சனி, 13 நவம்பர், 2004

அலகிலா விளையாட்டு

ஆண்டவனின் விளையாட்டை
அலகிலா விளையாட்டு என்பார் கம்பர்.
ஆண்டவனே வந்தாலும் ஆடமுடியாத விளையாட்டை
அறிமுகம் செய்யப் போகிறேன்.
விசித்திரமான குயுக்தியான விளையாட்டு;
கடினமானதும், முரட்டுத்தனமானதும் கூட.
வினாடிக்கு வினாடி மாறும் தந்திரமான ஆட்டம்.
ஆடுகளத்திற்கு அளவோ, எல்லைகளோ இல்லை.
வரையறுக்கப்பட்ட விதிகள் ஏதுமில்லை.
ஆடுவோர்க்கு சீருடை என்று ஒன்றில்லை.
அணியின் உறுப்பினர் எண்ணிக்கை வரம்பற்றது.
காலக்கெடு என்று ஒன்றில்லாததால்,
ஆடும் நேரத்திற்கு அளவில்லை.
ஆடுவோர்க்கு வயது வரம்பு முக்கியமில்லை;
பதினெட்டு வயது வாக்கில் தொடங்கி
படுகிழம் ஆகிற வரைக்கும் தொடரலாம்.
ஆட்டத்திற்கு பயிற்சி ஏதும் அவசியமில்லை.
அறிவு கூட இங்கு அளவுகோல் இல்லை.
ஒவ்வொரு தேசத்திலும் , ஒவ்வொரு காலத்திலும்
வெவ்வேறு விதமாய் விளையாடப் படுவதால்
இதுவரை ஒலிம்பிக்கில் இடம் பெறவில்லை.
பணக்கார நாடுகளில் ஒரு விதமாகவும்
ஏழை நாடுகளில் வேறு விதமாகவும்
ஆட்டம் அமைவதில் ஆச்சரியம் ஏதுமில்லை;
ஏனெனில் இதில் பணத்தின் பங்கு கணிசமானது.
ஜனநாயக நாட்டில் எவரும் ஆடலாம்;
சர்வாதிகார நாட்டில் இது ' தனிநபர் ' விளையாட்டு.
பழுத்த, பயிற்சி பெற்றவர்கள் கூட
புதிய முகங்களிடம் மண்ணைக் கவ்வுதல்
இவ் விளையாட்டில் சர்வ சகஜம்
அறிவாளிகள் பொதுவாக இவ்வாட்டத்தில்
அதிகம் பங்கெடுப்பதில்லை.
வினோதமான இவ் விளையாட்டில்
அணிமாறல் அடிக்கடி நிகழும்.
வெற்றி பெறும் அணியிலேயே வாழ்நாள் முழுதும்
ஒட்டிக்கொண்டு வாழும் உண்ணிகள் சில பேர்.
கைகளையும் கால்களையும் பயன்படுத்தி
ஆடும் ஆட்டங்கள் பல அறிவோம்.
இந்த ஆட்டத்தை பொறுத்த மட்டில்
நாவும், பேனாவும், மைக்கும், பெருக்கியும் முக்கிய கருவிகள்.
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி பக்க பலங்கள்.
ஆபத்தான விளையாட்டு என்பதால்,
அழுகிய முட்டையை குறி பார்த்து எறிதலும்
அக்கினித் திராவகம் வீசலும்
ஈருருளிச் சங்கிலியை லாவகமாய் சுழற்றலும்
கூடுதல் தகுதிகளாகக் கொள்ளப்படும்.
அண்டப் புளுகுகளும் போலி வாக்குறுதிகளும்
ஆட்டத்தில் வெற்றி பெற சில (கு)யுக்திகள்
முதுகில் குத்தலும், காலை வாரிவிடுதலும்,
இந்த ஆட்டத்தில் ராஜ தந்திரங்கள்.
நியாயமாக விளையாட முனைபவர் உண்டு;
அந்தோ பாவம்,அவர்கள் பெறுவது தோல்வி.
இந்த விளையாட்டிலும் மக்களே பார்வையாளர்கள்;
அடிக்கடி முட்டாள்களாகும் பாக்கியம் அவர்களுக்கே!
எந்த அணி வெற்றி பெற்றாலும்
தோற்றுப் போவதென்னவோ மக்களே!
டென்னிசைக் காட்டிலும் பணம் பண்ணலாம்.
முதலீடு தேவையில்லாத காரணத்தால்
இந்த வியாபார விளையாட்டில் போட்டா போட்டி.
சந்தை இழந்த நடிக, நடிகையரும்,
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களும்
கடைசியில் இவ் விளையாட்டில் கலப்பதுண்டு.
அரிசுடாட்டில், பிளாட்டோ,ரூசோ
வள்ளுவர், சாணக்கியர் என்று பல பேர்கள்
ஆட்ட முறை பற்றி அறிவுறுத்தி இருந்தாலும்,
அவரவர் விருப்பப் படி தான்
ஆட்டத்தை ஆடுகிறார்கள்.
இன்னுமா தெரியவில்லை,தோழர்களே,
விளையாட்டின் திருநாமம் என்னவென்று?
'யாருடைய கடைசிப் புகலிடம் இவ் விளையாட்டு?' என்று
பெர்னாட்சாவைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை: