திங்கள், 24 ஆகஸ்ட், 2009

உண்மைச்சுதந்திரம்

எந்த நாளில் லஞ்சமொழிந்து நாடு செழிக்குமோ
எந்த நாளில் சொத்துசுகங்கள் பொதுவென்றாகுமோ
எந்த நாளில் சுரண்டும்கொடுமை அடியோ டொழியுமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

எந்த நாளில் சாதிப்பேயின் இரைச்சல் ஓயுமோ
எந்த நாளில் மதங்கள்தாண்டி மனிதம் பூக்குமோ
எந்த நாளில் மனங்கள்யாவும் ஒன்று கலக்குமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

எந்த நாளில் நதிகள் இணைந்து தாகம் தீர்க்குமோ
எந்த நாளில் பெண்ணைமதிக்கும் எண்ணம் வெல்லுமோ
எந்த நாளில் குழந்தை உழைப்பை நாடு தவிர்க்குமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

எந்த நாளில் முதுமை போற்றும் பண்பு மலருமோ
எந்த நாளில் காசில்லாமல் கல்வி கிட்டுமோ
எந்த நாளில் வறுமை ஒழிந்து வயிறு நிறையுமோ
அந்த நாளே உண்மைச்சுதந்திரம் அடைந்த நாளாகும்.

கருத்துகள் இல்லை: