ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வேண்டாமே தீண்டாமை!

*இது முட்செடி
அது முந்திரி
என
வேற்றுமை பார்த்தா
வீசுகிறது
காற்று?

*பாவியின்
நிலமென்றும்
பரிசுத்தவானின்
நிலமென்றும்
பாகுபடுத்திப் பார்த்தா
பொழிகிறது
மழை?

*கருப்பாயிருந்தாலும்
சிவப்பாயிருந்தாலும்
வெளுப்பாயிருந்தாலும்
படும்
ஒளியிடத்தில் உண்டா
ஓரவஞ்சகம்?

*இன்னார்க்கு
மட்டுமே
விளைவேன் என்று
மண்ணும்
இவர்கட்கு மட்டுமே
பெய்வேன் என்று
விண்ணும்
அடம் பிடித்ததை
யாரேனும்
கண்டதுண்டா?

*யார் நட்டாலென்ன,
முளைக்கவா
மறுக்கிறது
விதை?

*எல்லோர்க்கும்
அல்லவா
தாகம் தீர்க்கிறது
தண்ணீர்!

*இயற்கையில்
இயங்கும்
உறவின் தத்துவத்தை
எங்கோ
தொலைத்துவிட்டு
செயற்கையாய்
நமக்குள்
நெடிய சுவர்களை
எழுப்பிக் கொண்டோம்.

*மாக்களில்
உண்டா
தீண்டாமை?
வண்ணம் கொஞ்சும்
மலர்களில்
உண்டா
நெருங்காமை?
மாந்தரில் மட்டும்
ஏனிந்த
மனப்பான்மை?

*இது கணினி யுகம்
உலகின்
எதிர் எதிர் மூலைகளில்
வசிக்கின்ற
மனிதர்க்கு நடுவில்
நிறம் கடந்து
மொழி தாண்டி
இனம் விலக்கி
மதம் தப்பி
நெருக்கம் பூக்கும்
புதுமை யுகம்.

*மண்ணுக்குள்
புதைக்க வேண்டிய
கற்காலத் தீண்டாமையை
மனதிற்குள்
புற்றாய்
வளர்க்கலாமா?

*மதத்தைத்
தீண்டோம்
எனச் சொல்வோம்
அது தான்
மனதின் பக்குவம்.
சாதியைத் தீண்டோம்
எனச் சொல்வோம்
அதுவே
தமிழ் நாகரிகம்.
மனிதனைத் தீண்டோம்
என்போமானால்
அது மகா அநாகரிகம்.

3 கருத்துகள்:

arunachalam j சொன்னது…

அநாகரீகம் என்பது எதுவென்று கூறுகிறது இந்தகவிதை. அறிவியல் யுகத்திலும் சாதி என்னும் இருளில் இருக்கிறோம். மதமில்லாத சாதியல்லாத சமூகம் வேண்டும். உலகத்தின் எந்த மனிதன் துன்புற்றாலும் வருந்தும் உள்ளம் வேண்டும். இயற்கை அன்னை படைத்ததெல்லாம் எல்லார்க்கும் சொந்தமடா எனது உனது என்பதெல்லாம் இடையில் வந்த எண்ணம் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. தொடருங்கள், வாழ்த்துக்கள்.

ஜகநாதன் சொன்னது…

@அருணாவுக்கு நன்றி! இனிமேலும் தொடர்வேன் உங்களின் உந்துதலோடு.

Sign in Computers சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.