வியாழன், 9 டிசம்பர், 2010

மானுடம் பாடிய குயில்

பாரதி-
இந்திய தேசக்கவி
நம் நேசக்கவி
வெளிவேச மனிதரின்
முகத்திரை கிழித்த
ஆவேசக் கவி.

மனிதனை
மனிதனே ஒதுக்கும்
இப்பாவ பூமியில்
“காக்கை குருவி எங்கள் சாதி”
என
எல்லா உயிரையும்
தன்னோடணைத்த
நேசமிக்க மகாத்மா.

கூழுக்காகவும்
மன்னவரின்
குதூகலத்திற்காகவும்
ஆளுக்காகவும்
ஆழாக்குப் பாலுக்காகவும்
பாட்டெழுதிய
கவிஞர் நடுவில்
இவன்
ஒருவன் மட்டுமே
மானுடம் பாடிய குயில்.
மனித ஜீவன்களுக்காக
ஜெபித்த ஞானாசிரியன்.

பண்டிதர்களின்
பாதாளச் சிறையில்
தண்டிக்கப் பட்ட
அன்னைத் தமிழை
பாமரரின்
செவிகளில் ஒலித்தவன்.
அதனாலேயே
இன்று
வகுப்பறையில்
மாணவன்
வண்டமிழை
அஞ்சாமல் கற்கிறான்.

பாரதியின் கவிதைகள்
வெறிச்சோடிப் போன
மனப்பாதைகளில்
வெளிச்சம் காட்டிய
விளக்குகள்
நிஜத்தின்
பிரவேச வாயில்கள்
உள்ளத் துடிப்புகளின்
பிரசவ சாலைகள்.

பாரதி
வெறும்
தமிழ்க்கவி மட்டுமல்ல
தாகூர் சுட்டிய
“குறுகிய உட்சுவர்” களை
கடந்து வெளிவந்த
தேசியக் கவி:
சர்வதேசக் கவி.
அதனால் தான்
பாரதம் முழுவதும்
பாரதியின்
பா ரதோற்சவம் நடக்கிறது
பொதுவுடைமை மண்ணிலும்
அவனின் புகழ்க்கொடி பறக்கிறது.

பாரதி
அடங்காத
பேராசை நோயில்
சிக்கி
அலைபாயும் மனதினர்க்கு
காணி நிலந்தன்னில்
கட்டாக வாழும் வித்தை
கண்டு தெளிவித்த
கண்கண்ட மருத்துவன்.
சுரண்டிக் கொழுத்து
சுகத்தில் மிதப்பவனை
அண்டிப் பிழைத்தும்
அடிமையின் பசி
அடங்காதது கண்டு
ஜெகத்தினை
அழிக்கக் கிளம்பிய
செந்தீக் கவிஞன்.

இந்த
தேசபக்திப் பாடகன்
பொன்னில் புரள
ஒருபோதும் நினைத்தவனில்லை
மாறாக
மண்ணில் விழுந்து
அன்னையின்
மடியில் புரண்டதாக
ஆனந்தித்தவன்.

காலங்காலமாக
யுக யுகாந்திரங்களாக
பிள்ளை பெறும்
வெறும்
பண்ணைகளாக இருந்த
பெண்களை
நாய் நிலையிலிருந்து
மீட்க
இவன் தன்
கவிதைச் சவுக்குகளை
சுழற்றிய பொழுது தான்
ஆணினத்தின்
எருமை மனங்களில்
வெட்கக் கோடுகள்
இழுக்கப்பட்டன
விவேக ரேகைகள்
மலரத் துவங்கின.

இந்த
ராஜாளிக் கவிஞனின்
ராட்சதச் சிறகுகள்
படபடத்த பொழுது
எழுந்த
உரிமை உணர்வுச் சூறாவளியில்
அடிமை மரங்களின்
சரிவுகள்
ஆரம்பமாகின.

சுற்றிலும் இருந்த
சமுதாயத்தை
உற்றுப் பார்த்துவிட்டு,
பேனாவில் இருந்த மையை
கீழே ஊற்றிவிட்டு
தன் ரத்தத்தை நிரப்பி
பாரதி
எழுதத் துவங்கிய பொழுது
“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாடலின்
பிரசவம் நிகழ்ந்தது
சத்தியமூர்த்திகளையே
நடுங்க வைத்த
இந்த
ருத்ரமூர்த்தி
இன்னும் இருந்திருந்தால்...
இலக்கியத்திற்காக
நோபல் பரிசு பெற்ற
இந்தியரின் எண்ணிக்கை
இரண்டாக
உயர்ந்திருக்கும்!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான கவிதை, இன்னும் நினைவில் இருக்கிறது உங்கள் கையெழுத்து பிரதியில் படித்தது.

arunachalam j சொன்னது…

பாரதி மனித இனத்தின் அனைத்து பக்கங்களையும் அக்கறையோடு பார்த்தவன் அதற்கு விளைவு எதிர்வினை எப்படி இருக்கும் என யோசிக்காமல் தன் கருத்தை தயக்கமின்றி உறுதியோடு சொன்னவன் அதை இந்த கவிதை உறுதி செய்கிறது, சக மனிதன் , பெண் ,அனைத்து உயிரினம் குறித்தும் பாடியதை கருத்தென கொண்ட கவிதை. தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்