குறுங்கவிதைகள்
* ஏழை என்றும்
சிரிப்பதாயில்லை
எப்படி தலைவா
இறைவனைக் காண்பது?
*எல்லா நாளையும் விட
இன்று அம்மாவுக்கு
ஏகப்பட்ட வேலை
அன்னையர் தினம்.
*தெய்வம் நின்று கொல்லுமாம்
நின்றும் கொல்லவில்லை
படுத்தும் கொல்லவில்லை
சிரித்தபடி பாவிகள்.
*விதியே என்று
கல்லாய்க் கிடக்க
எல்லாப் பெண்டிரும்
அகலிகைகள் அல்லர்.
*குனிந்தால்
குதிரை ஏறுவார்கள்
நிமிர்ந்தே நில்.
*கோடு தாண்ட
சீதைக்கு ஆனது
ஒரு நொடி
அதனால் நிகழ்ந்த
போர் முடிய
பதினெட்டு மாதம்.
*பற.
முடியாவிட்டால்
ஓடு.
இயலாவிட்டால்
நட.
படுத்துவிடாதே.
*நடை மாறலாம்
உடை மாறலாம்
தடம் மாறக்கூடாது.
*அடங்குதல் அடிமைத்தனம்
நடுங்குதல் பேடித்தனம்
முடங்குதல் மூடத்தனம்
முயற்சி மட்டுமே மூலதனம்.
*சூரியன் மீது
கல் வீசாதீர்கள்.
கை தான் உடையும்.
*வரப்பு இல்லாவிட்டால்
அது பாத்தியில்லை
எல்லைகள் இல்லாவிட்டால்
அது தேசமில்லை
வேலி இல்லாவிட்டால்
அது விளைநிலமில்லை
ஒழுக்கம் இல்லாவிட்டால்
அது வாழ்க்கையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக