காதலித்தே ஆகவேண்டும்
என்பது
அப்படியொன்றும்
சாப்பிட்டே ஆகவேண்டும்
எனுமளவுக்கு
கட்டாயம் இல்லை.
பிறகொரு நாள்
பார்க்கலாம்
கடமைகள் எல்லாம் முடிந்து.
இப்போதைக்கு
அடமானத்தில் இருக்கும்
அம்மா நகையை
திருப்பவேண்டும்.
மாதக் கணக்காய்
தள்ளிப்போகும்
அப்பாவின் கண்புரைக்கு
அறுவை சிகிச்சை
செய்யவேண்டும்.
தங்கையின் காதுக்கு
கம்மல் வாங்கவேண்டும்.
பொறியியல் படிக்கும்
தம்பிக்கு
விடுதிக் கட்டணம்
கட்டவேண்டும்.
எல்லாம் முடித்து
அதற்குப் பிறகும்
வயசிருந்து
உணர்ச்சியிருந்து
நேசிக்கவும்
நேசிக்கப்படவும்
ஆண் மகன் ஒருவன்
அகப்பட்டால்
யோசிக்கலாம்
காதலிப்பது பற்றி!
2 கருத்துகள்:
இதுதான் 'பிளான்' பண்ணி காதலிக்கிறதா...?
யதார்த்தமாய் யோசித்த கவித வரிகளைப் படித்ததும் ‘காதல்’ வந்து விட்டது.. கவிதையின் மீது!
கருத்துரையிடுக