சனி, 3 டிசம்பர், 2022

                  உயிரில் உயிராய்


அம்மா நீஎனக்கு அரிய உயிர் கொடுத்தாய் !

அன்னமும்  பாலும் அன்போடு ஊட்டினாய்!

கைப்பிடித்து என்னை நடக்க வைத்தாய்!

கால் வலித்த பொழுது பிடித்து விட்டாய்!

அறியாப் பொருள்களை அறியச் செய்தாய்!

அலுக்காமல் எனது அய்யங்கள் போக்கினாய்!

தீயது நல்லது தெளிந்திடப் பழக்கினாய்!

நோய் எனக்கென்றதும் துடித்துப் போனாய்!

நல்லன செய்ய பயிற்சி அளித்தாய்!

நாவைக் காக்கும் வழிவகை சொன்னாய்!

நேசிப்பதற்குக் கற்றுக் கொடுத்தாய்!

அன்புத் தந்தையை அறிமுகப் படுத்தினாய்!

அவரை மதிக்க அறிவுரை பகன்றாய்!

வயதுக்கு வந்ததும் வரனைத் தேடினாய்!

வாழ்க்கையைச் சீராய் அமைத்துக் கொடுத்தாய்!

பேரக் குழந்தைளை அன்புடன் வளர்த்தாய்!

இத்தனை செய்தஎன் அன்புத் தெய்வமே!

உனக்கென்ன செய்தேன் இடைஞ்சல் தவிர?

எத்தனை பிறவி எடுத்து வந்தாலும் 

உத்தமி உனக்கே மகளாய்ப் பிறப்பேன்!

நித்தமும் உன்னை நினைத்து மகிழ்வேன்!

நெஞ்சில் உன்னை உச்சியில் வைப்பேன்!

உறவால் உன்னுடன் பிணைந்து கொள்வேன்!

உன் உயிரில் உயிராய் கரைந்து போவேன்! 


கருத்துகள் இல்லை: