அழ(ழு)கிய உலகம்
ஓட ஓடத் துரத்தும் உலகம்;
திரும்பி எதிர்த்தால் பிடிக்கும் ஓட்டம்.
முகத்துக்கு எதிரே புகழ்ந்து தள்ளும்;
முதுகுக்குப் பின்னே புறணி பேசும்.
பணத்துக்கு முன்னே பல்லைக் காட்டும் ;
ஏழையைக் கண்டால் எள்ளி நகைக்கும்;
எலும்பை வீசினால் கௌவிப் பிடிக்கும்;
எத்தனை இகழினும் மரமாய் நிற்கும்.
இளைத்தவன் காலை வாரிச் சாய்க்கும்;
வலுத்தவன் மகிழ சாமரம் வீசும்;
அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொள்ளும்;
ஆயிரம் ஆயிரம் வேசங்கள் போடும்.
தேர்தல் வந்தால் எம்பிக் குதிக்கும்;
தேரை இழுக்க முந்தி விரையும்;
தன்னலம் ஒன்றையே உயிராய் மதிக்கும்;
தர்மம் தோற்றிட சூதுகள் செய்யும்.
நீதியின் கரங்களை காசால் முடக்கும்;
சாதிகள் வளர்க்க சங்கங்கள் கூட்டும்;
அடுத்தவன் சொத்தைப் பறித்திடத் துடிக்கும்;
கெடுக்கும் வழிகளை கணக்காய்த் தீட்டும்.
பொய்யை அழகாய் மெய்போல் சொல்லும்;
போலியை அசலென உரக்கப் புளுகும்.;
இதுதான் நமது அழகிய உலகம்;
அழகிய உலகமா? அழுகிய உலகமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக