வியாழன், 27 ஆகஸ்ட், 2009

எங்கே செல்கிறோம்?

ஊரை ஏய்த்தவன்
காரில் செல்கிறான்.
உயர்ந்த மாளிகை
வாசம் செய்கிறான்.
தேரை இழுத்திட
முந்தி ஓடுறான்
தேர்தல் என்றதும்
ஆடிப் பாடுறான்.

காலட்சேபம்
கேட்பதற்கென்று
கணக்கில்லாத
பெருங்கூட்டம்.
ஏழையின் பாட்டைக்
கேட்பதற்கென்று
எங்கும் எவரும்
வருவதில்லை.

இங்கே ஒருத்தியின்
நளின ஆடலை
ஈராயிரம் பேர்
ரசிக்கின்றனர்.
அங்கொரு குடும்பம்
வறுமைப் புயலில்
அணைந்து போவதை
யாரறிவார்?

ஏழையின் வீட்டு
விளக்கிற்கெண்ணெய்
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை.
எப்படி அந்த
மாளிகை உச்சியில்
நந்தா விளக்கு
எரிகின்றது?

1 கருத்து:

வானவில் சொன்னது…

நல்ல கவிதைகள் நண்பரே! ஆனால் ஏன் இந்த கோபம்?