாகச் சொல்லாமல், அன்பாகச் சொல்லிப் பாருங்கள்....எல்லோரும் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.