வெள்ளி, 8 டிசம்பர், 2017

கவிதை

கவிதை என்பது கவிஞனின் விதைப்பு.
கவிதை என்பது உணர்ச்சிகள்  ஊர்வலம்.
காலம் கடந்தும் நிற்பது கவிதை.
ஞாலம் செழிக்க முளைக்கும் அதன் விதை.
போர் வாளாகி அநீதி அறுக்கும்.
புரட்சி விதைகளை எங்கும் தூவும்.
புதுமை மலரப் போர்க்கொடி உயர்த்தும்.
புதிய பாதை சமைக்க உதவிடும்.
காதல் துளிர்க்க கைகள் நீட்டும்
அன்பெனும் வீணையை அழகாய் மீட்டும்.
சாதிப் பேய்க்கு சவுக்கடி கொடுக்கும்
சமய வெறிக்கு சவக்குழி தோண்டும்..
கவிதைக்கு என்றும் சாவென்ப தில்லை
சரித்திரமாய் அது நின்று நிலைக்கும்.
பட்டாம் பூச்சி பறக்கும்  கவிதை.
பறையின் முழக்கம் அதிரும் கவிதை..
வானம் எழுதும் வானவில் கவிதை.
மின்னல் என்பது மறையும் கவிதை.
கொட்டும் அருவி இயற்கையின் கவிதை.
இடியின் முழக்கம் புரட்சிக் கவிதை.
நந்தி வர்மனைக் கொன்றது கவிதை.
கம்பன் மகனைக் கவிழ்த்தது கவிதை.
கீரனை எரித்தது சிவனின் கவிதை.
வேலனை ஈர்த்தது அவ்வையின் கவிதை.
சின்னக் குழந்தையின் சிரிப்பொரு கவிதை.
கன்னக் குழியின் அழகொரு கவிதை.
காவிரி நதியின் பாய்ச்சல் கவிதை.
காட்டு அருவியின் வீழ்ச்சியும் கவிதை.
மழலையின் அழுகை மாபெரும் கவிதை.
ஆண்மயில் ஆட்டம் அழைக்கும் கவிதை
குயிலின் இசையோ உருக்கும் கவிதை..
பேரூர் சிற்பம்... பேசாக் கவிதை.
ரவி  வர்மாவின் ஓவியம் கவிதை.

காதலை வளர்க்கும் கவிதை வாழ்க!
மோதல்கள் தடுக்கும் கவிதை வாழ்க!
பாதைகள் போடும்  கவிதை வாழ்க !.
மாதரைப் போற்றும் கவிதை வாழ்க !









ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஈகை என்பது தமிழனின் ஒப்பற்ற பண்பாடு. கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரன் தமிழன். இரப்பவர்க்கு இல்லை என்று சொல்லாதவன். வாரி வழங்கிய வள்ளல்களைப் பற்றி தமிழ் இலக்கியம் கதை கதையாகச் சொல்லும் .
படர்வதற்கு கொழுகொம்பில்லாத முல்லைக் கொடிக்கு தேரீந்தான் பாரி வள்ளல்.
தோகை விரித்து ஆடிய மயிலுக்கு , குளிரில் நடுங்குகிறது என நினைத்து நனைந்த அதன் உடலுக்கு பொன்னாடை போர்த்தினான் பேகன்.
குருசேத்திர யுத்தத்தில் இருதரப்புப் படை வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்தான் உதியஞ் சேரலாதன் என்னும் மன்னன்.
தலையையே கொடுக்கத் துணிந்தான் குமணன்.
இப்படிக் கொடுத்து மகிழ்தலும் விருந்து புரத்தலும் அருந்தமிழ் மன்னர்களின் குணமாய் இருந்தது.
அதியமான் நெடுமானஞ்சி என்றொரு அரசன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். விருந்தினர்களை உபசரிப்பதிலே அவனை விஞ்சும் வேந்தர்கள் யாருமில்லை. புன்னகை பூத்த இன்முகத்தோடு தன்னை நாடி வரும் விருந்தினர்களை உபசரிப்பானாம். ஒருநாள் சென்றாலும் ,இருநாள் சென்றாலும், பலநாள் சென்றாலும், தனியாகச் சென்றாலும் பலரோடு சேர்ந்து சென்றாலும் முதல் நாள் எப்படி விரும்பி வரவேற்று உபசரித்தானோ அப்படி எல்லா நாட்களிலும் விருந்தினர்களை முகம் கோணாது அகமலர்ச்சியுடன் அதே விருப்பத்தோடு உபசரிப்பானாம் அதியமான் நெடுமானஞ்சி. இதை அவ்வைப் பாட்டி ஒரு அருமையான பாடலில் அழகாக விவரிக்கிறார்:
                     "ஒரு நாட் செல்லலம்; இருநாட் செல்லலம் ;
                        பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
                       தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!
இதுவல்லவோ விருந்து புரத்தல்!
                       

திங்கள், 30 அக்டோபர், 2017

அளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின் மூளைத்திறன் பாதிக்கப்படும். மயிற்பீலி மிகவும் லேசானது தான். ஆனாலும் அதை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு  முறிந்து போகும். இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகிறது கீழ்க்காணும் குறள்.
                          " பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
                            சால மிகுத்துப் பெயின்"
எனவே அளவுக்கு மீறும் எதுவுமே அழிவில் தான் முடியும்.  

சனி, 28 அக்டோபர், 2017

தமிழ் வயலில் எழுதி நீண்ட நாட்கள் ஆகி விட்டன. பெரியதொரு காரணம் ஏதுமில்லை.,சோம்பலைத் தவிர. இனி ஒவ்வொரு நாளும் ஒரு வரியாவது எழுதத் திட்டம். எல்லோர்க்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றி.

செவ்வாய், 9 ஜூன், 2015

சின்னஞ் சிறு வயதில்


    
         காந்தி கிராமப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பள்ளி ஆண்டு விழாவில் காந்தியத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த பொழுது அது எத்தனை பேரைக் கவர்ந்ததோ தெரியாது ஆனால் பன்னிரண்டு ‘ஆ’ பிரிவு மாணவி சௌந்தரவடிவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது உண்மை. பொது வாழ்வில் தூய்மை, கொண்ட கொள்கையில் பிடிப்பு, சத்தியத்திலிருந்து பிறழாமை, நேரந் தவறாமை, நேர்மை போன்ற கருத்துக்கள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்து போயின. காந்தியின் பிடிவாதம் அவளுக்கும் பிடித்தமாய் இருந்தது. தடியடியோ, சிறைவாசமோ அவரை, கொண்ட கொள்கையிலிருந்து இம்மி அளவு கூட பிறழச் செய்ய முடியவில்லை என்பது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்ததோடு, அந்த மாமனிதன் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோமே என்று பெருமையாகவும் இருந்தது. ‘ரத்தம் சிந்தாத யுத்தம்’ என்ற சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய அந்தப் பொக்கை வாய்க் கிழவனின் வாழ்க்கை முழுதிலும் அறத்தின் சாரம் மட்டுமே நிரம்பி வழிந்ததாக அவள் உணரலானாள்.
          பள்ளி ஆண்டு விழா முடிந்து வீட்டிற்கு சென்ற சௌந்தரவடிவு மறுநாள் முதல் செய்ய வேண்டிய சில பணிகளை திட்டமிட்டுக் கொண்டாள். அந்த வாரத்தின் இறுதியில் ஒத்த கருத்துடைய தன் சக தோழிகள் சிலருடன் சேர்ந்து ‘காந்தி மன்றம்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தினாள். அது இயங்கத் தொடங்கிய இடம் அவள் வீட்டு மொட்டை மாடி. அதற்காக தன் அப்பாவின் அனுமதியைப் பெற்றிருந்தாள்.
          தன் மகளை நினைத்து பொன்வண்ணனுக்கு அளவில்லாத பெருமை. ‘’இந்தச் சின்ன வயசுல இவளுக்குத்தான் காந்தியக் கருத்துக்களில் எவ்வளவு ஈடுபாடு!’’ என்று அடிக்கடி வியப்பார். பொன்வண்ணன் ஒரு அரசாங்க அதிகாரி. வருவாய்த் துறையில் முக்கிய பதவியில் பணிபுரிந்து வந்தார். ‘பொழைக்கத் தெரியாதவன்’ என்று நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்படுபவர். சக அதிகாரிகளின் மதிப்பீட்டில், அவர் நடைமுறைக்கு ஒத்துவராத, கிறுக்குத்தனமான சில கொள்கைகளை கட்டி அழுது  கொண்டிருந்தார். பெரும்பாலான அதிகாரிகள் அத்தகைய காலாவதியான கொள்கைகளுக்கு ஈமச் சடங்கு நடத்தி விட்டனர். அந்தப் பாவப்பட்ட கொள்கைகள் பின்வருமாறு: நேர்மை, நாணயம், நியாயம், சத்தியம், உழைப்பு.
          பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த பொன்வண்ணனுக்கு இயற்கையாகவே அற உள்ளம் அமைந்திருந்தது. ஒட்டு மொத்தக் குடும்பமும் அவருடைய ஒரு சம்பளத்தில் ஜீவித்து வந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும் கல்லூரியில் பட்ட வகுப்பிலும் மூன்றாவது பெண்ணான சௌந்தரவடிவு பன்னிரண்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர். அடுத்த ஆண்டு சௌந்தரவடிவை கல்லூரியில் சேர்க்க வேண்டும்.
          குடும்பச் செலவுகள், கல்லூரிக் கட்டணங்கள், பஸ் கட்டணம்,இதரச் செலவுகள் என்று பணம் தண்ணீராய்ச் செலவழிந்து கொண்டிருந்தது. பிரமப் பிரயத்தனம் செய்து தான் ஒவ்வொரு மாதத்தையும் ஓட்ட வேண்டி இருந்தது. நேர்மையான அதிகாரியான பொன்வண்ணனுக்கு வாழ்க்கையைச் சமாளிக்க கடனாளி ஆவது தவிர்த்து வேறு வழி புலனாகவில்லை. சாண் ஏற முழம் வழுக்கும் வாழ்க்கையில் ஒருவரால் வேறென்ன செய்ய இயலும்? அலுவகத்தில் எல்லா வித நல நிதிகளிலும் கடன் வாங்கியாகி விட்டது. வைப்பு நிதியிலிருந்தும் முன்பணம் எடுத்தாயிற்று. எப்போதோ வாங்கிப் போட்ட ஐந்து சென்ட் காலி மனையையும் தங்கவில்லை. மனைவிக்கு கல்யாணத்தின் பொழுது போட்ட கொஞ்ச நகையும் அடமானத்தில். அப்படியும் போதாமல் பொன்வண்ணன் மூன்று வட்டிக்கு பணம் புரட்டி இருந்தார். இத்தனைக்கும் அதிகம் ஆசைப்படாத மகள்கள். சிக்கனமாகக் குடும்பம் நடத்தும் மனைவி. எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகலாம் என்ற நிலையில் தான் அவர்களின் வாழ்க்கைக் கப்பல் ஓடிக் கொண்டிருந்தது.
          அலுவலகத்தில் சகப் பணியாளர்கள் எப்பொழுதும் கலகலப்பாக அரட்டையடித்துக் கொண்டிருக்க, பொன்வண்ணன் மட்டும் ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என மாங்கு,மாங்கென்று வேலை செய்து கொண்டிருப்பார். அவர்களின் வாரிசுகள் அநேகமாக பொறியியல், மருத்துவம், மற்றும் கணினியியல் படித்துக் கொண்டிருந்தார்கள். திருமணம் போன்ற விசேசங்களுக்கு வரும்பொழுது அவர்களின் மனைவியரும்,குழந்தைகளும்      ஆடம்பரமான உடைகளுடனும்,நவீனபாணி நகைகளுடனும் அமர்க்களமாக காட்சியளிப்பார்கள். உணவு விடுதிகளில், திரை அரங்குகளில், விசேச நாட்களில் மதுக் கடைகளில் பணத்தை வாரி இறைப்பார்கள். அவர்களில் யாரும் கடன் வாங்கியதாகவோ, காலி மனைகளை விற்றதாகவோ, நகைகளை அடகு வைத்ததாகவோ பொன்வண்ணன் ஒருநாளும் கேள்விப்பட்டதில்லை. எப்படி அவர்களுக்கு பணம் வந்து குவிகிறது என்று அரசல், புரசலாக அவருக்கு செய்திகள் வரும். ‘’சீ..நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’’ என்பதாகக் கருதி அவற்றை ஒதுக்கி விடுவார். இவ்வளவு பெரிய நாணயஸ்தரும் கூட வாட்டி ‘வளவு’ எடுத்த பொருளாதார நெருக்கடியில் கொஞ்சம் சபலத்திற்கு ஆளாக நேர்ந்தது.  
          ஒரு நாள் மதியம் பொன்வண்ணன் தன் நண்பர் ஒருவருடன் தனி அறையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சொந்த விசயங்களை பரிமாறிக் கொள்ளுமளவுக்கு நெருக்கமான நண்பர். ‘’கடவுள் ரொம்பவும் சோதிக்கிறாரப்பா. ஒவ்வொரு மாதமும் கடைத்தேறுவதற்குள் கண்ணாமுழி இரண்டும் நட்டுப்போகுது.’’ என்று அங்கலாய்த்துக் கொண்டார் பொன்வண்ணன். ‘’ நீயே கஷ்டங்களை வருவிச்சுக்கிட்டு, அப்புறம் புலம்பி என்ன பயன்? மற்றவங்க மாதிரி கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பாரு...கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்துரும். நட்டமா நின்னு  ஒடிஞ்சி போறத விட நாணலைப் போல வளைஞ்சி போவதே அறிவுடைமை. நமது அலுவலகத்தில் நிறையப் பேர் தேவையானவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து கனத்த பைகளோடு வீட்டிற்குப் போகிறார்கள். வீட்டில் அவர்களுக்கு ஏக மரியாதை. நேர்மையா இருந்து பெருசா என்ன சம்பாதிச்சிருக்கே, கடனாளிங்கற பட்டத்தைத் தவிர?
          ரொம்ப நல்லவனா இருப்பது எப்பவுமே ஆபத்து.’’ என புத்திமதி(?) கூறினான் நண்பனாகப்பட்டவன். அவனும் கூட ஒரு புது அபார்ட்மென்ட் வாங்கி இருப்பதாக அலுவகத்தில் பேசிக்கொள்வது அவர் காதுக்கும் எட்டியிருந்தது. நண்பனின் புத்திமதி அதை உறுதிப்படுத்தியது. ஏனோ அவனுடைய பேச்சு திரும்பத் திரும்ப அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது.
          நண்பன் மட்டுமல்ல, காலையில் அவரிடம் வந்த ஒரு வியாபாரியும்  பொன்வண்ணனின் மனதில் கல்லெறிந்துவிட்டுப் போயிருந்தார். அந்த வியாபாரி அவரிடம் மிகவும் பணிவாக,’’ ஐயா, என் தொழில் சம்பந்தப்பட்ட கோப்பு ஒன்று உங்கள் மேஜையில் உள்ளது. அதில் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்களானால், உங்களுக்கும் மேலதிகாரி எனக்குச் சாதகமாகச் செய்து கொடுப்பதாக வாக்களித்துள்ளார். உங்களுக்குள்ள பங்கைக் கொடுத்துவிடுகிறேன்.’’ என்று மெதுவான குரலில் விண்ணப்பித்தார். ‘’முதலில் வெளியே போங்கள். நான் நீங்கள் நினைக்கிற ஆளில்லை.’’ என்று பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேறினார். ஆனால், மதியம் நண்பனின் புத்திமதியைக் கேட்டதற்குப் பிறகு பொன்வண்ணனுக்கு வியாபாரியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரே குழப்பமாய் இருந்தது. தலை விண்ணென்று வலிக்க ஆரம்பித்தது.
          பொன்வண்ணன் வீட்டிற்குச் சென்ற பொழுது மணி ஆறரை ஆகியிருந்தது. அவருடைய முதல் இரண்டு பெண்களும் கல்லூரியிலிருந்து ஏற்கனவே வந்திருந்தனர். அவர் அப்படியே நாற்காலியில் சாய்ந்து கொண்டார். உள்ளிருந்து வந்த மனைவி,’’ ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க?’’ என்றாள் கவலை மிக. ‘’லேசாத் தலைவலி. கொஞ்ச நேரத்துல சரியாப் போயிடும்.’’ என்றார் பொன்வண்ணன். அதற்குள் மூத்தவள் அமிர்தாஞ்சனம் எடுத்து வந்து நெற்றியில் மெதுவாய்த் தடவ, இரண்டாமவள் ஒரு குரோசின் மாத்திரையை நீட்டினாள். அந்த அன்பில் அப்படியே உருகிப் போனார் அந்த தந்தை. அவருடைய கவலைகள் எல்லாம் காணாமல் போயின. சாத்தான் செத்துப் போனான். அந்த வியாபாரியும் அவரின் நண்பரும் அந்தக் கணத்தில் தொலைந்து  போயினர். ‘அப்பா’ என்றபடி மூன்றாவது மகள் சௌந்தரவடிவு உள்ளே வந்தாள். அவள் கையில் லூயி ஃ பிஷர் எழுதிய ‘காந்தி வாழ்க்கை’ என்ற மொழி பெயர்ப்பு நூல் இருந்தது. கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததற்காக பள்ளியில் கொடுத்தார்களாம். ‘’சரியான புத்தகத்தைத் தான் உனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் அந்த அன்பான அப்பா. பிறகு சண்முகவடிவு புத்தகப் பையை மேசையின் மீது வைத்துவிட்டு சமையல் அறையிலிருந்த அம்மாவிடம் சென்றாள்.
          அம்மா கொடுத்த இரண்டு கோப்பை காஃபியில் ஒன்றைத் தான் வைத்துக்கொண்டு இன்னொன்றை அப்பாவிடம் நீட்டினாள் சௌந்தரவடிவு. இருவரும் பருகி முடித்தபொழுது, ‘’சார், சார் ‘’ என்று யாரோ வாசற் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. சௌந்தரவடிவு கதவைத் திறக்க, “அய்யா இருக்காரா? பார்க்க வேண்டும்” என்றார் கதவைத் தட்டியவர். “உள்ள வாங்க” என்ற சௌந்தரவடிவைத் தொடர்ந்து உள்ளே வந்தவரைப் பார்த்துத் திகைத்துப் போனார் பொன்வண்ணன். வந்தவர் வேறு யாருமல்ல..காலையில் அலுவலகத்திற்கு வந்த அதே வியாபாரி தான். சௌந்தரவடிவு அம்மாவிடம் சென்று விட்டாள்.  “உட்காருங்க” என பொன்வண்ணன் கூற, அந்த வியாபாரி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். “என் வீடு உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார் பொன்வண்ணன்.உங்கள் நண்பர் தான் உங்கள் முகவரியைக் கொடுத்து உங்களை வீட்டில் பார்க்கச் சொன்னார். அலுவலகத்தில் மனம் விட்டுப் பேச முடியவில்லை. இங்கு வந்தது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள். நான் தொழிலில் பல லட்சங்கள் முடக்கியுள்ளேன். என்னுடைய கோப்பில் நீங்கள் எனக்குச் சாதகமாக கையொப்பம் இட்டீர்களானால், உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. உங்கள் சன்மானத்தில் ஒரு பகுதியை முன் தொகையாக இந்தக் கவரில் வைத்துள்ளேன். மீதியைக் காரியம் முடிந்த பிறகு தருகிறேன்.” என்று கூறி, ஒரு பெரிய கவரை மேசையின் மீது வைத்தார் அந்த வியாபாரி.
          ஒரு கணம் பொன்வண்ணன் அதிர்ந்து போனாலும் கவரை வேண்டாமென்று மறுக்கவில்லை. எடுத்துக் கொள்ளலாமா என்று ஒரு சின்னச் சபலம். பொழைக்கத் தெரியாதவன் என்ற பட்டத்தை துறந்து விடலாமா என்றொரு தடுமாற்றம். சாத்தானின் கை ஓங்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில், புயலாக அங்கு வந்தாள் சௌந்தரவடிவு. அப்பாவின் எதிரில் இருந்த கவரை எடுத்து அந்த வியாபாரியிடம் கொடுத்துவிட்டு பேசத் தொடங்கினாள். “அய்யா, நான் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசுவதாக நினைக்காதீர்கள். உங்களைப் பார்த்தால் படித்த பெரிய மனிதரைப் போலத் தோன்றுகிறீர்கள். ஆனால் உங்கள் செய்கை அப்படி இல்லை. எங்கப்பா ஒரு கையெழுத்துப் போட்டால் ஒரு பெரிய தொகை தருவீர்கள். இன்னும் பல பேருக்கு கையெழுத்துப் போட்டால் பல லட்சங்கள் கிடைக்கக் கூடும். கல்லூரிக் கட்டணங்களைக் கட்டிவிடலாம். அம்மாவின் நகைகளை மீட்டு விடலாம். காலி மனை வாங்கலாம். எல்லாம் சரிதான். ஆனால் எங்கள் அப்பாவின் இழப்பு என்ன தெரியுமா? இது வரை அவர் கட்டிக் காத்து வந்த நேர்மை...குடும்பப் பாரம்பரியம்...எல்லோர் மத்தியிலும் தலை நிமிர்ந்து நடக்கும் கம்பீரம். எங்களின் இழப்பு என்ன தெரியுமா? நேர்மையாளர் பொன்வண்ணனின் மகள்கள் என்னும் பெருமிதம், கேவலம், ஒரு சில ஆயிரங்களுக்காக இவ்வளவையும் நாங்கள் இழக்க வேண்டுமா? கல்லூரிப் பட்டம் கிடைக்காவிட்டால் போகட்டும். நேர்மையான அதிகாரி பொன்வண்ணனின் மகள்கள் என்ற பெயரே எங்களுக்குப் போதும்.” “அம்மா, நான் சொல்வதைச் சற்று.....” என்று ஆரம்பித்த வியாபாரியை இடைமறித்த சௌந்தரவடிவு, “ அய்யா, நான் தவறாகப் பேசியிருந்தால் மன்னியுங்கள். நாங்கள் அமைதியாக, அறவழியில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வாழ்க்கை இனியும் தொடர தயவுசெய்து அனுமதியுங்கள்.” என்று வேண்டினாள்.
          சௌந்தரவடிவின் பேச்சு அந்த வியாபாரியை அசைத்திருக்க வேண்டும். அவர் உடனே அவளை நோக்கி, “ அம்மா, சின்ன வயசானாலும் அறிவுபூர்வமாகப் பேசுகிறாய். என் தவறு எனக்குப் புரிகிறது. தவறு செய்யாதவர்களை தவறு செய்யத் தூண்டுவது மிகப் பெரிய தவறு என்றொரு பாடத்தை இன்று கற்றுக் கொண்டேன். எனக்கு வரவேண்டிய தொகை விதிகளின்படி மெதுவாக வரட்டும். நீங்கள் இத்தகையதொரு தந்தையைப் பெறவும் உங்கள் தந்தை உங்களை மகள்களாகப் பெறவும் தவம் செய்திருக்க வேண்டும்.” என்று வாயார வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.
          பொன்வண்ணன் தன் மகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சின்னக் குழந்தை போல கேவிக்,கேவி அழுதார். “ நீ என் தெய்வம் அம்மா! தப்புச் செய்ய இருந்த என்னைக் காப்பாற்றிய உன்னைக் கும்பிடணும் போல இருக்கம்மா.” என்று தேம்பியவரை “ என்னப்பா, பெரிய,பெரிய வார்த்தைகளைச் சொல்லறீங்க. உங்களால் எப்பவுமே தப்புப் பண்ண முடியாதப்பா” என்று தேற்றினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சௌந்தரவடிவின் தாய் மற்றும் சகோதரிகளின் கண்கள் கசிந்தன. சுவரில் மாட்டப்பட்டிருந்த படத்திலிருந்து மகாத்மா தம் புன்னகையால் அவர்களை ஆசீர்வதித்தார்.            
 

சனி, 31 ஜனவரி, 2015

உடலுக்குள் ஒரு விவாதம்

ஒரே இரைச்சல். உடல் உறுப்புகளுக்கு இடையே கடுமையான விவாதம். தங்களில் யார் பெரியவர் என்பதே விவாதத்தின் தலைப்பு. "நாங்கள்  இல்லாவிட்டால் நடக்க முடியாது . ஓட முடியாது. நிற்கவும் முடியாது. உடலைத் தாங்குவதே நாங்கள் தான் " என்று கால்கள் முழங்கின. கைகள் சும்மா இருக்குமா? "நாங்கள் இல்லாவிட்டால் எந்தப் பொருளையும் எடுக்க முடியாது . வைக்க முடியாது. யாருக்கும் உதவ முடியாது. நட்புக்கு உதாரணமாக வள்ளுவரே எங்களைப் பாடியிருக்கிறார். நாங்கள் இல்லாவிட்டால் ரேகை பார்த்து சோதிடம் பார்த்து பல பேர் பிழைக்க முடியாது " என்று ஓங்கி அடித்துச் சொல்லின கைகள். இதைக் கேட்ட எலும்புகள் ,"நாங்கள் இல்லாவிட்டால் நீங்கள் எப்படி இயங்க முடியும்?இயக்கங்களுக்குக் காரணமானவர்களே நாங்கள்  அல்லவா? என்று எம்பிக் குதித்தன. தசைகளுக்குப் பொறுக்க முடியவில்லை. "எலும்புகளே, ஏன் இந்தத் தற்பெருமை? நாங்கள் சுருங்கி,விரிந்தல்லவா உங்களை இயக்குகிறோம்?" என்று எதிர்க் குரல் கொடுத்தன. " கொஞ்சம் நிறுத்துகிறீர்களா உங்கள் சுய புராணத்தை? நாங்கள் கடுமையாக உழைத்து உணவுப் பொருள்களை செரித்து எளிய பொருள்களாக மாற்றுவதை மறந்து விடாதீர்கள்." என்று ஆர்ப்பரித்தன செரிப்பு உறுப்புகள். உடனே நுரையீரல் ,"செரித்த உணவை எரித்து சக்தியை உற்பத்தி செய்வதற்கு ஆக்சிஜனை அனுப்புவது நானல்லவா?"என்று தன் முக்கியத்துவத்தை நிலைநாட்ட முயன்றது. இதைக் கேட்டதும் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. "செரித்த உணவையும் ஆக்சிஜனையும் நானல்லவா ரத்த ஓட்டத்தின் மூலம் எல்லாத் திசுக்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்? "என்று தன் தரப்பு நியாயத்தை முன் வைத்தது இதயம். "நாங்கள் அமைதியாக இருப்பதால் எல்லோரும் ஒரேயடியாகக் குதிக்கிறீர்களே? நீங்கள் உருவாக்கும் கழிவுப் பொருள்களை நாங்கள் வெளியேற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள். உடல் நாறிப் போய்விடும் ." என்று எச்சரிக்கை செய்தன கழிவு உறுப்புகள்."உங்கள் எல்லோர்க்கும் ஒரு போர்வையாக பாதுகாப்பு கொடுத்து வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் கிருமிகளிடம் இருந்தும் காப்பாற்றுகின்ற என்னை மறந்து விட்டீர்களே? என்று பரிதாபமாகக்  கேட்டது தோல் . இப்படியாக பல்,கண்,காது முதலான பல உறுப்புகளும் தங்கள் தரப்பு நியாயங்களை உரத்த குரலில் எடுத்துக் கூறின. இதுவரை அமைதி காத்த மூளை  மெல்லிய குரலில் ,ஆணித்தரமாகச் சொன்னது, "உங்களுக்கெல்லாம் கட்டளையிட்டு செயல்பட வைத்து உடலின் சமநிலையைப் பராமரிக்கிற மிகப் பெரிய பொறுப்பு என்னுடையது. என்னைத் ' தலைமைச் செயலகம் ' என்பார்கள். இதை எல்லாம் மறந்துவிட்டு வெட்டிக் கூச்சல் போடுகிறீர்களே? "
                                            எல்லா உறுப்புகளும் தலை கவிழ நின்றன. உடனே மூளை, "சரி,சரி,எல்லோரும் அவரவர் வேலைகளைச் செய்யத் தொடங்குங்கள் "என்று கட்டளை பிறப்பித்தது.

திங்கள், 26 ஜனவரி, 2015

அன்பென்ற மொழியாலே

வார்த்தைகளால் யாரையுமே பழிக்காதே
வசவுகளால் இதயங்களைக் கிழிக்காதே
நல்லுறவை வன்முறையால் இழக்காதே
நட்புறவை இழிமொழியால் துளைக்காதே

அன்பென்ற மொழியாலே அகிலத்தை இணைக்கலாம்
அறிவிலாப் போர்ப்பூசல் நிகழாமல் தடுக்கலாம்
எல்லோரும் ஓரினமாய் எப்போதும் கூடலாம்
ஏழைபணக் காரரென்ற பேதத்தை ஒழிக்கலாம்

பழிக்குப்பழி என்பதெல்லாம் நல்ல வழியில்லை
பகையுணர்வு கொண்டுவரும் மாளாத தொல்லை
மறக்காதே என்றைக்கும் வள்ளுவனின் சொல்லை
மனிதர்தமை நேசிக்க இல்லையொரு எல்லை

ஏழைக்கு என்றென்றும் நேசம் காட்டு
எதிரிக்கும் நட்புடனே கரத்தை நீட்டு
எவ்வுயிரும் இன்பமுற அன்பை மீட்டு
என்றுமே அன்புவெல்லும் எனும் தமிழ்பாட்டு

சலித்தாலும் சபித்தாலும் துயரங்கள் தீராது
சன்மானம் கொடுப்பதனால் தரித்திரமும் போகாது
எதிர்நின்று போராடி வாழ்க்கையிலே வெல்லலாம்
எண்ணற்ற வெற்றிகளை உழைப்பாலே அள்ளலாம்

முன்னேறத் துடிப்பார்க்கு வேண்டும்நல் முயற்சி
முதுமையிலும் நலமாக தேவையுடற் பயிற்சி
உழைப்போர்க்கு என்றுமுண்டு வாழ்விலே உயர்ச்சி
உண்மையே உரைப்பார்க்கு ஏதிங்கு தாழ்ச்சி?
(வசந்த வாசல் கவிதைச் சிறகுகள்-2015)


  

இது ஆத்திச் சூடி அல்ல

அன்பே வெல்லும்            
ஆதவன் வணங்கு
இனியன மொழி
ஈரம் நெஞ்சில் கொள்
உறவு மதி
ஊருக்கு உழை
எட்டுக சிகரம்
ஏணியாய் இரு
ஐயம் நீக்கு
ஒன்றே உலகம்
ஓதுதல் ஒழியேல்
ஔவை வழி நில்

கணினி கைக்கொள்
காவியம் செய்
கிசு கிசு தவிர்
கீழ்மை விலக்கு
குற்றம் ஒதுக்கு
கூர்மதி பெறு
கைத்திறன் பெருக்கு
கொல்லல் ஒழி
கோபம் அடக்கு

சங்காய் முழங்கு
சாதி வெறு
சிரம் உயர்த்தி நட
சீறுதல் கவசம்
சுவர்களை உடை
சூது வெறு
சைவம் நன்று
சொற்றிறம் பழகு
சோம்பல் கெடுதி

தன்னை அறி
தானம் செய்
திங்கள் போற்று
தீயன மறு
தன்னலம் தவிர்
தங்கம் வெல்
தடை உடை
தனிமை கொடுமை
தலைமை கொள்

நல்லன எண்ணுக
நாட்டை நேசி
நித்திரை குறை
நீதி தவறேல்
நுங்காய் பயனளி
நூலகம் செல்
நோதல் தவிர்

தாயே தெய்வம்
தாமரை அழகு
திங்கள் போற்று
தூண் என நில்
தேன் நல்மருந்து
புனிதனாய் வாழ்
புதுமை காண்
பழமை நன்று

அன்பு செய்
அறிவை விரி
அருள் பெறு
அல்லல் ஒழி
இதமாய் பழகு
இழிசெயல் விலக்கு

வல்லமை வளர்
வன்முறை வெறு
வண்டமிழ் விரும்பு
வானினும் உயர்
விருந்து பேண்
விழுதென உதவு
வைதல் தவறு
வையம் நேசி

பூமியாய் பொறு
பெண்மை போற்று
பேதமை விலக்கு
பேடிமை நீக்கு
எளிமை போற்று
ஏற்றமுற வாழ்      



    

வெள்ளி, 16 ஜனவரி, 2015

அழகின் சிரிப்பு

வான் கிழிக்கும் ஒளிமின்னல் கீற்றினிலும்
    வைரமாய் ஒளிர்கின்ற விண்மீன் தமிலும்
தேன்தமிழில் பாடுகின்ற பெண்ணின் குரலிலும்
      தெறிக்கின்ற நீர்த்துளியில் தெரியும் உருவிலும்
மீன்பாய்ந்து நீர்கிழிக்கும் சாகசச் செயலிலும்
        மின்மினியின் வழிகாட்டும் வெளிச்சம் தனிலும்
கானுறையும் பெண்மானின் மிரட்சி தனிலும்
        காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

ஊரோர மாஞ்சோலைக் குயிலின் பாட்டில்
     உருண்டோடும் சகடத்தின் ஒலியின் அதிர்வில்
ஏர்பிடித்துச் செல்கின்ற உழவன் நடையில்
     எழுகின்ற கதிரோனின் இளங்காலைத் தோற்றத்தில்
சீர்மிக்க சித்திரையின் முழு வெண் நிலவில்
     செங்கரும்பு தருகின்ற தித்திக்கும் சாற்றில்
கார்கால ஆண்மயிலின் கண்கவரும் ஆட்டத்தில்
    காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

ஓடுகின்ற மான்கன்றின் ஒய்யார நடைதன்னில்
     ஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகத்தின் வாழ்முறையில்
பாடுகின்ற அருவிகளின் தொலைதூரச் சத்தத்தில்
      பகலோனின் வெப்பத்தால் பனிஉருகி வழிகையிலே
தேடிவந்த இரைதன்னை பறவையினம் பகிர்கையிலே
       தென்னை இளநீரதனின் தித்திக்கும் சுவையினிலே
கூடிநின்று குலவையிடும் மங்கையரின் எழிற்குரலில்
       காண்கின்றார் பாவேந்தர் அழகின் சிரிப்பு!

