புதன், 6 மார்ச், 2013

சிந்தனை பத்து - 16


 1. ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய செயலாயினும் பரவாயில்லை. எதிரே வரும் மனிதனைப் பார்த்து ஒரு புன்முறுவல், ஒரு குழந்தையை நோக்கி கையசைப்பு, ஒரு பார்வை இழந்த மனிதருக்கு சாலையைக் கடக்க உதவுதல், ஒரு மூதாட்டிக்கு தலைச் சுமை இறக்க கரம் நீட்டுதல், பிளாஸ்டிக் பொருளை குப்பைத் தொட்டியில் போடுதல் என எவ்வளவோ செயல்களைச் சொல்லலாம்.
 2. காலம் நம் கட்டளைக்கு அடி பணியாது. நம் ஆளுகைக்கு அடங்காது. எனவே செய்ய நினைப்பதை இன்றே செய்து விடு. நாளைக்குச் செய்யலாம் என எதையும் ஒத்திப் போடாதே.
 3. நேற்றைய தலைமுறையில் உண்மைக்கும், கண்ணியத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும் சற்று மதிப்பிருந்தது. தீயன செய்ய அச்சமிருந்தது. ஊரார் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமும், கூச்சமும் இருந்தது. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கண்ணியம் காலாவதியாகி விட்டது; அச்சம், கூச்சம், தயக்கம் எல்லாம் அந்நியமாகிப் போயின. பலர் பணம் ஈட்டுவதில் முனைப்பாக இறங்கிவிட்டார்கள். பொது வாழ்க்கையில் தூய்மை என்பது கனவாகி காணாமல் போய் விட்டது. நாளைய தலைமுறை என்னவாகுமோ? அச்சமாக இருக்கிறது நினைத்துப் பார்க்க.
 4. எளிமையாகப் புரிய வைப்பதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பவரே உண்மையான ஆசிரியராவார்.
 5. மாணவர்க்கு நண்பனாக இருந்து கற்பிக்கும் ஆசிரியரே நல்லதொரு சாதனையாளராகப் போற்றப்படுவார்.
 6. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உண்மையான அரசியலைப் போதித்தால் மட்டுமே தேசம் உருப்படும்.
 7. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைக் குறை கூறுவதாக இருந்தால், தனியாக அழைத்துக் கண்டிக்க வேண்டும். பாராட்டுவதாக இருந்தால், பலர் நடுவே பாராட்ட வேண்டும்.
 8. மரங்களை வெட்டி, மழையைத் தடுத்து மண்ணைப் பாழாக்கிப் பாலையாக்கும் எவருமே தேசத் துரோகிகளே.
 9. முதியவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளால் குதறாதீர்கள். சில நாட்கள் மட்டுமே வாழப் போகும் அவர்கள் நிம்மதியாய் வாழட்டும். அவர்களின் இறுதிக் காலம் இனிமையாய்க் கழியட்டும்.
 10. உங்களுக்கு முகவரி தந்த பெற்றோர்களை கடைசிக் காலத்தில் முகவரி அற்றவர்களாக்கி விடாதீர்கள்.   

திங்கள், 4 மார்ச், 2013

சிந்தனை பத்து - 15


 1. அடுத்தவர் துயரில் பங்கு கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவாய் நேசக் கரம் நீட்டுங்கள். சில அன்பு மொழிகளைக் கூறுங்கள். மெல்ல, மெல்ல அவர்களின் துயரம் குறையும்.
 2. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு; எரிச்சலின் நண்பன்;  உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆகையால், பொறாமையைத் தவிர்ப்பீர்.
 3. வாழ்க்கைச் சக்கரத்திற்கு அன்பே அச்சாணி.
 4. பாழ்பட்ட நிலமே எனினும் பாடுபட்டால் நிச்சயமாய் பலன் விளையும்.
 5. நேசிப்பதாலே மனம் லேசாகும். நேசிப்பதாலே கவலைகள் கரையும். நேசிப்பதாலே உறவுகள் விரியும். நேசிப்பதாலே நட்பது மலரும்.
 6. வீணை செய்வது வீணாக்குவதற்கு அல்ல; மீட்டி இசையை ரசிப்பதற்கே. சிலை வடிப்பது போட்டு உடைப்பதற்கு அல்ல; அதில் உள்ள கலை நயத்தைப் பார்த்து மகிழ்வதற்கே.
 7. கரைக்குள் அடங்கி ஓடும் வரை நல்லாறு; கரை புரண்டு ஓடினால் காட்டாறு.
 8. வறட்சியிலும் சில தாவரங்கள் உயிர்த்திருப்பது போல, வறுமையிலும் தாக்குப் பிடிப்பவர்களே வாழ்வதற்கும், வாழ்த்தப்படுவதற்கும் தகுதி உடையவராவர்.
 9. பக்குவப்பட்டவர்கள் எப்போதும், எதற்கும் பதட்டமடைய மாட்டார்கள். நிதானமாகச் சிந்தித்து பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். தெளிவுடன் தீர்வு காண்பார்கள்.
 10. குப்பையையும் கொட்டி விட்டு, சுத்தம் செய்பவர்களை குறை சொல்கிற வேடிக்கை மனிதர்கள் வாழ்கின்ற விந்தையான உலகம் இது..  


சனி, 2 மார்ச், 2013

சிந்தனை பத்து - 14


 1. பாராட்டுங்கள் தாராளமாக. செலவு சில வார்த்தைகள் மட்டுமே. பாராட்டப்படுபவர் பரவசம் அடைவார்; உற்சாகம் பெறுவார்; வேகத்துடன் செயல்படுவார்; பாராட்டு  அவரின் சாதனைகளுக்கு ஊக்க மருந்தாய் அமையும்.
 2. சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பாராட்டை விரும்புகிறார்கள். பாராட்டுவோமே....நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்?
 3. பாராட்டு என்பது பரிசாக இருக்கலாம். சான்றிதழாக இருக்கலாம். ஒரு கவிதையாக இருக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளாக இருக்கலாம். ஒரு கைகுலுக்கல் கூட பாராட்டே. ஒரு சிறு முறுவலும் கூட.
 4. விதை உறக்க காலத்தில், முளைப்புக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது. இப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்ப் படுத்திக் கொள்கிறோமா?
 5. மரங்களும் அவற்றில் அடையும் பறவைகளும் எவ்வளவு அழகாய் உள்ளன!காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசையும் காலை நேரத்தில் பறவைகளின் கலகலப்பான ஒலியும் கேட்பதற்கு எவ்வளவு ரம்மியமாக உள்ளது!
 6. சலசலத்து ஓடுகிறது ஆறு. ஆற்று நீரில் துள்ளிப் பாயும் வாழை மீன்கள். கரையில் செழித்து வளர்ந்த செடிகள். செடிகளின் பூக்களில் தேன் உறிஞ்சும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள். ஓ, இயற்கைத் தாயே, நின் வரங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
 7. சில செயல்களை யோசித்துச் செய்ய வேண்டும். சிலவற்றை உடனடியாகச் செய்ய வேண்டும். சில செயல்களை துணிவோடு செய்ய வேண்டும். சில செயல்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும்.
 8. கோபப்படும் பொழுது முகம் தன் அழகை இழக்கிறது. அகம் அறிவை இழக்கிறது. பேச்சும் மூச்சும் தடுமாறுகின்றன. இரத்தம் கொதிக்கிறது. மூச்சு நின்று விடுவதும் உண்டு. கோபத்தைத் தவிர்க்கலாமே! நெடுநாட்கள் வையத்தில் வாழலாமே!
 9. குழந்தையின் சிரிப்புக்குத் தான் எவ்வளவு வலிமை! அந்தச் சிரிப்பு நமக்கே தெரியாமல் நமக்குள் புகுந்து நம் முகத்தையும் அகத்தையும் மலர வைத்து மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
 10. முடிந்ததைச் செய்யுங்கள். இயன்றதைக் கொடுங்கள். அறிந்ததைக் கற்றுத் தாருங்கள். அறியாததை அறிய முயற்சி செய்யுங்கள். எப்போதும் எல்லோரையும் நேசியுங்கள். வாழ்க்கை இனியது.


 வெள்ளி, 1 மார்ச், 2013

சிந்தனை பத்து- 13


 1. குழந்தையிடம் அன்பைப் பொழியுங்கள். அது மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளும். இனிய சொற்களைப் பயன்படுத்துங்கள். குழந்தையும் இனிமையாகப் பேசும்.
 2. வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் வசந்தம் பூக்காது.
 3. சம்பாதிக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கை நடத்தும் கலையைக் கற்றுக்  கொடுக்க வேண்டும்.
 4. வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அனுபவித்து வாழ்வதில் தவறேதும் இல்லை, வரவுக்குள் செலவு செய்யத் தெரிந்திருக்கும் பட்சத்தில்.
 5. நிதியைச் சரியான முறையில் கையாளாதவன் வாழ்க்கையில் கவலைகளே நிரம்பித் ததும்பும்.
 6. பேச்சில் தெளிவு, பழக்கத்தில் கனிவு, நடத்தையில் பணிவு, செயலில் உறுதி, சிந்தனையில் வேகம், பொது வாழ்வில் நாணயம், வார்த்தைகளில் வாய்மை ஆகியவை இருந்தால், நிறையச் சாதிக்கலாம்; நீடு புகழ் ஈட்டலாம்.
 7. குழந்தைகளின் அழுகை ஒரு வகை மொழி; தாய்க்கு மட்டுமே புரியும்.
 8. எந்த நாட்டில் கல்வி வியாபாரமாக நடத்தப்படுகிறதோ, அந்த நாடு உருப்படாது.
 9. எதையும், யாருக்கும் எளிமையாகச் சொல்ல வேண்டும். கனமாகச் சொல்லப்படும் கருத்துக்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே சிதைந்து போகும்.
 10. இலவசமாய்ப் பெறப்படும் பொருளுக்கு மதிப்பில்லை.ஒரு காசானாலும் உழைப்பினால் கிடைத்தால், ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்.