செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

மரமும் பறவையும்

சாலையோரம் ஒரு பெரிய மரம். எந்தக் காலத்தில், எந்தப் புண்ணியவான் நட்டு வளர்த்ததோ! அந்த மரத்தில் ஒரு பறவை நெடுங்காலமாக கூடு கட்டி வாழ்ந்து வந்தது. பறவையும் மரமும் நல்ல நண்பர்கள். ஒரு நாள் இரை தேடிவிட்டு இரவு திரும்பிய பறவையிடம் மரம் வருத்தத்தோடு சொன்னது, " இன்னும் இரண்டு நாட்களில் என்னை அடியோடு வெட்டப் போகிறார்களாம். அதிகாரிகள் பேசிக் கொண்டார்கள். சாலையை அகலப்படுத்தப் போகிறார்களாம்." இதைக் கேட்ட பறவையின் கண்களில் நீர் வழிந்தது. அதைப் பார்த்த மரம், "வருத்தப்படாதே, நண்பனே. வெட்டுப்படுவது எங்களுக்கு வாடிக்கை. காலையில் விரைவாக எழுந்து வேறு மரத்திற்குச்  சென்று விடு. போகும்பொழுது என் சருகுகளையும் குச்சிகளையும் எடுத்துக்கொண்டு போ. கூடு கட்ட உதவும். இந்தா, பழம் சாப்பிடு " என்று கூறி கனிவோடு தன் கனிகளைக் கொடுத்தது. பறவையின் கண்கள் கலங்கின. மனம் நெகிழ்ந்தது. " கவலைப்படாதே, நண்பா. நீ கொடுத்த கனிகளைச் சாப்பிட்டுவிட்டு, உன் விதைகளை மண்ணில் பரப்புவேன். நீ மறுபடியும் புதிதாகப் பிறப்பாய்." என்று நன்றியுடன் மொழிந்தது பறவை. சிலிர்த்துச் சிரித்தது மரம்.        

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மானும் எறும்பும்

அன்றொரு நாள் பலத்த மழை. காட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டெறும்பு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளித்தது. அப்பொழுது கலைமான் ஒன்று வெள்ளத்தில் நீந்தியவாறு எதிரில் வந்தது. " என்னைக் காப்பாற்று" என்று மானைக் கெஞ்சியது எறும்பு. "சரி. என் மீது ஏறிக்கொள் " என்று மான் கூற, எறும்பு மான் மீது ஏறி, அதன் கொம்பில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது. சில மணி நேரத்திற்குப் பின் வெள்ளம் வடிந்தது. மானிடம் நன்றி கூறிவிட்டு எறும்பு தன் இருப்பிடம் சென்றது. பிறிதொரு நாள். நல்ல வெய்யில் நேரம். மரநிழலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது மான். சற்றுத் தொலைவில் புலி ஒன்று மானையே உற்றுப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தது. எந்தக் கணத்திலும் அது மான் மீது பாய்ந்து தாக்கலாம். திடீரென்று யாரோ மானை பலமாகக் கடித்தார்கள். வலி பொறுக்காது எழுந்த       மானைப் பார்த்து, " பயப்படாதே. நான் தான் உன்னைக் கடித்து எழுப்பினேன். எதிரில் பார்." என்றது எறும்பு. எதிரில் புலியைப் பார்த்த மான் அபாயத்தைப் புரிந்து கொண்டது. எறும்பு நண்பனுக்கு மனமார நன்றி சொல்லிவிட்டு, பாதுகாப்பான இடத்திற்கு விரைந்தது மான். 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

கொக்கும் எருமையும்

புல்வெளியில் எருமை ஒன்று உற்சாகமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறந்து வந்த ஒரு பால் நிறக் கொக்கு எருமை அருகே புல்வெளியில் அமர்ந்தது. "நண்பா, நலமா?நானும் உன்னுடன் வரலாமா?"என்று பணிவாக வேண்டியது கொக்கு. எருமை நட்புணர்வோடு ஒப்புதல் தந்தது. எருமை செல்லுமிடம் எங்கும் கொக்கும் கூடவே சென்றது. எருமை மேயும் பொழுது புற்களிலிருந்து வெளியேறும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று பசியாறியது கொக்கு. கைமாறாக, எருமையின் மீது அமர்ந்து, அதன் ரத்தத்தை உறிஞ்சும் உண்ணிகளைப் பிடித்துத் தின்று எருமைக்குச் சுகமளித்தது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறும் கல்லும்

ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு கல் கிடந்தது. அது ஒழுங்கற்று, அழகின்றி, சொரசொரப்பாக இருந்தது. விளையாடும் சிறுவர்கள் கூட அதைத் தொடுவதில்லை. அவர்கள் விளையாடுவதற்கு வழவழப்பான, உருண்டையான கற்களையே விரும்பித் தெரிவு செய்தனர். இதை ஒரு அவமானமாகக் கருதி வருத்தப்பட்டது அந்தக் கல். ஒரு நாள் பலத்த மழை பெய்தது. வெள்ளம் அந்தக் கல்லை அடித்துச் சென்று ஆற்றில் சேர்த்தது. ஆற்று வெள்ளம் அந்தக் கல்லை புரட்டி, உருட்டி சொரசொரப்பை நீக்கி வழவழப்பாக்கியது. கல் இப்பொழுது உருண்டையாய் அழகிய வடிவத்துடன் காட்சியளித்தது. தன்னைச் செதுக்கிப் பண்படுத்திய ஆற்றுக்கு நன்றி கூறியது கல். 

சனி, 10 ஆகஸ்ட், 2013

பூவும் வண்ணத்துப் பூச்சியும்

தோட்டத்துச் செடியில் பூ ஒன்று அழகாகப் பூத்திருந்தது. பூவின் விரிந்த, பெரிய இதழ்கள் மஞ்சள் பூசி மங்களகரமாகக் காட்சியளித்தன. எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி. பூவைச் சுற்றி சற்று நேரம் வட்டமடித்தது. பிறகு அன்பான குரலில் பூவிடம்,"பூவே, பூவே, உன் மீது அமர்ந்து சற்று ஓய்வெடுக்கலாமா?"என வேண்டியது. "ஓ, தாராளமாக. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீ தங்கலாம். பசித்தால், என்னிடம் தேனுள்ளது. வேண்டுமளவு பருகலாம்,"என்று இனிய குரலில் மொழிந்தது பூ. தேனுண்டு இளைப்பாறிய வண்ணத்துப் பூச்சி,  பூவின் விருந்தோம்பல் பண்புக்கு நன்றி கூறி விடைபெற்றது. போகும்பொழுது, பூவின் மகரந்தத்தை தன் இறக்கையில் எடுத்துக்கொண்டுபோய் வேறொரு பூவில் சேர்த்து இன விருத்திக்கு உதவியது.   

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -20


  1. சாதாரணமான மனிதர்கள் இறக்கும் பொழுது பிணமாகிறார்கள். ஆனால் புரட்சியாளர்கள் மரிக்கும் பொழுது புதிதாகப் பிறக்கிறார்கள்.
  2. ஏற்றத் தாழ்வுகளும், வர்க்க பேதங்களும், இன ஒடுக்கல்களும், சுரண்டலும் எந்தச் சமூகத்தில் எல்லை தாண்டிப் பெருகுகின்றனவோ அங்கு நிச்சயம் புரட்சி வெடிக்கும்.
  3. மாற்றங்கள் மனிதர்களிடம் தேடும் தாகத்தையும் செயல்படும் வேகத்தையும் முடுக்கிவிட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்தும்.
  4. வண்ணங்கள் மாறுபட்டாலும் பூக்கள் ஒன்றையொன்று வெறுப்பதில்லை.
  5. பூக்கள் வெறுமனே பூக்கள் மட்டுமல்ல. அவற்றுக்குள் காய்கள், கனிகள், விதைகள், மரங்கள் என்று எண்ணற்ற ரகசியங்கள் மறைந்துள்ளன.
  6. மகரந்தம் கொணர்ந்த வண்ணத்துப் பூச்சிக்கு தேன் தந்து நன்றி நவின்றது பூ.
  7. விதவைக்குப் பூக்கள் மறுக்கும் உலகம் அவளின் பிணத்தின் மீது பூக்களாய்க் கொட்டும்.
  8. மண்ணுக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. சாதி, மதம் இல்லை.யார் தோண்டினாலும் தண்ணீர் தரும். யார் பயிரிட்டாலும் உணவு கொடுக்கும்.
  9. அடித்தாலும், உதைத்தாலும், குதித்தாலும்,சிதைத்தாலும் சினம் கொள்ளாது மண்.
  10. இயற்கைத் தேவன் தன் இன்னுயிர்க் காதலிக்கு வாரி இறைத்த வைரங்களே நட்சத்திரங்கள்.  

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

சிந்தனை பத்து -19

1. எளியோரை ஏளனம் செய்தலும் வலியோர்க்கு சாமரம் வீசலும்            அறிவுடையோர் செயல் அல்ல.
2. நா காத்தல் இரு வகைப்படும். தீய சொற்களைப் பேசாதிருத்தல் ஒரு வகை.    அளவுக்கு மிஞ்சி உணவுண்ணாமல் நாவைக் கட்டுப்படுத்தல் இரண்டாவது  வகை.
3. இருட்டை விரட்டுகின்றன கதிரோனின் ஒளிக் கதிர்கள். அறியாமையை  நீக்குகிறது கல்வி.
4. அரசை எதிர்த்து தீவிரமாக முழங்கிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று  மௌனிகளாகி விட்டால் என்ன பொருள்? பயமுறுத்தப்பட்டிருப்பார்கள்  அல்லது விலை போயிருப்பார்கள்.
5. நம் பகுதிக்கு வருகை தரும் பறவைகளை வரவேற்போம். அப் பறவைகள்  நம்முடைய விருந்தாளிகள். ஓசைகள் எழுப்பி அவற்றை பயமுறுத்த  வேண்டாம். நிம்மதியாகத் தங்கி விட்டுச் செல்லட்டும்.
6. அறிவாளி ஒருவனின் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த ஒரு தேசமும்  உயர்ந்ததாக வரலாறு இல்லை.
7. எதை எதிர்பார்த்து மழை பொழிகிறது? மண் எதை எதிர்பார்த்து  விளைச்சலைக் கொடுக்கிறது? காற்று எதை எதிர்பார்த்துக் குளுமையாக  வீசுகிறது? மழை, மண், காற்று போல நாமும் எந்தக் குறியெதிர்ப்பும்  இல்லாமல் பிறர்க்கு உதவி செய்தல் வேண்டும்.
8. தண்ணீர்ப் பற்றாக்குறையின் பொழுது இலைகளை உதிர்த்து விடுகின்றன  மரங்கள். அது போல, வருமானம் குறையும்பொழுது, நாம் தேவையற்ற  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
9. பலருடைய மன அழுத்தங்களுக்குக் காரணம் அவர்கள் தங்களின்  பிரச்சனைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளாததே. வாய்விட்டுப்  பேசினால் மனம் லேசாகும். அழுத்தம் அகலும்.
10. நீதி மன்றங்கள் துணிவாகவும், தெளிவாகவும் தீர்ப்புக்கள் வழங்கும்  ஒவ்வொரு முறையும் மக்களாட்சியின் மீது நமக்கு நம்பிக்கை மலர்கிறது.  ஒருவித பாதுகாப்பு உணர்வும் மனதில் விரிகிறது.       

செவ்வாய், 16 ஜூலை, 2013

சிந்தனை பத்து - 18


  1. துயரங்கள் உன்னைச் சூழும் பொழுது துணிவாய் எதிர் கொள். அவை உன்னைப் பக்குவப்படுத்துவதற்கு வந்ததாய் எடுத்துக் கொள். 
  2. நாம் பிறரிடம்  உரையாடும் பொழுது,  அதை அவர்கள் விருப்புடன் கவனிக்கிறார்களா என்பதைத் தெரிந்து  நமது உரையைத் தொடர்தல் நல்லது. 
  3. நடக்க,  நடக்கத்தான் பாதை உருவாகும்.  முயற்சி செய்ய, செய்ய வாழ்க்கை கைகூடும்.    
  4.  நெடுநாள் கழித்து இளமைக்கால நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை சொல்ல முடியாது.  
  5.  வாழ்க்கையை  பாலைவனமாக்குவதும் பசுஞ்சோலையாக்குவதும் நம் எண்ணங்களே.  நல்ல எண்ணங்கள் மெதுவாகவேனும் நம்மை உயர்வு நோக்கி உந்திச் செல்லும்.                                                                                                   
  6. உதவாக்கரை  என்று  ஒருவரை  ஒதுக்கி , ஓரங்கட்டி  விடாதீர்கள் . பிறவியில்  அப்படி  யாரும்  இல்லை . சூழ்நிலை  காரணமாக  ஒருவருக்குள்  இருக்கும்  திறமைகள்  வெளிப்படாமல்  இருக்கலாம் . சூழ்நிலை  கனியும்  பொழுது , அவருக்குள்  இருந்தும்  ஒரு  அற்புதமான  ஆற்றலாளன்  வெளிவரக்கூடும் .
  7. எளிமை என்பது ஒரு விலைமதிப்பற்ற ஆபரணம். அதை அணிந்ததனால் தான் காந்தி, காமராசர் போன்றோர்  உலகெங்கும் அறியப்படுகின்றனர்.
  8. அலமாரியில் உள்ள புத்தகங்களைத்  தொட்டு, எடுத்து, தூய்மைப்படுத்தி, நல்ல முறையில் ஒழுங்காக அடுக்கி வைக்கும் பொழுது மனதில் மகிழ்ச்சி மலரும். புத்தகங்களுக்கும் நமக்குமான உறவு விசாலமடையும்.   
  9. இயற்கையை  அழிப்பதால்  ஏற்படும் இழப்புக்கள்  பெரிய  அளவில்  நம்மைப் பாதிக்காமல்  இருக்கலாம். ஆனால்  வருங்காலத்  தலைமுறையினர் மழையையே  பார்க்காத  அவலத்தைச்  சந்திக்கப் போகிறார்கள்  என்பது மட்டும்  மகா சத்தியம்.
  10. அதிகார போதை  அபாயகரமானது . அதை உங்களுக்குள்ளே  அனுமதிக்காதீர்கள் . உங்களை  அது  படுகுழியில்  தள்ளிவிடும் . அன்பு  ஒன்றே  நிலையானது . அன்பு  காட்டுங்கள் . மனம்  லேசாகும் . வாழ்க்கை  சுகமாகும் . 

புதன், 10 ஏப்ரல், 2013

சிந்தனை பத்து -17



  1. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு;  எரிச்சலின் நண்பன்; உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆதலினால், பொறாமை தவிர்ப்பீர்.
  2.   நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது. உன்னைச் சுற்றிலும் கெட்டவர்களே அதிகம் இருக்கும் போது, நீ வல்லமை படைத்தவனாக இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும்.
  3. சினத்தை ' சேர்ந்தாரைக் கொல்லி' எனச் செப்புகிறான் அய்யன் வள்ளுவன். சினம் இதயத்தை உடைத்துவிடும் என்கிறது மருத்துவ நூல். மன்னர்களின் சினத்தால் மாபெரும் சாம்ராஜ்யங்கள் சிதறி, சின்னாபின்னமாகின என்கிறது வரலாறு. நம் சினம் அடுத்தவர் மனதைப் புண்படுத்துகிறது. சினத்தினால் யாரும் இலாபம் ஈட்டியதாகச் செய்திகள் இல்லை. சினம் எதையும் சாதிப்பதும் இல்லை. ஆதலினால் சினம் தவிர்ப்பீர். 
  4. அள்ளிக் கொடுக்க நம்மிடம் அளவில்லாத அன்பு உள்ளது. நேசிக்க பரந்த மனம் உள்ளது. யோசிக்க அறிவு உள்ளது. பின் எதற்காக வன்முறை? ஏன் வெறியாட்டம்?
  5. எல்லோரும் நம் சகோதர, சகோதரிகள். மதம், சாதி, இனம் தாண்டி, மனிதர்களாக ஒன்றாக வாழ்வதை விட்டு விட்டு, வன்முறையால் ரத்தம் சிந்தலாமா? நன்முறைகளைப் போதித்த நீதி நூல்கள் எழுந்த தேசத்தில், வன்முறையின் கோர ஆட்சி நிகழ்வது சரியா? 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற மகத்தான உறவு முறை மலர்ந்த மண்ணில், எதற்கு கத்தி? எதற்கு தோட்டா? எதன் பொருட்டு வெடி குண்டு? அன்பைப் பரப்புவோம்; நட்புணர்வை வளர்ப்போம்; வன்முறையைத் தவிர்ப்போம்.
  6. உன்னிடம் பிறர்க்குக் கொடுக்க எதுவுமில்லை என்று வருத்தப்படாதே. கொடுக்க வேண்டும் என்ற மனம் உள்ளதல்லவா? அது போதும்.
  7. எந்நேரமும் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன் அமர்ந்து சுற்றுப் புறத்தையே மறந்து போன சின்னஞ் சிறு அரும்புகளே, கொஞ்சம் வெளியே வாருங்கள். என்ன அழகாகப் பூத்திருக்கின்றன மலர்கள்! அந்த வண்ண மலர்களின் மீது பூத்திருக்கின்ற சின்னச் சின்ன வண்ணத்துப் பூச்சிகளை பாருங்கள். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நடக்கும் மழை நெசவைக் கண்டு களியுங்கள். அதோ, கிழக்கு வானில் வானவில்!யாருக்காகக் காத்திருக்கிறது, ராமனுக்காகவா அல்லது அர்ச்சுனனுக்காகவா? இருவருக்கும் இல்லை. நீங்கள் ரசிப்பதற்காக மட்டுமே. துள்ளுகின்ற பசுக் கன்றுகளையும் தாவும் அணில்களையும் கீச்சிடும் பறவைகளையும் நோக்குங்கள். மெல்ல ரகசியம் பேசிச் செல்லும் காற்றின் மொழியை அனுபவியுங்கள். அதோ, அந்த நீல மலைகளைப் போர்த்தி நிற்கும் வெண் மேகங்களை தரிசியுங்கள். உங்கள் ரசனை விரியும். அறிவு பெருகும். இதயம் வலுவடையும். பார்வை கூர்மை அடையும். வாழ்நாள் கூடும். உங்களுக்கும் இயற்கைக்குமான உறவு வலுப்படும். வாருங்கள் குழந்தைகளே, வெளியே!
  8. பேருந்தில் நடத்துனர் பயணச் சீட்டு கொடுக்கும்பொழுது 'நன்றி' எனச் சொல்லிப் பாருங்கள்.....அவர் முகத்தில் தான் எவ்வளவு மலர்ச்சி! அன்று முழுதும் அவர் தனது பணியை மகிழ்ச்சியுடன் செய்வார் என்பது திண்ணம்.
  9. ஒரு குழந்தையிடம் 'நன்றி' கூறும் பொழுதும் 'வருந்துகிறேன்' என வருத்தம் தெரிவிக்கும் பொழுதும், அந்தப் பிஞ்சு மனதில் உங்களைப் பற்றி உயர்வான எண்ணம் உருவாகிறது. அது மட்டுமல்ல....நன்றி தெரிவிக்கும் பண்பாடும் வருத்தம் தெரிவிக்கும் நாகரிகமும் அந்தக் குழந்தையின் மனதில் பதியமாகின்றன.
  10. அதிகாரமாகச் சொல்லாமல், அன்பாகச் சொல்லிப் பாருங்கள்....எல்லோரும் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.


புதன், 6 மார்ச், 2013

சிந்தனை பத்து - 16


  1. ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல செயலையாவது செய்ய வேண்டும். எவ்வளவு சிறிய செயலாயினும் பரவாயில்லை. எதிரே வரும் மனிதனைப் பார்த்து ஒரு புன்முறுவல், ஒரு குழந்தையை நோக்கி கையசைப்பு, ஒரு பார்வை இழந்த மனிதருக்கு சாலையைக் கடக்க உதவுதல், ஒரு மூதாட்டிக்கு தலைச் சுமை இறக்க கரம் நீட்டுதல், பிளாஸ்டிக் பொருளை குப்பைத் தொட்டியில் போடுதல் என எவ்வளவோ செயல்களைச் சொல்லலாம்.
  2. காலம் நம் கட்டளைக்கு அடி பணியாது. நம் ஆளுகைக்கு அடங்காது. எனவே செய்ய நினைப்பதை இன்றே செய்து விடு. நாளைக்குச் செய்யலாம் என எதையும் ஒத்திப் போடாதே.
  3. நேற்றைய தலைமுறையில் உண்மைக்கும், கண்ணியத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும் சற்று மதிப்பிருந்தது. தீயன செய்ய அச்சமிருந்தது. ஊரார் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமும், கூச்சமும் இருந்தது. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கண்ணியம் காலாவதியாகி விட்டது; அச்சம், கூச்சம், தயக்கம் எல்லாம் அந்நியமாகிப் போயின. பலர் பணம் ஈட்டுவதில் முனைப்பாக இறங்கிவிட்டார்கள். பொது வாழ்க்கையில் தூய்மை என்பது கனவாகி காணாமல் போய் விட்டது. நாளைய தலைமுறை என்னவாகுமோ? அச்சமாக இருக்கிறது நினைத்துப் பார்க்க.
  4. எளிமையாகப் புரிய வைப்பதற்கு புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பவரே உண்மையான ஆசிரியராவார்.
  5. மாணவர்க்கு நண்பனாக இருந்து கற்பிக்கும் ஆசிரியரே நல்லதொரு சாதனையாளராகப் போற்றப்படுவார்.
  6. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உண்மையான அரசியலைப் போதித்தால் மட்டுமே தேசம் உருப்படும்.
  7. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனைக் குறை கூறுவதாக இருந்தால், தனியாக அழைத்துக் கண்டிக்க வேண்டும். பாராட்டுவதாக இருந்தால், பலர் நடுவே பாராட்ட வேண்டும்.
  8. மரங்களை வெட்டி, மழையைத் தடுத்து மண்ணைப் பாழாக்கிப் பாலையாக்கும் எவருமே தேசத் துரோகிகளே.
  9. முதியவர்களைப் புண்படுத்தும் வார்த்தைகளால் குதறாதீர்கள். சில நாட்கள் மட்டுமே வாழப் போகும் அவர்கள் நிம்மதியாய் வாழட்டும். அவர்களின் இறுதிக் காலம் இனிமையாய்க் கழியட்டும்.
  10. உங்களுக்கு முகவரி தந்த பெற்றோர்களை கடைசிக் காலத்தில் முகவரி அற்றவர்களாக்கி விடாதீர்கள்.



   

திங்கள், 4 மார்ச், 2013

சிந்தனை பத்து - 15


  1. அடுத்தவர் துயரில் பங்கு கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆதரவாய் நேசக் கரம் நீட்டுங்கள். சில அன்பு மொழிகளைக் கூறுங்கள். மெல்ல, மெல்ல அவர்களின் துயரம் குறையும்.
  2. பொறாமை வெறுப்பின் தாய்; கோபத்தின் உறவு; எரிச்சலின் நண்பன்;  உடல் நலத்தின் எதிரி; உள்ளத்தைப் பீடிக்கும் நோய். ஆகையால், பொறாமையைத் தவிர்ப்பீர்.
  3. வாழ்க்கைச் சக்கரத்திற்கு அன்பே அச்சாணி.
  4. பாழ்பட்ட நிலமே எனினும் பாடுபட்டால் நிச்சயமாய் பலன் விளையும்.
  5. நேசிப்பதாலே மனம் லேசாகும். நேசிப்பதாலே கவலைகள் கரையும். நேசிப்பதாலே உறவுகள் விரியும். நேசிப்பதாலே நட்பது மலரும்.
  6. வீணை செய்வது வீணாக்குவதற்கு அல்ல; மீட்டி இசையை ரசிப்பதற்கே. சிலை வடிப்பது போட்டு உடைப்பதற்கு அல்ல; அதில் உள்ள கலை நயத்தைப் பார்த்து மகிழ்வதற்கே.
  7. கரைக்குள் அடங்கி ஓடும் வரை நல்லாறு; கரை புரண்டு ஓடினால் காட்டாறு.
  8. வறட்சியிலும் சில தாவரங்கள் உயிர்த்திருப்பது போல, வறுமையிலும் தாக்குப் பிடிப்பவர்களே வாழ்வதற்கும், வாழ்த்தப்படுவதற்கும் தகுதி உடையவராவர்.
  9. பக்குவப்பட்டவர்கள் எப்போதும், எதற்கும் பதட்டமடைய மாட்டார்கள். நிதானமாகச் சிந்தித்து பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். தெளிவுடன் தீர்வு காண்பார்கள்.
  10. குப்பையையும் கொட்டி விட்டு, சுத்தம் செய்பவர்களை குறை சொல்கிற வேடிக்கை மனிதர்கள் வாழ்கின்ற விந்தையான உலகம் இது..  


சனி, 2 மார்ச், 2013

சிந்தனை பத்து - 14


  1. பாராட்டுங்கள் தாராளமாக. செலவு சில வார்த்தைகள் மட்டுமே. பாராட்டப்படுபவர் பரவசம் அடைவார்; உற்சாகம் பெறுவார்; வேகத்துடன் செயல்படுவார்; பாராட்டு  அவரின் சாதனைகளுக்கு ஊக்க மருந்தாய் அமையும்.
  2. சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பாராட்டை விரும்புகிறார்கள். பாராட்டுவோமே....நாம் என்ன குறைந்தா போய் விடுவோம்?
  3. பாராட்டு என்பது பரிசாக இருக்கலாம். சான்றிதழாக இருக்கலாம். ஒரு கவிதையாக இருக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளாக இருக்கலாம். ஒரு கைகுலுக்கல் கூட பாராட்டே. ஒரு சிறு முறுவலும் கூட.
  4. விதை உறக்க காலத்தில், முளைப்புக்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது. இப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்ப் படுத்திக் கொள்கிறோமா?
  5. மரங்களும் அவற்றில் அடையும் பறவைகளும் எவ்வளவு அழகாய் உள்ளன!காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசையும் காலை நேரத்தில் பறவைகளின் கலகலப்பான ஒலியும் கேட்பதற்கு எவ்வளவு ரம்மியமாக உள்ளது!
  6. சலசலத்து ஓடுகிறது ஆறு. ஆற்று நீரில் துள்ளிப் பாயும் வாழை மீன்கள். கரையில் செழித்து வளர்ந்த செடிகள். செடிகளின் பூக்களில் தேன் உறிஞ்சும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள். ஓ, இயற்கைத் தாயே, நின் வரங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
  7. சில செயல்களை யோசித்துச் செய்ய வேண்டும். சிலவற்றை உடனடியாகச் செய்ய வேண்டும். சில செயல்களை துணிவோடு செய்ய வேண்டும். சில செயல்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும்.
  8. கோபப்படும் பொழுது முகம் தன் அழகை இழக்கிறது. அகம் அறிவை இழக்கிறது. பேச்சும் மூச்சும் தடுமாறுகின்றன. இரத்தம் கொதிக்கிறது. மூச்சு நின்று விடுவதும் உண்டு. கோபத்தைத் தவிர்க்கலாமே! நெடுநாட்கள் வையத்தில் வாழலாமே!
  9. குழந்தையின் சிரிப்புக்குத் தான் எவ்வளவு வலிமை! அந்தச் சிரிப்பு நமக்கே தெரியாமல் நமக்குள் புகுந்து நம் முகத்தையும் அகத்தையும் மலர வைத்து மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  10. முடிந்ததைச் செய்யுங்கள். இயன்றதைக் கொடுங்கள். அறிந்ததைக் கற்றுத் தாருங்கள். அறியாததை அறிய முயற்சி செய்யுங்கள். எப்போதும் எல்லோரையும் நேசியுங்கள். வாழ்க்கை இனியது.


 



வெள்ளி, 1 மார்ச், 2013

சிந்தனை பத்து- 13


  1. குழந்தையிடம் அன்பைப் பொழியுங்கள். அது மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளும். இனிய சொற்களைப் பயன்படுத்துங்கள். குழந்தையும் இனிமையாகப் பேசும்.
  2. வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் வசந்தம் பூக்காது.
  3. சம்பாதிக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கை நடத்தும் கலையைக் கற்றுக்  கொடுக்க வேண்டும்.
  4. வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அனுபவித்து வாழ்வதில் தவறேதும் இல்லை, வரவுக்குள் செலவு செய்யத் தெரிந்திருக்கும் பட்சத்தில்.
  5. நிதியைச் சரியான முறையில் கையாளாதவன் வாழ்க்கையில் கவலைகளே நிரம்பித் ததும்பும்.
  6. பேச்சில் தெளிவு, பழக்கத்தில் கனிவு, நடத்தையில் பணிவு, செயலில் உறுதி, சிந்தனையில் வேகம், பொது வாழ்வில் நாணயம், வார்த்தைகளில் வாய்மை ஆகியவை இருந்தால், நிறையச் சாதிக்கலாம்; நீடு புகழ் ஈட்டலாம்.
  7. குழந்தைகளின் அழுகை ஒரு வகை மொழி; தாய்க்கு மட்டுமே புரியும்.
  8. எந்த நாட்டில் கல்வி வியாபாரமாக நடத்தப்படுகிறதோ, அந்த நாடு உருப்படாது.
  9. எதையும், யாருக்கும் எளிமையாகச் சொல்ல வேண்டும். கனமாகச் சொல்லப்படும் கருத்துக்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே சிதைந்து போகும்.
  10. இலவசமாய்ப் பெறப்படும் பொருளுக்கு மதிப்பில்லை.ஒரு காசானாலும் உழைப்பினால் கிடைத்தால், ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்.  

வியாழன், 28 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 12


  1. கற்றும் நேர்பட வாழாதவன் இவ்வுலகில் இருந்து என்ன பயன்? கற்றவன் நல்லவனாய் இருக்கும் பொழுது மட்டுமே இவ்வுலகம் நல்லதாய் அமையும்.
  2. வசதி உள்ளவர்கள் வறுமையில் வாடுவோருக்கு உதவ வேண்டும். அதற்காகத் தான் அவர்களுக்கு வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
  3. எந்த நாட்டில் விவசாயி துன்பப்படுகிறானோ, அந்த நாடு விரைவில் பசியில் துடிக்கும்.
  4. நம்மில் பலருக்கு வாழ்த்த மனம் வருவதில்லை.வசை பாட மட்டுமே கற்றிருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நம்முடைய தவறுகள் நமக்கே புரியும். நம்மைச் சற்றே மாற்றிக் கொண்டால் வாழ்க்கை எவ்வளவு இனியதாய் மாறும்!
  5. எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் தவறு செய்யக்கூடும். அது மனித இயல்பு. சிலர் திருத்திக் கொள்கிறார்கள்; பலர் திருந்துவதில்லை.
  6. நம்மையும் வருத்திக்கொண்டு பிறரையும் வருத்துவதிலேயே நமது காலத்தில் பாதி பயனில்லாமல் கழிகிறது.
  7. காந்தியின் எளிமை குறித்துப் பெருமைப் படுகிறோம். வாய் கிழிய மேடையில் முழங்குகிறோம். ஆனால், காந்தி போல எளிமையாக வாழ்வதற்கோ, உண்மை பேசுவதற்கோ நாம் முயற்சி செய்வதில்லை.
  8. சொல் ஒன்றாய், செயல் வேறொன்றாய் போலியாய் நாம் வாழ்ந்து வருகிறோம். நாம், நாமாக என்று வாழப் போகிறோம்?
  9. இன்சொல், பேசுபவருக்கும், கேட்பவருக்கும் மகிழ்ச்சி தரும். இதயங்களை நெகிழ வைக்கும். நல்லுறவைச் சாத்தியமாக்கும்.
  10. எந்தப் பொருளைப் பயன்படுத்தும் பொழுதும் சிக்கனம் வேண்டும். நீரோ, மின்சாரமோ, சமையல் எரி வாயுவோ எதுவாக இருந்தாலும் சரியே. அப்பொழுது தான் எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாய்க் கிடைக்கும். 




புதன், 27 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 11


  1. எவ்வளவுதான் மனதிற்குக் கடிவாளமிட்டாலும், சிலரைப் பார்க்கும்பொழுது வெறுப்புணர்வு பெருக்கெடுக்க ஆரம்பிக்கிறது. தவறு எனத் தெரிகிறது. ஆனால் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறோம். இன்னமும் நம் மனங்கள் பக்குவப்படவில்லை. இன்னும் நாம் நம் மனங்களை அதிகப்படியான அன்பால் நிரப்பிக் கொள்ள வேண்டியுள்ளது.
  2. யோகா பயில்கிறார்கள்; தியானம் செய்கிறார்கள்; நீதி நூல்கள் படிக்கிறார்கள்; உபதேசம் கேட்கிறார்கள். ஆனாலும் அவர்களால் சினத்தை அடக்குவதற்கு முடியவில்லை. பெற்ற பயிற்சியால் பயன் என்ன?
  3. எதிலும் குறை காண்பதும், எதையும் எதிர்மறையாய் அணுகுவதும் நல்ல உறவுக்கு வழி வகுக்காது.
  4. உறவுச் சிதைவுக்குக் காரணம் அதிக எதிர்பார்ப்புகள், புரிதல் இல்லாமை, விட்டுக் கொடுக்காமை மற்றும் மனம் விட்டுப் பேசாமை.
  5. படித்தால் மட்டும் போதாது; படித்ததைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதலும், அதன்படி நடத்தலும் மிக மிக முக்கியம்.
  6. சண்டை போட்டுக் கொள்வது மிகவும் சுலபம். சமாதானமாக வாழ்தல் கடினம். அசாத்தியமான பொறுமையும், மனப் பக்குவமும் இருந்தால் மட்டுமே பின்னது சாத்தியமாகும்.
  7. தோண்டினால் பூமி பொறுத்துக் கொள்கிறது. மாறாக, நீர் தருகிறது; கனி வளங்களை வாரி வழங்குகிறது. பூமியிடமிருந்து நாம் நிரம்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  8. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாதவன் வாழ்வில் ஏமாற்றங்களே மிஞ்சும்.
  9. சிறியது என்று எதையும் இகழாதே. சிறியதிலும் சிறந்தது இருக்கக் கூடும்.
  10. ' இல்லையே' என ஏங்காதீர். உம்மிலும் ' இல்லாரை' எண்ணிப் பார்த்தால், உங்கள் ஏக்கம் விலகும்.

  

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து - 10

  1. ஒரு இலக்கை அடைய பல பாதைகள் இருந்தாலும் அதில் நேர் பாதையைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம்.
  2. இன்று மழை வரவில்லை என்பது உழவனுக்கு ஏமாற்றம் தான். அதற்காக அவன் ஒரே அடியாக மனம் உடைய வேண்டியதில்லை. அவன் செய்ய வேண்டியதெல்லாம் நாளை மழை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்பது தான்.
  3. நாம் பிறரிடம் குற்றம் காண்பதிலேயே நிறைய நேரம் செலவழிக்கிறோம். நமக்குள் உள்ள குறைகளைக் கண்டு கொள்வதுமில்லை. ஒப்புக் கொள்வதுமில்லை. திருத்த முயல்வதுமில்லை.
  4. குழு மனப்பான்மை என்பது  மனிதர்களுக்கு இடையே முகிழ்க்கும் நல்ல உறவுகளை முறித்துவிடும். மனித நேயத்தை குலைத்து  விடும்.
  5. எந்த ஒரு பகுதியிலும் ஒரு சிலரே பொது அமைதிக்கு கேடு விளைவிக்கிறார்கள். பெரும்பான்மையினர் அச்சத்தால் அவர்களை விட்டு விலகி ஓடுகிறார்கள். அந்த ஒரு சிலர் வைத்ததே சட்டமாகி விடுகிறது.
  6. தேர்வில் தோற்றுப் போனால் தற்கொலை ஒன்று தான் தீர்வா? தோற்றுப் போனவர்கள் மீண்டும் வெல்வதில்லையா? உலக வரலாற்றை சற்றே புரட்டிப் பார்த்தோமானால் பல சாதனையாளர்கள் தேர்வுகளில் தோல்வியுற்ற செய்திகளைக் கண்ணுறலாம்.
  7. யாரும் உங்களை விட்டு விலக காரணமாக இருக்காதீர்கள். அனைவரையும் அன்போடு அரவணைத்து உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்.
  8. ஒருவன் உயர, உயரப் பணிவு வர வேண்டும். அது தான் அறிவின் ஆரம்பம்.
  9. ஒருவன் எவ்வளவு தான் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், உயர் பதவி வகித்தாலும், அடக்கம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் செய்தால், அவனை அறிவுடையோர் மதிக்க மாட்டார்கள்.
  10. நல்ல பேச்சுக்கு ஆர்ப்பாட்டம் அவசியமில்லை.அடக்கமே அதன் அணிகலன். 


திங்கள், 25 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து- 9

  1. சேராத இடம் சேர்ந்தவர்கள் எவரும் வாழ்க்கையில்  கரை சேர்ந்ததாக வரலாற்றில் பதிவு இல்லை.
  2. நல்லோர் சொல் கேள். அவர் பக்கம் நில். அவர்கள் வகுத்த பாதையில் செல். வாழ்க்கையில் வெல்.
  3. சொல் ஒன்று; செயல் வேறு என்ற ரீதியில் வாழ்வோர் எவரும் வாழ்வில் உயர்ந்ததாக வரலாறு இல்லை.
  4. முதுமையைப் பார்த்து இளமை பரிகசிக்கும். முதுமையோ இளமையைப் பார்த்துப் பரிதாபப்படும்.
  5. இளமை கூறியது, "நான் எவ்வளவு அழகாகவும், பலசாலியாகவும் உள்ளேன் பார்த்தாயா? " முதுமை அடக்கத்தோடு சொன்னது, "நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்." புரிந்துகொண்ட இளமை தலை குனிந்தது. 
  6. பேரண்டப் பெரு வெளியில் நாம் ஒன்றுமே இல்லை என்பது அறிந்தும் நம்மால் தற்பெருமை, மமதை, அகங்காரம், வீண் ஆர்ப்பாட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட முடியவில்லையே!
  7. ஓராண்டு வாழ்ந்தாலும், நூறாண்டு வாழ்ந்தாலும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதே பிறவி எடுத்ததன் பயனாகும்.
  8. ஒரு வயதான மூதாட்டிக்கு சாலையைக் கடக்க ஒருவன் உதவினால், அவன் அந்த நாளை பயனுள்ள நாளாக வாழ்ந்தவனாகிறான்.
  9. வெளிச்சம் வர இருள் விலகும். கதிரொளி பட்டதும் காலைப் பனி காணாமல் போகும். அது போல் தான் துயரங்களும். காலம் தரும் ஒத்தடத்தில் கரைந்து போகும். 
  10. நல்லவர்களைப் பாராட்டுங்கள். இன்னும் நல்லது செய்வார்கள்.



   

சனி, 23 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-8


  1. திறந்து வைக்கப்பட்டுள்ள சாக்கடைகளில் பிளாஸ்டிக் காகிதங்கள், பைகள் போன்ற வேண்டாத பொருள்களைப் போடுபவர்கள் சமூகக் குற்றவாளிகள்.  மழைக் காலங்களில் சாக்கடைகள் அடைபடுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு அவர்களே காரணம்.
  2. சாதாரணமாகச் சொன்னாலோ அல்லது வேண்டிக் கொண்டாலோ யாரும்  எதையும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அதனால் தான் கண்ணதாசன்  "ஜனநாயகத்தை விடுத்து, சற்றே கையில் சவுக்கு எடுப்போம்" என்று பாடிச் சென்றார்.
  3. தேர்தல் முடிந்ததும் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்கள் வாழ்த்த வேண்டும். வெற்றியாளர்கள் அடக்கத்தோடு எல்லோரையும் பாகுபாடின்றி  நடத்த வேண்டும். கட்சி வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர்க்கொருவர்  பிறந்த நாள் வாழ்த்துக் கூற வேண்டும். எல்லோரும் எல்லோர் வீட்டு  விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் வருமா அந்த  நயத்தக்க நாகரிகம்?
  4. பரிணாம வளர்ச்சியில் மனிதன் என்ன தான் புறத் தோற்றத்தில் விலங்குகளிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அவனின் உள் மனதில் இன்னும் விலங்கு உணர்வுகளே நிரம்பியுள்ளன.
  5. ஆசை போட்டியை ஏற்படுத்துகிறது; பொறாமையை வளர்க்கிறது; வெறுப்பை  உருவாக்குகிறது; மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. முடிவில் மன அமைதி  வெளியேறுகிறது; உடல் நலம் கெடுகிறது; வாழும் நாட்கள் குறைகின்றன. அதனால் தான் அன்றே புத்தன் சொன்னான், 'ஆசையை ஒழி' என்று.
  6. நேர்மறையாக எண்ணுங்கள். மனிதர்கள் யாவரும் நல்லவர்கள்.    இனியவர்கள். உங்கள் தோழர்கள். ஐயக் கண்ணால் யாரையும் பார்க்காதீர். யாவரையும் அன்போடு அணுகுங்கள். சூழ்நிலைத் தவறுகளை பெரிய  மனதோடு மன்னியுங்கள். புல், பூண்டு முதல் மனிதர் வரை எல்லோரையும்  நேசியுங்கள். உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்; வாழ்க்கை வசந்தமாய்  சிரிக்கும்.
  7. மழையைக் கண்டு மகிழாதவன் நெஞ்சில் ஈரமில்லாதவன்.
  8. நாள் முழுதும் உண்மையாக உழைப்பவன் மட்டுமே உண்ணவும் உறங்கவும்  தகுதி உடையவன்.
  9. தவறு செய்வது மனித இயல்பு. அதே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது அறிவுடைமை அல்ல.
  10. மழைக்காக உழவன் இறைவனை வேண்டுகிறான். மண்பானை செய்பவனோ மழை பெய்யக் கூடாது என இறைஞ்சுகிறான். என்ன செய்வான் இறைவன், பாவம்!

 
    

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-7


  1. உருப்படாதவன் என்று யாருக்கும் அவசரப்பட்டு பட்டம் சூட்டி விடாதீர்கள். அவனுக்குள்ளும் ஏதாவது திறன் ஒளிந்து இருக்கலாம். அதைக் கண்டறிந்து அவனுக்கு முறையான பயிற்சி அளித்தால், அவன் உயர்நிலைக்கு வருவான். சற்று காலம் பிடித்தாலும் முயற்சியைக் கைவிடாது தொடர்ந்து உழைத்தால்  வெற்றி நிச்சயம்.
  2. அடித்தாலும், இடித்தாலும், ஏளனம் செய்தாலும், எள்ளி நகையாடினாலும், வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்தாலும் கொண்ட கொள்கையிலிருந்து  பிறழாமல் உண்மை வழியில் நடப்பதன் பெயர்தான் காந்தியம். 
  3. நம்மால் செயல்படுத்த முடியவில்லை என்பதற்காக நீதி நெறிகளை கேலி செய்தல் என்பது அறிவுடைமை அல்ல. நம்மை அளவீடாகக் கொண்டு நாமே உலகத்தை அளத்தல் ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.
  4. வெளியே தெரியாமல் மரத்திற்காக நீர் சேகரிக்கிறது வேர். வேர் போன்று சில நல்லவர்கள் அமைதியாக, விளம்பரமில்லாமல் சமுதாயத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சில அற்பப் பதர்கள் மட்டுமே சிறிய சிறிய விசயங்களுக்காக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்; தற்பெருமை  பேசுகிறார்கள்; ஆர்ப்பரித்து, அமர்க்களம் செய்கிறார்கள்.
  5. கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதை வகுப்பு  நடத்துபவர்கள், தாங்கள் ஆற்றும் பணிக்கு வெகுமதி இல்லையே, விளம்பரம்  இல்லையே, யாரும் பாராட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள்;   அவதிப் படுகிறார்கள்; விரக்தி அடைகிறார்கள்.
  6. இடிப்பதாலோ, அடிப்பதாலோ யாரும் உண்மையில் திருந்துவதில்லை. தாமே தாம் செய்வது தவறு என உணரும் பொழுது மட்டுமே ஒருவரால் உண்மையில்  திருந்த முடியும். ஆக, திருத்தம் என்பது உள்ளிருந்து முளைவிட வேண்டும்.
  7. ஒரு உணவகத்திற்குச் சென்று நூறு, இருநூறு உரூபா செலவழித்து உணவு அருந்துகிறோம். ஆனால், நம்மில் பலர் உணவு பரிமாறியவருக்கு இரண்டு உரூபா கூடக் கொடுப்பதில்லை. பணமிருந்தும் கொடுக்க மனம் இருப்பது  இல்லை. ஒருவேளை அந்தத் தோழர் பகுதி நேரக் கல்லுரி மாணவராகக் கூட இருக்கலாம். தயவு செய்து அவருக்கு உதவுங்கள்.
  8. அரசு மருத்துவ மனை வளாகத்தில் எச்சில் துப்புகிறோம். புகைக்கிறோம்.     இரைச்சல் போடுகிறோம். நோயாளிகளை நாம் சற்றும் நினைத்துக் கூட    பார்ப்பதில்லை. நாமே சுகாதார சீர்கேட்டை உண்டாக்கலாமா? மருத்துவ    மனைகள் தூய்மையாக இருக்க நாம் உதவ வேண்டும்.
  9. கிராமத்தில் பேருந்தில் ஏறியதும் வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும்  சிலரை கவனியுங்கள்.பயணம் முழுதும் வாயில் போட்டு குதப்பி விட்டு நகரில் வந்து இறங்கியதும் அழகான சாலையில் சிவப்பான தாம்பூலத்தை அனுபவித்துத் துப்புவார்கள். நம் நகரின் அழகையும், சுகாதாரத்தையும் நாமே பாழாக்குவது எவ்வகையில் நியாயம்? 
  10. நடைபாதை நாகரிகம் என்று ஒன்று உள்ளது.நடைபாதையில் நின்ற வண்ணம் ஊர்க் கதைகள் பேசிக்கொண்டு மற்றவர்கள் நடந்து செல்ல  இடையூறாக இருக்கக் கூடாது.



