புதன், 29 ஏப்ரல், 2020

உறவுகள்----என் பார்வையில்



இந்த உலகில் தனியானது என்று எதுவும் இல்லை என்பான் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி. எல்லாப் பொருள்களும் ஒரு புனித விதிக்கு உட்பட்டு ஒரே உணர்வில் சந்தித்து ஒன்று கலந்துள்ளன என்று மேலும் சொல்லுவான். அந்தப் புனித விதிதான் உறவு.

உறவு என்ற ஒப்பற்ற பந்தத்தால் தான் ஒரு குடும்பம் உருவாகிறது. ஒரு ஊர் அமைகிறது. ஒரு தேசம் மலர்கிறது. ஒன்றே உலகம் என்றொரு வாழ்க்கைத் தத்துவம் எழுகிறது. ஒன்றுபட்ட ஒரு சமூகத்தை வென்றெடுப்பதும் கெட்டிப்படுத்துவதும் உறவு எனும் கட்டுமானப் பொருளே.

உறவு என்பது இருவருக்கு இடையே முகிழ்க்கலாம். பலருக்கு நடுவில் தோன்றலாம். தேசங்களுக்கு இடையேயும் பற்றிப் படரலாம். உறவு என்ற பேருணர்வுக்கு சாதிகள் தடையல்ல. மதங்கள் பொருட்டல்ல. 

எல்லோர்க்கும் மழை பொழிவது போல உறவு எல்லோர் மீதும் படரும். அன்பு பற்று பாசம் பரிவு அனுசரணை அக்கறை காதல் நட்பு இப்படி எத்தனையோ காரணிகளின் மூலம் உறவு விரியும். மனித முன்னேற்றத்துக்கு உறவு ஒரு உயவிடு பொருள் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

உறவு என்பது அன்பிழையால் நெய்யப்பட்ட அழகான பட்டாடை. வாழ்க்கையில் படையெடுத்து வரும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளை தீர்க்கவல்ல சர்வரோக நிவாரணி உறவு.  நல்லதோ கெட்டதோ ஒரு வீட்டில் எது நடந்தாலும் எல்லா உறவினரும் அங்கு கூடுவார்கள். மாமன் மச்சான் அண்ணன் தம்பி அக்கா தங்கை தாத்தா பாட்டி அத்தை என அத்தனை சொந்தங்களும் செய்யவேண்டிய சீர் செனத்திகள் செய்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் சமமாக பங்கு கொள்வார்கள். 

உறவுகளுக்குள்ளேயே சம்பந்தம் செய்துகொள்வார்கள். உறவு விட்டுப் போய் விடக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருப்பார்கள்.
கூட்டுக் குடும்பம் என்ற அற்புதமான வாழ்வியல் தத்துவம் ஒளிர்வதற்கு எண்ணெய்யே உறவு தான். சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் பொறுமையும் பொதுநல உணர்வும் எதையும் பகிர்ந்து கொள்ளும் மனமும் உறவு செழித்து ஓங்குவதற்கான உரங்களாகும். ஒரு கால கட்டத்தில் கலாச்சார, பண்பாட்டு அடையாளமாக கூட்டுக் குடும்பம் விளங்கியது என்பது நேற்றைய வரலாறு. நல்லுறவின் அடிப்படையில் அமைந்த கூட்டுக் குடும்பங்கள் தேசத்தின் ஒருமைப்பாட்டையும் வலிமையையும் வளர்த்தெடுத்தன.

பல்வேறுபட்ட உறவுமுறைகள் ஒரு குடும்பத்தை அல்லது சமூகத்தை பின்னிப் பிணைத்துள்ளதை நாம் கண்கூடாகக் காணலாம். தாய்-தந்தை உறவு, கணவன்-மனைவி உறவு, அண்ணன்-தங்கை உறவு, குரு-சீடன் உறவு என்று எத்தனையோ உறவுகளால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தாக்கத்திற்கு உள்ளாகிப் போயிருப்போம். 

ஒவ்வொருவருக்கும் அவரவர் சூழலுக்குத் தக்கவாறு உறவுகள் அமைவது என்பது இயல்பானது. எந்த உறவு பெரியது,? எது சிறியது?, எது அரியது?, எது கூடாதது?, எது உயிர் கொடுத்தும் கொள்ளத்தக்கது?, எது ‘தூ, தூ’ எனத் தள்ளற்குரியது? என்பதெல்லாம் உறவு கொள்வோரைப் பொறுத்தே அமையும்.

