காந்தி கிராமப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்
பள்ளி ஆண்டு விழாவில் காந்தியத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த பொழுது அது
எத்தனை பேரைக் கவர்ந்ததோ தெரியாது ஆனால் பன்னிரண்டு ‘ஆ’ பிரிவு மாணவி
சௌந்தரவடிவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை. பொது வாழ்வில் தூய்மை,
கொண்ட கொள்கையில் பிடிப்பு, சத்தியத்திலிருந்து பிறழாமை, நேரந் தவறாமை, நேர்மை போன்ற
கருத்துக்கள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயின. காந்தியின் பிடிவாதம் அவளுக்கும்
பிடித்தமாய் இருந்தது. தடியடியோ, சிறைவாசமோ அவரை, கொண்ட கொள்கையிலிருந்து இம்மி
அளவு கூட பிறழச் செய்ய முடியவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியத்தைத்
தந்ததோடு, அந்த மாமனிதன் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோமே என்று பெருமையாகவும்
இருந்தது. ‘ரத்தம் சிந்தாத யுத்தம்’ என்ற சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு
அறிமுகப்படுத்திய அந்தப் பொக்கை வாய்க் கிழவனின் வாழ்க்கை முழுதிலும் அறத்தின்
சாரம் மட்டுமே நிரம்பி வழிந்ததாக அவள் உணரலானாள்.
பள்ளி ஆண்டு விழா முடிந்து வீட்டிற்கு சென்ற
சௌந்தரவடிவு மறுநாள் முதல் செய்ய வேண்டிய சில பணிகளை திட்டமிட்டுக்
கொண்டாள். அந்த வாரத்தின் இறுதியில் ஒத்த கருத்துடைய தன் சக தோழிகள் சிலருடன்
சேர்ந்து ‘காந்தி மன்றம்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தினாள். அது இயங்கத் தொடங்கிய
இடம் அவள் வீட்டு மொட்டை மாடி. அதற்காக தன் அப்பாவின் அனுமதியைப் பெற்றிருந்தாள்.
தன் மகளை நினைத்து பொன்வண்ணனுக்கு அளவில்லாத
பெருமை. ‘’இந்தச் சின்ன வயசுல இவளுக்குத்தான் காந்தியக் கருத்துக்களில் எவ்வளவு
ஈடுபாடு!’’ என்று அடிக்கடி வியப்பார். பொன்வண்ணன் ஒரு அரசாங்க அதிகாரி. வருவாய்த்
துறையில் முக்கிய பதவியில் பணிபுரிந்து வந்தார். ‘பொழைக்கத் தெரியாதவன்’ என்று
நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்படுபவர். சக அதிகாரிகளின் மதிப்பீட்டில், அவர்
நடைமுறைக்கு ஒத்துவராத, கிறுக்குத்தனமான சில கொள்கைகளை கட்டி அழுது கொண்டிருந்தார். பெரும்பாலான அதிகாரிகள்
அத்தகைய காலாவதியான கொள்கைகளுக்கு ஈமச் சடங்கு நடத்தி விட்டனர். அந்தப் பாவப்பட்ட
கொள்கைகள் பின்வருமாறு: நேர்மை, நாணயம், நியாயம், சத்தியம், உழைப்பு.
பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த
பொன்வண்ணனுக்கு இயற்கையாகவே அற உள்ளம் அமைந்திருந்தது. ஒட்டு மொத்தக் குடும்பமும்
அவருடைய ஒரு சம்பளத்தில் ஜீவித்து வந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும்
கல்லூரியில் பட்ட வகுப்பிலும் மூன்றாவது பெண்ணான சௌந்தரவடிவு பன்னிரண்டாம் வகுப்பிலும்
படித்துக் கொண்டிருந்தனர். அடுத்த ஆண்டு சௌந்தரவடிவை கல்லூரியில் சேர்க்க
வேண்டும்.
குடும்பச் செலவுகள், கல்லூரிக் கட்டணங்கள்,
பஸ் கட்டணம்,இதரச் செலவுகள் என்று பணம் தண்ணீராய்ச் செலவழிந்து கொண்டிருந்தது.
பிரமப் பிரயத்தனம் செய்து தான் ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட வேண்டி இருந்தது.
நேர்மையான அதிகாரியான பொன்வண்ணனுக்கு வாழ்க்கையைச் சமாளிக்க கடனாளி ஆவது தவிர்த்து
வேறு வழி புலனாகவில்லை. சாண் ஏற முழம் வழுக்கும் வாழ்க்கையில் ஒருவரால் வேறென்ன
செய்ய இயலும்? அலுவகத்தில் எல்லா வித நல நிதிகளிலும் கடன் வாங்கியாகி
விட்டது. வைப்பு நிதியிலிருந்தும் முன்பணம் எடுத்தாயிற்று. எப்போதோ வாங்கிப் போட்ட
ஐந்து சென்ட் காலி மனையையும் தங்கவில்லை. மனைவிக்கு கல்யாணத்தின் பொழுது போட்ட
கொஞ்ச நகையும் அடமானத்தில். அப்படியும் போதாமல் பொன்வண்ணன் மூன்று வட்டிக்கு பணம்
புரட்டி இருந்தார். இத்தனைக்கும் அதிகம் ஆசைப்படாத மகள்கள். சிக்கனமாகக் குடும்பம்
நடத்தும் மனைவி. எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகலாம் என்ற நிலையில் தான்
அவர்களின் வாழ்க்கைக் கப்பல் ஓடிக் கொண்டிருந்தது.
அலுவலகத்தில் சகப் பணியாளர்கள் எப்பொழுதும் கலகலப்பாக
அரட்டையடித்துக் கொண்டிருக்க, பொன்வண்ணன் மட்டும் ‘’என் கடன் பணி செய்து
கிடப்பதே’’ என மாங்கு,மாங்கென்று வேலை செய்து கொண்டிருப்பார். அவர்களின் வாரிசுகள்
அநேகமாக பொறியியல், மருத்துவம், மற்றும் கணினியியல் படித்துக் கொண்டிருந்தார்கள்.
திருமணம் போன்ற விசேசங்களுக்கு வரும்பொழுது அவர்களின்
மனைவியரும்,குழந்தைகளும் ஆடம்பரமான
உடைகளுடனும்,நவீனபாணி நகைகளுடனும் அமர்க்களமாக காட்சியளிப்பார்கள். உணவு
விடுதிகளில், திரை அரங்குகளில், விசேச நாட்களில் மதுக் கடைகளில் பணத்தை வாரி
இறைப்பார்கள். அவர்களில் யாரும் கடன் வாங்கியதாகவோ, காலி மனைகளை விற்றதாகவோ,
நகைகளை அடகு வைத்ததாகவோ பொன்வண்ணன் ஒருநாளும் கேள்விப்பட்டதில்லை. எப்படி
அவர்களுக்கு பணம் வந்து குவிகிறது என்று அரசல், புரசலாக அவருக்கு செய்திகள் வரும்.
‘’சீ..நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’’ என்பதாகக் கருதி அவற்றை ஒதுக்கி
விடுவார். இவ்வளவு பெரிய நாணயஸ்தரும் கூட வாட்டி ‘வளவு’ எடுத்த
பொருளாதார நெருக்கடியில் கொஞ்சம் சபலத்திற்கு ஆளாக நேர்ந்தது.
ஒரு நாள் மதியம் பொன்வண்ணன் தன் நண்பர்
ஒருவருடன் தனி அறையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சொந்த விசயங்களை
பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமான நண்பர். ‘’கடவுள் ரொம்பவும் சோதிக்கிறாரப்பா.
ஒவ்வொரு மாதமும் கடைத்தேறுவதற்குள் கண்ணாமுழி இரண்டும் நட்டுப்போகுது.’’ என்று
அங்கலாய்த்துக் கொண்டார் பொன்வண்ணன். ‘’ நீயே கஷ்டங்களை வருவிச்சுக்கிட்டு, அப்புறம்
புலம்பி என்ன பயன்? மற்றவங்க மாதிரி கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பாரு...கஷ்டங்கள்
எல்லாம் பஞ்சாய்ப் பறந்துரும். நட்டமா நின்னு ஒடிஞ்சி போறத விட நாணலைப் போல வளைஞ்சி போவதே
அறிவுடைமை. நமது அலுவலகத்தில் நிறையப் பேர் தேவையானவர்களுக்கு வேண்டியதைச் செய்து
கொடுத்து கனத்த பைகளோடு வீட்டிற்குப் போகிறார்கள். வீட்டில் அவர்களுக்கு ஏக
மரியாதை. நேர்மையா இருந்து பெருசா என்ன சம்பாதிச்சிருக்கே, கடனாளிங்கற பட்டத்தைத்
தவிர?
ரொம்ப நல்லவனா இருப்பது எப்பவுமே ஆபத்து.’’
என புத்திமதி(?) கூறினான் நண்பனாகப்பட்டவன். அவனும் கூட ஒரு புது அபார்ட்மென்ட்
வாங்கி இருப்பதாக அலுவகத்தில் பேசிக்கொள்வது அவர் காதுக்கும் எட்டியிருந்தது.
நண்பனின் புத்திமதி அதை உறுதிப்படுத்தியது. ஏனோ அவனுடைய பேச்சு திரும்பத் திரும்ப
அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது.
நண்பன் மட்டுமல்ல, காலையில் அவரிடம் வந்த ஒரு
வியாபாரியும் பொன்வண்ணனின் மனதில்
கல்லெறிந்துவிட்டுப் போயிருந்தார். அந்த வியாபாரி அவரிடம் மிகவும் பணிவாக,’’ ஐயா,
என் தொழில் சம்பந்தப்பட்ட கோப்பு ஒன்று உங்கள் மேஜையில் உள்ளது. அதில் நீங்கள்
கையெழுத்துப் போட்டீர்களானால், உங்களுக்கும் மேலதிகாரி எனக்குச் சாதகமாகச் செய்து
கொடுப்பதாக வாக்களித்துள்ளார். உங்களுக்குள்ள பங்கைக் கொடுத்துவிடுகிறேன்.’’ என்று
மெதுவான குரலில் விண்ணப்பித்தார். ‘’முதலில் வெளியே போங்கள். நான் நீங்கள்
நினைக்கிற ஆளில்லை.’’ என்று பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி தலையைத் தொங்கப்
போட்டபடி வெளியேறினார். ஆனால், மதியம் நண்பனின் புத்திமதியைக் கேட்டதற்குப் பிறகு
பொன்வண்ணனுக்கு வியாபாரியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரே குழப்பமாய்
இருந்தது. தலை விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.
பொன்வண்ணன் வீட்டிற்குச் சென்ற பொழுது மணி
ஆறரை ஆகியிருந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும் கல்லூரியிலிருந்து ஏற்கனவே
வந்திருந்தனர். அவர் அப்படியே நாற்காலியில் சாய்ந்து கொண்டார். உள்ளிருந்து வந்த
மனைவி,’’ ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க?’’ என்றாள் கவலை மிக. ‘’லேசாத் தலைவலி.
கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்.’’ என்றார் பொன்வண்ணன். அதற்குள் மூத்தவள்
அமிர்தாஞ்சனம் எடுத்து வந்து நெற்றியில் மெதுவாய்த் தடவ, இரண்டாமவள் ஒரு குரோசின்
மாத்திரையை நீட்டினாள். அந்த அன்பில் அப்படியே உருகிப் போனார் அந்த தந்தை. அவருடைய
கவலைகள் எல்லாம் காணாமல் போயின. சாத்தான் செத்துப் போனான். அந்த வியாபாரியும்
அவரின் நண்பரும் அந்தக் கணத்தில் தொலைந்து
போயினர். ‘அப்பா’ என்றபடி மூன்றாவது மகள் சௌந்தரவடிவு உள்ளே வந்தாள். அவள்
கையில் லூயி ஃ பிஷர் எழுதிய ‘காந்தி வாழ்க்கை’ என்ற மொழி பெயர்ப்பு நூல் இருந்தது.
கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததற்காக பள்ளியில் கொடுத்தார்களாம். ‘’சரியான
புத்தகத்தைத் தான் உனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்
அந்த அன்பான அப்பா. பிறகு சண்முகவடிவு புத்தகப் பையை மேசையின் மீது வைத்துவிட்டு
சமையல் அறையிலிருந்த அம்மாவிடம் சென்றாள்.
அம்மா கொடுத்த இரண்டு கோப்பை காஃபியில்
ஒன்றைத் தான் வைத்துக்கொண்டு இன்னொன்றை அப்பாவிடம் நீட்டினாள் சௌந்தரவடிவு.
இருவரும் பருகி முடித்தபொழுது, ‘’சார், சார் ‘’ என்று யாரோ வாசற் கதவைத் தட்டும்
சப்தம் கேட்டது. சௌந்தரவடிவு கதவைத் திறக்க, “அய்யா இருக்காரா? பார்க்க வேண்டும்”
என்றார் கதவைத் தட்டியவர். “உள்ள வாங்க” என்ற சௌந்தரவடிவைத் தொடர்ந்து உள்ளே
வந்தவரைப் பார்த்துத் திகைத்துப் போனார் பொன்வண்ணன். வந்தவர் வேறு
யாருமல்ல..காலையில் அலுவலகத்திற்கு வந்த அதே வியாபாரி தான். சௌந்தரவடிவு
அம்மாவிடம் சென்று விட்டாள். “உட்காருங்க”
என பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். “என்
வீடு உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார் பொன்வண்ணன். “உங்கள் நண்பர் தான் உங்கள் முகவரியைக் கொடுத்து
உங்களை வீட்டில் பார்க்கச் சொன்னார். அலுவலகத்தில் மனம் விட்டுப் பேச முடியவில்லை.
இங்கு வந்தது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தொழிலில் பல லட்சங்கள்
முடக்கியுள்ளேன். என்னுடைய கோப்பில் நீங்கள் எனக்குச் சாதகமாக கையொப்பம்
இட்டீர்களானால், உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. உங்கள் சன்மானத்தில் ஒரு
பகுதியை முன் தொகையாக இந்தக் கவரில் வைத்துள்ளேன். மீதியைக் காரியம் முடிந்த பிறகு
தருகிறேன்.” என்று கூறி, ஒரு பெரிய கவரை மேசையின் மீது வைத்தார் அந்த வியாபாரி.
ஒரு கணம் பொன்வண்ணன் அதிர்ந்து போனாலும் கவரை
வேண்டாமென்று மறுக்கவில்லை. எடுத்துக் கொள்ளலாமா என்று ஒரு சின்னச் சபலம்.
பொழைக்கத் தெரியாதவன் என்ற பட்டத்தை துறந்து விடலாமா என்றொரு தடுமாற்றம்.
சாத்தானின் கை ஓங்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், புயலாக அங்கு வந்தாள்
சௌந்தரவடிவு. அப்பாவின் எதிரில் இருந்த கவரை எடுத்து அந்த வியாபாரியிடம்
கொடுத்துவிட்டு பேசத் தொடங்கினாள். “அய்யா, நான் அதிகப் பிரசங்கித்தனமாகப்
பேசுவதாக நினைக்காதீர்கள். உங்களைப் பார்த்தால் படித்த பெரிய மனிதரைப் போலத்
தோன்றுகிறீர்கள். ஆனால் உங்கள் செய்கை அப்படி இல்லை. எங்கப்பா ஒரு கையெழுத்துப்
போட்டால் ஒரு பெரிய தொகை தருவீர்கள். இன்னும் பல பேருக்கு கையெழுத்துப் போட்டால்
பல லட்சங்கள் கிடைக்கக் கூடும். கல்லூரிக் கட்டணங்களைக் கட்டிவிடலாம். அம்மாவின்
நகைகளை மீட்டு விடலாம். காலி மனை வாங்கலாம். எல்லாம் சரிதான். ஆனால் எங்கள்
அப்பாவின் இழப்பு என்ன தெரியுமா? இது வரை அவர் கட்டிக் காத்து வந்த
நேர்மை...குடும்பப் பாரம்பரியம்...எல்லோர் மத்தியிலும் தலை நிமிர்ந்து நடக்கும்
கம்பீரம். எங்களின் இழப்பு என்ன தெரியுமா? நேர்மையாளர் பொன்வண்ணனின் மகள்கள்
என்னும் பெருமிதம், கேவலம், ஒரு சில ஆயிரங்களுக்காக இவ்வளவையும் நாங்கள் இழக்க
வேண்டுமா? கல்லூரிப் பட்டம் கிடைக்காவிட்டால் போகட்டும். நேர்மையான அதிகாரி
பொன்வண்ணனின் மகள்கள் என்ற பெயரே எங்களுக்குப் போதும்.” “அம்மா, நான் சொல்வதைச்
சற்று.....” என்று ஆரம்பித்த வியாபாரியை இடைமறித்த சௌந்தரவடிவு, “ அய்யா, நான்
தவறாகப் பேசியிருந்தால் மன்னியுங்கள். நாங்கள் அமைதியாக, அறவழியில் மகிழ்ச்சியோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வாழ்க்கை இனியும் தொடர தயவுசெய்து
அனுமதியுங்கள்.” என்று வேண்டினாள்.
சௌந்தரவடிவின் பேச்சு அந்த வியாபாரியை
அசைத்திருக்க வேண்டும். அவர் உடனே அவளை நோக்கி, “ அம்மா, சின்ன வயசானாலும்
அறிவுபூர்வமாகப் பேசுகிறாய். என் தவறு எனக்குப் புரிகிறது. தவறு செய்யாதவர்களை
தவறு செய்யத் தூண்டுவது மிகப் பெரிய தவறு என்றொரு பாடத்தை இன்று கற்றுக் கொண்டேன்.
எனக்கு வரவேண்டிய தொகை விதிகளின்படி மெதுவாக வரட்டும். நீங்கள் இத்தகையதொரு
தந்தையைப் பெறவும் உங்கள் தந்தை உங்களை மகள்களாகப் பெறவும் தவம் செய்திருக்க
வேண்டும்.” என்று வாயார வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.
பொன்வண்ணன் தன் மகளைக் கட்டிப் பிடித்துக்
கொண்டு சின்னக் குழந்தை போல கேவிக்,கேவி அழுதார். “ நீ என் தெய்வம் அம்மா! தப்புச்
செய்ய இருந்த என்னைக் காப்பாற்றிய உன்னைக் கும்பிடணும் போல இருக்கம்மா.” என்று
தேம்பியவரை “ என்னப்பா, பெரிய,பெரிய வார்த்தைகளைச் சொல்லறீங்க. உங்களால் எப்பவுமே
தப்புப் பண்ண முடியாதப்பா” என்று தேற்றினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த
சௌந்தரவடிவின் தாய் மற்றும் சகோதரிகளின் கண்கள் கசிந்தன. சுவரில்
மாட்டப்பட்டிருந்த படத்திலிருந்து மகாத்மா தம் புன்னகையால் அவர்களை
ஆசீர்வதித்தார்.