செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பறவையும் மரமும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இரை தேடிவிட்டு இரவு திரும்பிய பறவையிடம் மரம் வருத்தத்தோடு சொன்னது, " இன்னும் இரண்டு நாட்களில் என்னை அடியோடு வெட்டப் போகிறார்களாம். அதிகாரிகள் பேசிக் கொண்டார்கள். சாலையை அகலப்படுத்தப் போகிறார்களாம்." இதைக் கேட்ட பறவையின் கண்களில் நீர் வழிந்தது. அதைப் பார்த்த மரம், "வருத்தப்படாதே, நண்பனே. வெட்டுப்படுவது எங்களுக்கு வாடிக்கை. காலையில் விரைவாக எழுந்து வேறு மரத்திற்குச்  சென்று விடு. போகும்பொழுது என் சருகுகளையும் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு போ. கூடு கட்ட உதவும். இந்தா, பழம் சாப்பிடு " என்று கூறி கனிவோடு தன் கனிகளைக் கொடுத்தது. பறவையின் கண்கள் கலங்கின. மனம் நெகிழ்ந்தது. " கவலைப்படாதே, நண்பா. நீ கொடுத்த கனிகளைச் சாப்பிட்டுவிட்டு, உன் விதைகளை மண்ணில் பரப்புவேன். நீ மறுபடியும் புதிதாகப் பிறப்பாய்." என்று நன்றியுடன் மொழிந்தது பறவை. சிலிர்த்துச் சிரித்தது மரம்.        

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ஒன்று வெள்ளத்தில் நீந்தியவாறு எதிரில் வந்தது. " என்னைக் காப்பாற்று" என்று மானைக் கெஞ்சியது எறும்பு. "சரி. என் மீது ஏறிக்கொள் " என்று மான் கூற, எறும்பு மான் மீது ஏறி, அதன் கொம்பில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது. சில மணி நேரத்திற்குப் பின் வெள்ளம் வடிந்தது. மானிடம் நன்றி கூறிவிட்டு எறும்பு தன் இருப்பிடம் சென்றது. பிறிதொரு நாள். நல்ல வெய்யில் நேரம். மரநிழலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது மான். சற்றுத் தொலைவில் புலி ஒன்று மானையே உற்றுப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அது மான் மீது பாய்ந்து தாக்கலாம். திடீரென்று யாரோ மானை பலமாகக் கடித்தார்கள். வலி பொறுக்காது எழுந்த       மானைப் பார்த்து, " பயப்படாதே. நான் தான் உன்னைக் கடித்து எழுப்பினேன். எதிரில் பார்." என்றது எறும்பு. எதிரில் புலியைப் பார்த்த மான் அபாயத்தைப் புரிந்து கொண்டது. எறும்பு நண்பனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு, பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தது மான். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்பா, நலமா?நானும் உன்னுடன் வரலாமா?"என்று பணிவாக வேண்டியது கொக்கு. எருமை நட்புணர்வோடு ஒப்புதல் தந்தது. எருமை செல்லுமிடம் எங்கும் கொக்கும் கூடவே சென்றது. எருமை மேயும் பொழுது புற்களிலிருந்து வெளியேறும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பசியாறியது கொக்கு. கைமாறாக, எருமையின் மீது அமர்ந்து, அதன் ரத்தத்தை உறிஞ்சும் உண்ணிகளைப் பிடித்துத் தின்று எருமைக்குச் சுகமளித்தது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர்கள் விளையாடுவதற்கு வழவழப்பான, உருண்டையான கற்களையே விரும்பித் தெரிவு செய்தனர். இதை ஒரு அவமானமாகக் கருதி வருத்தப்பட்டது அந்தக் கல். ஒரு நாள் பலத்த மழை பெய்தது. வெள்ளம் அந்தக் கல்லை அடித்துச் சென்று ஆற்றில் சேர்த்தது. ஆற்று வெள்ளம் அந்தக் கல்லை புரட்டி, உருட்டி சொரசொரப்பை நீக்கி வழவழப்பாக்கியது. கல் இப்பொழுது உருண்டையாய் அழகிய வடிவத்துடன் காட்சியளித்தது. தன்னைச் செதுக்கிப் பண்படுத்திய ஆற்றுக்கு நன்றி கூறியது கல். 

சனி, 10 ஆகஸ்ட், 2013

பூவும் வண்ணத்துப் பூச்சியும்

தோட்டத்துச் செடியில் பூ ஒன்று அழகாகப் பூத்திருந்தது. பூவின் விரிந்த, பெரிய இதழ்கள் மஞ்சள் பூசி மங்களகரமாகக் காட்சியளித்தன. எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி. பூவைச் சுற்றி சற்று நேரம் வட்டமடித்தது. பிறகு அன்பான குரலில் பூவிடம்,"பூவே, பூவே, உன் மீது அமர்ந்து சற்று ஓய்வெடுக்கலாமா?"என வேண்டியது. "ஓ, தாராளமாக. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீ தங்கலாம். பசித்தால், என்னிடம் தேனுள்ளது. வேண்டுமளவு பருகலாம்,"என்று இனிய குரலில் மொழிந்தது பூ. தேனுண்டு இளைப்பாறிய வண்ணத்துப் பூச்சி,  பூவின் விருந்தோம்பல் பண்புக்கு நன்றி கூறி விடைபெற்றது. போகும்பொழுது, பூவின் மகரந்தத்தை தன் இறக்கையில் எடுத்துக்கொண்டுபோய் வேறொரு பூவில் சேர்த்து இன விருத்திக்கு உதவியது.   

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -20


  1. சாதாரணமான மனிதர்கள் இறக்கும் பொழுது பிணமாகிறார்கள். ஆனால் புரட்சியாளர்கள் மரிக்கும் பொழுது புதிதாகப் பிறக்கிறார்கள்.
  2. ஏற்றத் தாழ்வுகளும், வர்க்க பேதங்களும், இன ஒடுக்கல்களும், சுரண்டலும் எந்தச் சமூகத்தில் எல்லை தாண்டிப் பெருகுகின்றனவோ அங்கு நிச்சயம் புரட்சி வெடிக்கும்.
  3. மாற்றங்கள் மனிதர்களிடம் தேடும் தாகத்தையும் செயல்படும் வேகத்தையும் முடுக்கிவிட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும்.
  4. வண்ணங்கள் மாறுபட்டாலும் பூக்கள் ஒன்றையொன்று வெறுப்பதில்லை.
  5. பூக்கள் வெறுமனே பூக்கள் மட்டுமல்ல. அவற்றுக்குள் காய்கள், கனிகள், விதைகள், மரங்கள் என்று எண்ணற்ற ரகசியங்கள் மறைந்துள்ளன.
  6. மகரந்தம் கொணர்ந்த வண்ணத்துப் பூச்சிக்கு தேன் தந்து நன்றி நவின்றது பூ.
  7. விதவைக்குப் பூக்கள் மறுக்கும் உலகம் அவளின் பிணத்தின் மீது பூக்களாய்க் கொட்டும்.
  8. மண்ணுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. சாதி, மதம் இல்லை.யார் தோண்டினாலும் தண்ணீர் தரும். யார் பயிரிட்டாலும் உணவு கொடுக்கும்.
  9. அடித்தாலும், உதைத்தாலும், குதித்தாலும்,சிதைத்தாலும் சினம் கொள்ளாது மண்.
  10. இயற்கைத் தேவன் தன் இன்னுயிர்க் காதலிக்கு வாரி இறைத்த வைரங்களே நட்சத்திரங்கள்.  

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -19

1. எளியோரை ஏளனம் செய்தலும் வலியோர்க்கு சாமரம் வீசலும்            அறிவுடையோர் செயல் அல்ல.
2. நா காத்தல் இரு வகைப்படும். தீய சொற்களைப் பேசாதிருத்தல் ஒரு வகை.    அளவுக்கு மிஞ்சி உணவுண்ணாமல் நாவைக் கட்டுப்படுத்தல் இரண்டாவது  வகை.
3. இருட்டை விரட்டுகின்றன கதிரோனின் ஒளிக் கதிர்கள். அறியாமையை  நீக்குகிறது கல்வி.
4. அரசை எதிர்த்து தீவிரமாக முழங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று  மௌனிகளாகி விட்டால் என்ன பொருள்? பயமுறுத்தப்பட்டிருப்பார்கள்  அல்லது விலை போயிருப்பார்கள்.
5. நம் பகுதிக்கு வருகை தரும் பறவைகளை வரவேற்போம். அப் பறவைகள்  நம்முடைய விருந்தாளிகள். ஓசைகள் எழுப்பி அவற்றை பயமுறுத்த  வேண்டாம். நிம்மதியாகத் தங்கி விட்டுச் செல்லட்டும்.
6. அறிவாளி ஒருவனின் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த ஒரு தேசமும்  உயர்ந்ததாக வரலாறு இல்லை.
7. எதை எதிர்பார்த்து மழை பொழிகிறது? மண் எதை எதிர்பார்த்து  விளைச்சலைக் கொடுக்கிறது? காற்று எதை எதிர்பார்த்துக் குளுமையாக  வீசுகிறது? மழை, மண், காற்று போல நாமும் எந்தக் குறியெதிர்ப்பும்  இல்லாமல் பிறர்க்கு உதவி செய்தல் வேண்டும்.
8. தண்ணீர்ப் பற்றாக்குறையின் பொழுது இலைகளை உதிர்த்து விடுகின்றன  மரங்கள். அது போல, வருமானம் குறையும்பொழுது, நாம் தேவையற்ற  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
9. பலருடைய மன அழுத்தங்களுக்குக் காரணம் அவர்கள் தங்களின்  பிரச்சனைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாததே. வாய்விட்டுப்  பேசினால் மனம் லேசாகும். அழுத்தம் அகலும்.
10. நீதி மன்றங்கள் துணிவாகவும், தெளிவாகவும் தீர்ப்புக்கள் வழங்கும்  ஒவ்வொரு முறையும் மக்களாட்சியின் மீது நமக்கு நம்பிக்கை மலர்கிறது.  ஒருவித பாதுகாப்பு உணர்வும் மனதில் விரிகிறது.