ஞாயிறு, 4 டிசம்பர், 2022

                                   எது வளர்ச்சி ?


என்ன உலகம் என்ன மனிதர் ஒண்ணும் புரியலே 

என்று மறையும் ஏற்றத் தாழ்வு நமக்கு இடையிலே?

ஒரு பக்கம் பணக்காரன் பூசணி போல் பருக்குறான்!

மறு பக்கம் பாமரனோ கடுகாகச் சிறுக்குறான்

வலுத்தவனோ பொதுச்சொத்தை பட்டாபோட்டு விக்கிறான் 

இளிச்சவாயன் நெத்தியிலே பட்டைநாமம் தீட்டுறான்



 

மாடிவீடு கட்டியவன் கட்டாந்தரையில் தூங்குறான் 

மானங்காக்க நெய்தவனோ அம்மணமாய்த் திரிகிறான் 

ஓடி ஓடி உழைத்துங்கூட ஒருரூபா மிஞ்சல

ஒண்டக்கூட ஒரு குடிசை பூமியிலே வாய்க்கலே

பாடுபடும் ஏழைமக்கள் பசித்தீயில் வேகிறார் 

ஆடுமாடு போல் அலைந்து நாதியின்றி சாகிறார் 

விளைநிலங்கள் முச்சூடும் அடுக்ககங்கள் ஆயாச்சு 

விவசாயத் தோழரெல்லாம் வீதியோரம் வந்தாச்சு 

உழவுத் தொழில்  விழுந்து போனா சோறு கிடைக்குமா?

உயரமான மாளிகைகள் பசியைத் தீர்க்குமா?

காசுப் பற்று பெருகியதால் தேசப்பற்று குலைந்தது.

நாசமாகி மனித நேயம் குற்றுயிராய்த் துடிக்குது.

அம்பானி மட்டுமிங்கே வளர்ந்தால் போதுமா?

அய்யாசாமி அப்பாசாமி உயர வேண்டாமா?

தலை மட்டும் வீங்குவது வளர்ச்சி ஆகுமா?

தாங்கும் காலும் இணையாக வளர்ந்திட வேண்டும்

ஒட்டுமொத்த தேசமுமே செழித்திட வேண்டும்!

ஒன்றிணைந்து நலமாக உயர்ந்திட வேண்டும்!

 




கருத்துகள் இல்லை: