சனி, 28 ஜனவரி, 2006

முன்னொரு காலத்தில்

(1)

தோட்டத்து வேலியருகே
நின்றபடி
தாத்தா
அப்பாவிடம் சொன்னார்,
"பார் அங்கே,
மரத்துக்கு மரம்
வேக வேகமாக தாவுதே
அது தானய்யா
செம் போத்து...
அடர்ந்த செவப்பும்
கொஞ்சம் கறுப்புமாய்
எவ்வளவு அழகு பாத்தியா?"
(2)
மிருகக் காட்சி சாலையில்
அப்பா
என்னிடம் சொன்னது,
"கூண்டுக்குள்ளே
சிவப்பாகவும்
சோகமாகவும்
உட்கார்ந்திருக்கே,
அது தானப்பா
செம் போத்து."
(3)
பொருட்காட்சி சாலையில்
ஒரு மாலைப் பொழுதில்
நான்
மகனிடம் சொன்னேன்,
"நன்றாகப்
பார்த்துக்கொள்,மகனே,
அதோ,அந்தக்
கண்ணாடிக் குடுவையில்
பாதுகாக்கப்பட்டிருக்கிறதே...
அது தான் தம்பி,
அந்தக் காலத்து
செ...ம்...போ...த்...து."

கருத்துகள் இல்லை: