சனி, 23 அக்டோபர், 2004

மண்ணுக்குள் மறைந்தபடி

காற்று அசுரத்தனமாய் வீசியது.
மரத்தின் கிளைகள் பேயாட்டம் போட்டன.
இலைகளும் பூக்களும் பலமாக உரசிக்கொண்டன.
இன்றோ நாளையோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்த மஞ்சள் இலையொன்று வலியில் முனகியது,
"பூவே, என் மீது ஏன் மோதுகிறாய்?"
பூவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"அந்திமக் காலத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அற்பமே! என்னோடா மோதுகிறாய்? நானில்லாவிட்டால் நமது வம்சமே அழிந்து போகும் தெரியுமா? நானல்லவா காயாய்க், கனியாய் மாறி எல்லா உயிர்க்கும் பசி தீர்க்கிறேன்" என்று கொக்கரித்தது.
இலை மட்டும் இளப்பமா, என்ன?
"ஆனால்,உனக்கும் சேர்த்து மரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் உணவு தயாரிப்பது நான் அல்லவா?" பீற்றிக் கொண்டது இலை.
இது வரை இதையெல்லாம் அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்த தண்டு அதிகாரமாய் முழங்கியது,
"அட, அற்பங்களே! ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்? உங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருப்பதே நான் தான். நானில்லாவிடில் நீங்கள் யாவரும் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போயிருப்பீர்கள்."
இவ்வாறாக பூவும், இலையும், தண்டும் தங்களுக்குள் நாள் முழுக்க விவாதம் நடத்தின.
ஆனால்,மண்ணுக்குள் மறைந்தபடி, மரத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்த வேர் மட்டும் மேற்படி வெட்டி விவாதத்தில் பங்கு கொள்ளவில்லை; மாறாக, கருமமே கண்ணாக, மரத்துக்கான நீரைத் தேடும் பணியில், அமைதியாக,அடக்கமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தது.

சனி, 16 அக்டோபர், 2004

விழுதலும் கூட விழுமியதே!

எழுதலைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள்.
அதிகாலையில் துயிலெழு என்கிறது அறிவு நூல்.
"விழி;எழு" என்கிறார் விவேகானந்தர்.
"எழுந்து நில்;துணிந்து செல்" என்கிறது திரைப்படப் பாடல்.
எழுதல் மட்டுமா சிறப்பு?
விழுதலும் கூட விழுமியதே!
விசும்பிலிருந்து துளி விழுவதால் தான் ஆறு,ஏரி,குளமெல்லாம் நீர் நிரம்பி வழிகிறது.
மலையிலிருந்து நீர் விழுவதால் தான் மின்சாரம் உதயமாகிறது.
மண்ணில் விதையொன்று விழுவதால் தானே,விண்ணுக்குள் மரமொன்று உயர்கிறது!
விழும்பொழுது தான் மனிதன் எழுவதற்கு எத்தனிக்கிறான்.
காலில் விழுவது வேண்டுமானால் காறி உமிழத்தக்க செயலாய் இருக்கலாம்.
மானுடம் சிறப்புற பயனேதும் கிட்டுமாயின்,விழுவதும் தொழுது ஏற்கத் தக்கதே.

வியாழன், 14 அக்டோபர், 2004

சார்பு


உண்ணக் கனியும்
ஓய்ந்திருக்க நிழலும்
கூட்டுக்கு இடமும்
கொடுத்தது மரம்
விதையைச் சுமந்து
விண்ணில் பறந்து
மண்ணில் விதைத்து
மரத்தை வார்த்தது
பறவை.


வெள்ளி, 1 அக்டோபர், 2004

என் வலைப்பூ நுழைவை வரவேற்ற தோழர்களுக்கு நன்றிகள் ஆயிரம்.எனக்குச் சோறு போடும் என் தாய்த் தமிழுக்கு நன்றிக் கடனாய் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற தாகத்தோடு நுழைந்துள்ளேன்.
தமிழே உன்னை நேசிக்கிறேன்
தாயாய் என்றும் பூசிக்கிறேன்
நாளும் உன்னை வாசிக்கிறேன்
நல்லது செய்ய யோசிக்கிறேன்
என்ற என் கவிதை வரிகளோடு இன்றைக்கு முடித்துக் கொள்கிறேன்.வணக்கம்.