சனி, 29 நவம்பர், 2014

இனியவை கூறல்

இனியவை கூறல்
கனிபோன்ற இன்சொற்கள் விலக்கி நச்சுக்
     காயன்ன கடுஞ்சொற்கள் மொழிவோர் மூடர்.
நுனிநாக்கில் சனிபுகுந்தால் சண்டை மூளும் ;
       நூற்றுக்கு நூறிந்த மூதுரை உண்மை.
தொனியதிலே கடுமையதைச் சற்றே குறைத்துத்
       தோழமையாய் மொழிகின்ற இனிய சொற்கள்
மனமெங்கும் மகிழ்ச்சியதைப் பூக்கச் செய்யும்;
        மனிதத்தை உச்சிக்கே கொண்டு சேர்க்கும்.

நல்லதொரு ஆபரணம் இன்சொல் ஒன்றே ;
          நகைமற்றும் முத்தெல்லாம் வெற்றுப் பொருளே!
இல்லத்தில் ஊர்களிலே தேசம் எங்கும்
          இன்சொல்லே ஒற்றுமையைப் பேணிக் காக்கும்.
கல்லெறிந்தால் உடலினிலே வடுவுண்  டாகும்;
          கடுஞ்சொல்லால் இதயமதோ வெடித்துச் சிதறும்.
சொல்லெல்லாம் அன்புதனைக் கலந்து சொன்னால்
           சொல்வோரும் கேட்பவரும் மகிழ்ந்து சிரிப்பர்.

துன்பம்தரும் வார்த்தைகளைச் செவி மடுப்போர்
             துடிதுடித்தே முகந்திரிவார்; கொடுமை யன்றோ!
இன்பம்தரும் சொற்களையே பேசிடுவோம்.
             இதயத்தை அன்பாலே நிரப் பிடுவோம்.
மன்பதையில் வாழ்கையிலும் மறைந்த பின்னும்
               மகிழ்வூட்டும் இசைபெருக்கும் இன்சொல் லன்றோ!
வன்சொற்கள் என்றென்றும் நட்பை முறிக்கும்.
               வள்ளுவரின் அடிவணங்கி இன்சொல் நவில்வோம்.
         
             
        

திங்கள், 11 நவம்பர், 2013

இது தான் வாழ்க்கை

ஒரு நாள்  போல்
மறு நாளில்லை.
நேற்றைய சந்தோசம்
இன்று காணோம்.
இன்றைய சோகங்கள்
நாளை மாறலாம்.
மாறாமல் போவதும்
சாத்தியமானதே.
வாய்த்த படிக்கு
வாழ்ந்து முடிப்போம்.
ஒற்றை இரவில்
உற்ற துன்பங்கள்
விலகுதல் என்பது
விளையாட்டல்ல.
இறக்கை இல்லாமல்
பறக்க முயல்வது
இயற்கைக்கு முரணானது.
திட்டமிட்டாலும்
இல்லாவிடினும்
தன்பாட்டுக்குப் போகும்
வாழ்க்கை.

மீண்டும் குறுங் கவிதைகள்

கடலில்
நல்ல மழை
குருட்டு மேகம்.

மழைத் துளியில்
மாயா ஜாலம்
வான வில்.

எத்தனை முறை
ஐயம் கேட்டும்
கோபப்படாத ஆசிரியர்
'டியுசன்' வகுப்பு.

எமன் குறித்த நேரத்துக்கு
முன்னதாகவே மரணம்
தர்மாஸ்பத்திரி.

எல்லா வகை ரத்தமும்
ஒரே உடலில்
கொசு.

கொட்டியதும்
வளைந்தது
சட்டம்.

ஏமாற்றிய காகம்
ஏமாந்தது நரியிடம்
சந்தோசத்தில் பாட்டி.

நிஜம் வெளியே
நிழல் உள்ளே
நிலைக் கண்ணாடி.

வாலை வெட்டு
முதுகை நிமிர்த்து
மனிதன்.

ஆண்டவனுக்கும்
மாண்டவனுக்கும்
அலங்கார தேர்பவனி. 

சனி, 9 நவம்பர், 2013

இன்னும் சில குறுங் கவிதைகள்

வாங்கியும்
சிவக்கலாம்
கரங்கள்.

வெள்ளை மாளிகையில்
கருப்பு அதிபர்
கால மாற்றம்.

மீனையும் காணோம்
பறவையும் வரவில்லை
வற்றிய குளம்.

திரையில்
நட்சத்திரங்கள்
பகலிலும்.

உண்டி கொடுப்போர்
வயிற்றில்
உறு பசி.

நெய்தோர்
உடலெங்கிலும்
அம்மணம்.

மாளிகை கட்டியவன்
வாசம்
மண் குடிசையில்.

சாலை போட்டவன்
வீட்டிற்கு
சரியான பாதையில்லை.

அன்று மட்டும்
வீட்டிலேயே குடித்தார்கள்
காந்தி ஜெயந்தி.

இறக்கைகள் இல்லாமலே
பறக்கிறது
விலைவாசி.  

புதன், 6 நவம்பர், 2013

சிந்தனையில் சிந்தியவை

                                      சம நீதி
ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?
நாங்கள் மட்டுமே கொள்ளை யடிப்போம்
சமமாய் எமக்குள் பிரித்துக் கொள்வோம்.

                        புதிய ஜனநாயகம்
மக்களின் பணத்தை
மக்களில் சிலர்
(தம்)மக்களுக்காக
கொள்ளை அடிப்பது.

                           காலத்தின் கோலம்
 பொங்கும் காலம் போய்
 'போ'ங்காலம் வந்து விட்டால்
 அருகம் புல் நட்டாலும்
 அப்படியே கருகி விடும்.  

 






ஞாயிறு, 3 நவம்பர், 2013

குறுங் கவிதைகள்

திருமகளை
அடைவதற்காக
கலைமகளை விற்கிறார்கள்
கல்வி வியாபாரம்.

குய்யோ முறையோ என்று
கூக்குரலிட்டாலும்
உடைந்த மண்பானை
ஒட்டிக் கொள்ளவா போகிறது?

அஸ்தமனமானாலும்
அடுத்த நாள் காலை
புத்தம் புதிதாய்
எழும் ஞாயிறு.

 விழுந்தால் தான்
 உதயமாகும்
 எழ வேண்டும்
 எனும் எண்ணம்.

 சுவரெங்கிலும்
 எழுதப்பட்டிருந்தது
 'சுவற்றில் எழுதாதே'

 நடுவே நெருப்பு
 சுற்றிலும் நீர்
 ஈழம்.

 பூவின் மேல்
 இன்னொரு பூ
 வண்ணத்துப் பூச்சி.

 அழுகையும் சிரிப்பும்
 எழுத்துகளில்லாத
 வார்த்தைகள்.

  மூடிய கதவைத் திறக்கும்
  திறந்த கதவை மூடும்
  கொள்கை இல்லாத காற்று.
 
  வந்ததும் போனதும்
   குழந்தைக்குத் தெரியாது
   அப்பாவுக்கு ஐ.டி வேலை.
 



வெள்ளி, 4 அக்டோபர், 2013

எங்கே காந்தியம்?

சாதிப் புயலில்
பிய்ந்து உதிரும்
அமைதிப் பூக்கள்.

மனித நேயம்
கிழித்துக் குதறும்
மதவெறி நகங்கள்.

நீதியின் கரங்களை
வெட்டிச் சாய்க்கும்
வன்முறை வாட்கள்.

மண் எங்கிலும்
ரத்த ஆறுகள்.

தரை முச்சூடும்
தசைத் துண்டங்கள்.

எங்கு காணினும்
பயங்கர வாதம்.

தீரா நோயாய்
தீவிர வாதம்.

மேலை நாடுகள்
காந்தியின் பொருட்களை
ஏலம் போடுதாம்!
ஓ, இதென்ன அதிசயம்?
நாங்கள்
காந்தியத்தையே
ஏலம் போட்டு விட்டோம்!


செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பறவையும் மரமும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இரை தேடிவிட்டு இரவு திரும்பிய பறவையிடம் மரம் வருத்தத்தோடு சொன்னது, " இன்னும் இரண்டு நாட்களில் என்னை அடியோடு வெட்டப் போகிறார்களாம். அதிகாரிகள் பேசிக் கொண்டார்கள். சாலையை அகலப்படுத்தப் போகிறார்களாம்." இதைக் கேட்ட பறவையின் கண்களில் நீர் வழிந்தது. அதைப் பார்த்த மரம், "வருத்தப்படாதே, நண்பனே. வெட்டுப்படுவது எங்களுக்கு வாடிக்கை. காலையில் விரைவாக எழுந்து வேறு மரத்திற்குச்  சென்று விடு. போகும்பொழுது என் சருகுகளையும் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு போ. கூடு கட்ட உதவும். இந்தா, பழம் சாப்பிடு " என்று கூறி கனிவோடு தன் கனிகளைக் கொடுத்தது. பறவையின் கண்கள் கலங்கின. மனம் நெகிழ்ந்தது. " கவலைப்படாதே, நண்பா. நீ கொடுத்த கனிகளைச் சாப்பிட்டுவிட்டு, உன் விதைகளை மண்ணில் பரப்புவேன். நீ மறுபடியும் புதிதாகப் பிறப்பாய்." என்று நன்றியுடன் மொழிந்தது பறவை. சிலிர்த்துச் சிரித்தது மரம்.        

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ஒன்று வெள்ளத்தில் நீந்தியவாறு எதிரில் வந்தது. " என்னைக் காப்பாற்று" என்று மானைக் கெஞ்சியது எறும்பு. "சரி. என் மீது ஏறிக்கொள் " என்று மான் கூற, எறும்பு மான் மீது ஏறி, அதன் கொம்பில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது. சில மணி நேரத்திற்குப் பின் வெள்ளம் வடிந்தது. மானிடம் நன்றி கூறிவிட்டு எறும்பு தன் இருப்பிடம் சென்றது. பிறிதொரு நாள். நல்ல வெய்யில் நேரம். மரநிழலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது மான். சற்றுத் தொலைவில் புலி ஒன்று மானையே உற்றுப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அது மான் மீது பாய்ந்து தாக்கலாம். திடீரென்று யாரோ மானை பலமாகக் கடித்தார்கள். வலி பொறுக்காது எழுந்த       மானைப் பார்த்து, " பயப்படாதே. நான் தான் உன்னைக் கடித்து எழுப்பினேன். எதிரில் பார்." என்றது எறும்பு. எதிரில் புலியைப் பார்த்த மான் அபாயத்தைப் புரிந்து கொண்டது. எறும்பு நண்பனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு, பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தது மான். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்பா, நலமா?நானும் உன்னுடன் வரலாமா?"என்று பணிவாக வேண்டியது கொக்கு. எருமை நட்புணர்வோடு ஒப்புதல் தந்தது. எருமை செல்லுமிடம் எங்கும் கொக்கும் கூடவே சென்றது. எருமை மேயும் பொழுது புற்களிலிருந்து வெளியேறும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பசியாறியது கொக்கு. கைமாறாக, எருமையின் மீது அமர்ந்து, அதன் ரத்தத்தை உறிஞ்சும் உண்ணிகளைப் பிடித்துத் தின்று எருமைக்குச் சுகமளித்தது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர்கள் விளையாடுவதற்கு வழவழப்பான, உருண்டையான கற்களையே விரும்பித் தெரிவு செய்தனர். இதை ஒரு அவமானமாகக் கருதி வருத்தப்பட்டது அந்தக் கல். ஒரு நாள் பலத்த மழை பெய்தது. வெள்ளம் அந்தக் கல்லை அடித்துச் சென்று ஆற்றில் சேர்த்தது. ஆற்று வெள்ளம் அந்தக் கல்லை புரட்டி, உருட்டி சொரசொரப்பை நீக்கி வழவழப்பாக்கியது. கல் இப்பொழுது உருண்டையாய் அழகிய வடிவத்துடன் காட்சியளித்தது. தன்னைச் செதுக்கிப் பண்படுத்திய ஆற்றுக்கு நன்றி கூறியது கல்.