என்னைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே எல்லா மனிதர்களையும் நேசிக்கவென்றே பிறப்பெடுத்தவன் என என்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்பவன். மிகைப்படுத்திச் சொல்வதாகவோ அல்லது தற்புகழ்ச்சி என்றோ யாரும் நினைத்தல் வேண்டா. என்றைக்கு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பூங்குன்றனின் வேத வரிகளைப் புரிதலுற்றேனோ அக்கணமே அன்பு செயக் கற்றுக் கொண்டேன். மற்றவர்களின் அன்பைப் புரிந்துகொள்ளவும் அறிந்து கொண்டேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பாதை உறவு பற்றி எனக்கு பாடம் போதித்தது. காந்தி,ஏசு, நபிகள் நாயகம்  அன்னை தெரசா இன்னபிற மாமனிதர்கள் நல்லுறவு நோக்கி என்னை  நகர்த்தினார்கள். எல்லோருடைய உறவுமழையில் நான் நனைந்து குளிர்ந்தேன் எனினும், அவற்றில் விலைமதிக்க இயலாத ஓரிரண்டு உறவுகளை இங்கு விவரிப்பது சாலப் பொருத்தமுடையதாக இருக்குமென அவதானிக்கிறேன். 

தாயிற் சிறந்த கோயில் இல்லை! இந்தப் பொன்மொழியை விடவும் வேறு அரிய அணிகலனை ஒருவர் தாய்க்குச் சூட்டிட முடியுமா? என்னுடைய அம்மாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு ராஜ குடும்பத்தில் அவள் பிறப்பு நிகழவில்லை. புகுந்த வீட்டிலும் பெரிதாய் சுகமேதும் கண்டாளில்லை. அவள் நடந்த பாதையில் நெருஞ்சி முட்களே நிரம்பியிருந்தன. வசந்தம் மறந்தும் கூட அவள் வீட்டுக் கதவைத் தட்டவில்லை. அவள் வாழ்வின் பெரும்பகுதியை வறுமையும் வெறுமையுமே அலங்கரித்தன. ஆனாலும் தான் பட்டினி கிடந்து பிள்ளைகள் எங்களின் பசியைப் போக்கினாள். சாயம்போன கிழிந்த புடவையை தான் உடுத்திக்கொண்டு எங்களுக்கு புதுத் துணி வாங்கிக் கொடுத்தாள். ஒரு கூலிக்காரியாக மாற்றார் நிலங்களில் விதை நட்டாள்; நாற்றுப் பறித்தாள்; களையெடுத்தாள்; கதிர் அறுத்தாள். சேர்த்த பணத்தைக்கொண்டு எங்களைப் படிக்கவைத்தாள். இன்று நாங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கிற வசதிகள் எல்லாம் அம்மா என்ற அந்த அற்புத உறவு எங்களுக்குப் போட்ட பிச்சை. அம்மா என்னிடம் பொழிந்த அன்புமழையில் கால்பங்கு கூட நான் அவளிடம் காட்டியதில்லை. எப்பொழுதாவது ஒரு சின்னச் செலவுக்காக அம்மாவிடம் பணம் கேட்பேன். எங்கோ மூலையில் ஒளித்து வைத்திருந்த ஒரு பழைய ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துத் தருவாள். அது இன்று கோடி ரூபாய்க்குச் சமம்! சின்ன வயதில் நான் அம்மாவை நேசித்தேனா? அவளோடு அன்பாகப் பேசினேனா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மாறாக, சண்டைப் போட்டிருக்கிறேன். வார்த்தைகளால் குத்தியிருக்கிறேன். செயல்களால் மனதை வருத்தியிருக்கிறேன். இப்போது தெரிகிறது அவளின் அருமை. என் மகனுக்கு அவளுடைய பெருமைகளை அடிக்கடி சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவளுடைய உறவைப் போற்றி ‘அம்மா அன்புள்ள அம்மா’ என்ற ஒரு சிறிய கவிதை நூலை எழுதினேன். அதில் என் பார்வயில் அம்மா எனும் உறவு பற்றி உணர்வுபூர்வமாக சித்தரித்துள்ளேன். 

அம்மாவுக்கு அடுத்தபடியாக அப்பா எனும் உறவு பற்றிக் கதைப்பதற்கும் என்னிடம் கொஞ்சம் சரக்கு இருக்கவே செய்கிறது. சின்ன வயதில் அப்பாவின் முறுக்கேறிய மீசையும் சிவந்த கண்களும் அதட்டும் குரலும் என்னை அச்சம் கொள்ள வைத்தது உண்மைதான். அண்ணன்மார் அக்கா அம்மா எல்லோருமே சற்று அவரை விட்டு விலகிப் போனார்கள் என்று தான் சொல்லவேண்டும். அவர்களிடம் அப்பா முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் என்னிடம் அப்பா இளக்கமாகவும் இணக்கமாகவும் இருந்தார். கொஞ்ச நாள் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டை விட்டு விலகியிருந்தார். அப்பொழுதும் கூட என்னோடு பேசுவார். ஏனோ என்னால் அவரை வெறுக்க முடியவில்லை. வீட்டுக்கு வரச்சொல்லி பலமுறை அவரிடம் நான் அழுதது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘உன்மேல் கோபமில்லை’ என்று என்னைத் தேற்றுவார். பிறகு கோவை பீளமேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிட்டார். அப்போது நான் ஐந்தாவதோ,ஆறாவதோ படிக்கிறேன் என்று நினைக்கிறேன். அப்பா ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். கோடை விடுமுறையில் சில நாட்கள் அவருடன் தங்கியிருக்கிறேன். உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று இனிப்பும் முறுகலான தோசையும் வாங்கித் தருவார். திரைப்படம் பார்க்க வைத்தார். அந்தநாட்கள் இனிமையாக இருந்தன. அப்பா என்ற உறவில் திளைத்து மகிழ்ந்தேன் என்று தான் கூறவேண்டும்.

1967 என்று நினைக்கிறேன். ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமை. அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். “ டேய், உங்கப்பா வந்திருக்கார்டா” என்றபடி என் அறைத்தோழன் வந்தான். ஆம் அங்கே அப்பா நின்றுகொண்டிருந்தார். அவர்  கையில் ஒரு பெரிய பை இருந்தது. “இந்தா. கொஞ்சம் பழங்கள். உன் சிநேகிதர்களுக்குக் கொடு” என்று பையை நீட்டினார். பையை வாங்கி திறந்து பார்த்தேன். ஆப்பிள்,ஆரஞ்சு, வாழைப்பழம், பிஸ்கட் பொட்டலங்கள், காராபூந்தி என்று ஏகப்பட்ட பொருள்கள். “ அப்பா எதுக்கு இவ்வளவு கனத்தைச் சுமந்துட்டு வந்தீங்க?” என்று கேட்டபொழுது என் குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கின. நான், அப்பா வருவார் என்று இம்மியளவும் எதிர்பார்க்கவில்லை. அன்று முழுதும் அவர் என்னோடிருந்தார். மதியம் கல்லூரி உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றேன். நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்பா அவர்களோடு மகிழ்ச்சியோடு உரையாடினார். அவர் அருகே அமர்ந்து உணவு அருந்திய பொழுது அந்தக் கால நினைவுகள் மனதில் குமிழியிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்னாள் அம்மா ஆட்டுக்கறி சமைத்திருந்தாள். நான் அப்பா அருகில் அமர்ந்திருந்தேன். தன் தட்டில் இருந்த ஈரலை என் தட்டில் எடுத்துப் போட்ட அப்பா “ நல்லா சாப்புடு. இதுல தான் நெறைய சத்து இருக்குது.” என்று பிரியத்தோடு சொன்னார். அதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து மனதை உருக்குகிறது.
காலப்போக்கில் அப்பா வெகுவாக மாறிப்போனார். எல்லோருடனும் நல்ல உறவு வைத்துக் கொண்டார். வேலையிலிருந்து நின்றபொழுது கிடைத்த தொகையை அண்ணனிடம் கொடுத்துவிட்டார். என் திருமணத்திற்குப் பிறகு அம்மாவும் அப்பாவும் விவசாயம் பார்க்க சொந்த ஊருக்குப் போனார்கள். கொஞ்ச ஆண்டுகள் கழித்து, என் மகன் ஆறேழு வயதாக இருக்கும் பொழுது, ஒருநாள் இரவு தூக்கத்தில் எங்களை விட்டுப் பிரிந்து போனார். உயிரற்ற அவரின் சடலத்தைப் பார்த்தபொழுது கண்கலங்கி நின்றேன். ஓ, எவ்வளவு அன்பான அப்பா!

குறிப்பிட்டே ஆகவேண்டிய அடுத்த உறவு எங்கள் தாய்மாமன். உறவுகளிலேயே அதிமுக்கியமான உறவு என்று எல்லாச் சாதியினரிலும் கருதப்படுபவர் தாய்மாமன். அது திருமணமானாலும் சரி, சாவானாலும் சரி, உடனே ‘தாய்மாமனைக் கூப்பிடுங்கள்’ என்று அலறுவார்கள். ஏனெனில் எந்தவொரு சீரையும் அவர்தான் முதலில் செய்யவேண்டும். அப்படியொரு முறை இன்றுவரைக்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அம்மாவுக்குத் தம்பியான எங்கள் தாய்மாமன் எங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அம்மா அவர் மீது உயிரையே வைத்திருந்தார். வறுமை வாளை வீசி எங்கள் குடும்பத்தைத் தாக்கிய போதெல்லாம் அதை தன் மார்பில் ஏந்தி எங்களைக் காத்தவர் தாய்மாமா. விவசாயம் மழை பொய்த்ததால் அழிந்த நிலையில் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என்று பல தொழில்கள் செய்து எங்களின் பசியைத் துடைத்தார். எங்களின் படிப்பும் அவர் தயவால் தான் தொடர்ந்தது. தன் சொந்த குடும்பத்தை மட்டுமல்லாது எங்களின் குடும்பத்தையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருந்ததால் விரைவில் கடனாளியாகவும் அல்லல்பட்டார். என் அண்ணன்மார்களுக்கு மாமா என்றால் உயிர். எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் அப்பா மாமனிடம் மட்டும் சற்றுக் கூடுதலாகவே மரியாதை காட்டுவார். மாமா இறந்தபொழுது தூணில் சாய்ந்தபடி அப்பா விக்கி விக்கி அழுதது இன்றும் கூட நினைவில் அசைகிறது. அம்மா அழ, அண்ணன்மார்கள் கதற ஊரே கூடி அவரை அடக்கம் செய்தது. அந்த தாய்மாமன் உறவு தான் இன்றளவுக்கும் அவருடைய ஒரே மகனை உயிரென நேசிக்கும் உணர்வை எங்கள் இதயத்தில் விதைத்திருக்கிறது.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் வரைக்கும் கூட இன்னும் எத்தனையோ உறவினர்களோடு இணக்கமாய் இருந்துள்ளோம். அப்பாவோடு பிறந்தவர்கள் அம்மாவின் சகோதரிகள்,ஒன்றுவிட்ட மாமன்மார்கள் என்று உறவுகள் கிளைத்து பரவியிருந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உறவினர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்கள் எல்லோருடனும் தொடர்பு வைத்துக்கொள்வது என்பது தொடர முடியாததாகி விட்டது. சகிப்புத்தன்மைக் குறைவினாலும் பொறுமை இல்லாததாலும் தன்னல உணர்வினாலும் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து சிதறிப் போயின. உலகமயமாக்கலின் ஒரு பெரிய சீர்கேடு என்னவென்றால் மனிதர்கள் தங்களுக்குள்ளே விலக ஆரம்பித்தனர். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை பெருகி அதன் தொடர்ச்சியாய் பொறாமை, பேராசை, வெறுப்பு, குரோதம் போன்ற தீய பண்புகள் மனிதர்களை ஆட்டிபடைக்க ஆரம்பித்தன. கடுகு உள்ளம் கொண்டவர்கள் பெருகிப் போனார்கள். நம்முடைய மூதாதையர்கள் பொத்திப் பொத்தி வளர்த்த ரத்த பந்தம் சிதறிப் போயிற்று. வன்முறைகளும் உரசல்களும் உராய்வுகளும் வெட்டி விவாதங்களும் பாசம், பரிவு அன்பு காதல் நேசம் கருணை நட்பு போன்ற நல்ல பண்பாட்டுக் கூறுகளை வெட்டிச் சாய்த்துவிட்டன. காசு மட்டுமே குறியாகக் கொண்ட வணிக உலகில் உறவு வியாபாரப் பொருளாகிப் போயிற்று. பணம் பண்ண வந்த பன்னாட்டு நிறுவனங்கள் புனிதமான குடும்ப உறவுகளை அர்த்தமற்றதாக்கி விட்டன. இப்பொழுதெல்லாம், உறவல்ல, காசே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ‘அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகத்திலே’ என்று பாடுமளவுக்கு உறவு சிறுத்துப் போய் விட்டது. தன்னலம் மனங்களை சுருக்கிவிட்ட காரணத்தால் மனிதர்கள் கொடுப்பதையும் பகிர்ந்துகொள்ளலையும் விருந்தோம்பும் அரிய குணத்தையும் மறந்துவிட்டார்கள். ஆக உறவுகள் சீழ் பிடித்து புரையோடிய புண்ணாகிவிட்டன. 

உறவுகள் சிதைந்துபோன காரணத்தால் முதியோர் இல்லங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. பேரக் குழந்தைகள் கதை சொல்லும் தாத்தா,பாட்டிகளை இழந்துவிட்டனர். பத்து மாதம் கருவில் சுமந்து பிறகு இடுப்பில்  சுமந்து பாசத்தைஎல்லாம் கொட்டி வளர்த்த அன்னை பிள்ளைகளுக்கு அந்நியமாகிப் போனாள். ஓடாகத் தேய்ந்து உழைத்து உருக்குலைந்து கல்வி தந்து தன் பிள்ளைகளை அவையத்திலும் வாழ்க்கையிலும் முந்தியிருக்கச் செய்கிறார் தந்தை. ஆனால் அந்தத் தந்தையை அவருடைய தள்ளாத வயதில் தள்ளி வைக்கிறார்கள் சுயநலக்காரப் பிள்ளைகள். சுருக்கமாகச் சொல்லப் போனால், காசு என்ற பிசாசு உறவு என்ற அழகான பூந்தோட்டத்தை அலங்கோலமாக்கி விட்டது.
ஏன் இப்படி உறவுகள் சிதைந்து போயின? ஏன் மனிதன் சக மனிதர்களிடமிருந்து விலகிப் போனான்? இத்தகைய கேள்விகளை ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்பதன் மூலம் தான் உறவுகள் மேம்படுவதற்கான வழிகள் திறக்கும். 

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மேடைகள்தோறும் முழங்குகிறோம். ஆனால் பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை. பக்கத்து நாட்டுக்காரனோடு தீராத பகை. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் பெருமானின் வரிகளை மனதில் இரசிக்கிறோம். ஆனால் பசியென்று பரிதவிப்போருக்கு புசி என ஒரு கைப்பிடிச்சோறு தர மறுக்கிறோம். வேதங்களும் நீதிநூல்களும் படிக்கிறோம். ஆனால் அவை மனிதத்துவம் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அவை காட்டும் பாதையில் பயணிக்கிறோமா என்றால் இல்லை. அன்புகுறித்து, நட்பு பற்றி, ஒற்றுமை பற்றி, கூடி வாழ்வது பற்றி,சகிப்புத்தன்மை, பொறுமை பற்றி, புத்தரும் காந்தியும் ஏசுவும் நபிகள் நாயகமும் சித்தர்களும் யோகிகளும் எத்தனையோ அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்கள். படிப்பதோடு விட்டுவிடாமல் அவற்றை செயல்படுத்த நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம். சக மனிதர்களை நேசிப்பதற்கும் இனிய சொற்களைக் கூறுவதற்கும் எல்லோரையும் சமமாக மதிப்பதற்கும் ஈத்துவப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் நம் சிறார்களுக்குப் பழக்கப்படுத்துவோம். “ஒன்றே உலகம். எல்லோரும் ஒருதாய் மக்கள். ஒரே மதம். அதன் பெயர் மனிதம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.” என்ற சித்தாந்தங்களை வளரும் குழந்தைகளின் ஆழ் மனங்களில் பதியம் போட்டோமானால் அகிலமெங்கணும் உறவு மலர்கள் பூத்துக் குலுங்கும்!. வன்முறையற்ற வாழ்விடம் அமையும்!.