வியாழன், 14 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-6


  1. எடுத்தேன்;கவிழ்த்தேன் என்று செயல்படுதல் சர்வாதிகாரம்; நடைமுறைக்கு  ஒத்து வராத நாகரிகமற்ற ஆட்சி முறை.
  2. ஆசிரியர்களே! ஒரு குழந்தை வீட்டு வேலை செய்து வராவிட்டால் வானம் இடிந்து, விழுந்து  விடப் போவதில்லை. தண்டனைகள் மூலம் இளந்தளிர்களைக் கருக்கி விடாதீர்கள். அன்பு மூலம் மட்டுமே ஒரு குழந்தையை நம் வழிக்குக் கொண்டுவர இயலும்.
  3. மனிதப் பிறவி மிக உயர்ந்தது. ஆடு,மாடுகளைப் போல சாலையிலே அடிபட்டுச் சாவதற்காக நாம் இம்மண்ணில் பிறக்கவில்லை. செயற்கரிய செய்யும்பொருட்டு பிறந்திருக்கிறோம். எனவே எச்சரிக்கையோடும், பாதுகாப்பாகவும் இருங்கள். உங்கள் குழந்தைகளையும் அவ்வாறு வாழக் கற்றுக்கொடுங்கள். உங்களை நம்பி உங்கள் குடும்பத்தில் பல பேர்கள் கனவுகளோடு காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
  4. நீ என்னவாக வேண்டுமானாலும் ஆவது உனது விருப்பம்; உனது உரிமை. பொறியாளர், மருத்துவர், வியாபாரி, விஞ்ஞானி, தொழிலதிபர், தொழிலாளி, ஓட்டுனர் இவற்றில் எது என்றாலும் சரியே. தேர்ந்து எடுத்த துறையில் திறமைசாலியாக இரு. அது தான் முக்கியம்.மற்றபடி, செய்யும் தொழிலில் கீழானது, மேலானது என்று எந்த வேற்றுமையும் இல்லை.
  5. எதிர்மறையாக எதைச் சொன்னாலும் அதைச் செய்து பார்க்க முனைவது குழந்தைகளின் இயல்பு. எனவே முடிந்தவரை குழந்தைகளிடம் எதிர்மறையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
  6. குழந்தைகள் அப்பா,அம்மாவை உயர்வாகக் கருதுகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்னால் பெற்றோர்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது. குறிப்பாக,சண்டை போட்டுக் கொள்ளல் கூடாது.
  7. எப்போதும் நல்லவர்களுடன் இருங்கள். சில தற்காலிக சில்லரை லாபங்களுக்காக தீயவர் பக்கம் சாயாதீர்கள். அது, உங்களுக்கும் நல்லதல்ல; உங்களை உள்ளடக்கிய சமூகத்திற்கும் நல்லதல்ல.
  8. பணிவாக இருங்கள். பாசமாகப் பழகுங்கள். இனிமையாகப் பேசுங்கள். எல்லோரும் உங்களை நேசிப்பார்கள்.
  9. அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தற்காலிக வெற்றிகளை அடையலாம். அன்பினால் மட்டுமே நிரந்தர வெற்றிகளை ஈட்ட முடியும்.
  10. பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனாலும், ஒரு சில சுயநலவாதிகள் அவர்கள் மீது வன்முறையைத் திணிக்கிறார்கள்.

புதன், 13 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-5


  1. நேசிக்கும் தொழிலை தேர்ந்து எடு அல்லது தேர்ந்து எடுத்த தொழிலை நேசி.
  2. உன் தாத்தா தன் தொழிலில் கோடி,கோடியாக பணம் ஈட்டியிருக்கலாம். உன் அப்பா எல்லாவற்றையும் இழந்து ஓட்டாண்டியாகி இருக்கலாம். இரண்டிலிருந்தும் பாடம் படி. நீ முன்னேற பாதைகள் புலப்படும்.
  3. எப்பொழுதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக இரு. அது உன் ஆயுளைக் கூட்டும்; நல்ல நண்பர்களை உருவாக்கும்.
  4. நாளை நமக்கு வெற்றி மாலைகளைச் சூட்டக் காத்திருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இன்று அதற்கு நம்மை தகுதியாக்கிக் கொள்வது மட்டுமே.
  5. அளவுக்கு மீறிய அறிவுரைகளும் உபதேசங்களும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
  6. உண்மையான நட்பு நீ துயரப்படும் பொழுது கண்ணீர் துடைக்கும். நீ சந்தோசிக்கும் பொழுது, பரவசப்படும்.
  7. படித்தவன் சூதும் வாதும் செய்தால் 'ஐயோ'வென்று போவான்' என்று சபிக்கிறார் பாரதி. ஆனால், அவன் ஐயோ என்றும் போகவில்லை; அம்மா என்றும் சாகவில்லை.மாறாக, ராஜ போகத்தில் வாழ்கிறான்.
  8. தலைக்கனம் ஆபத்தானது. அது ஒருவனை அதல, பாதாளத்திற்குள் அமிழ்த்து விடும்.
  9. படிக்காதவர்களிலும் அறிவாளிகள் உள்ளனர், படித்தவர்களில் முட்டாள்கள் இருப்பதைப் போல.
  10. சுற்றுப்புறத்திலிருந்து ஒரு சிறிய குப்பையை நீக்குபவன் கூட தூய்மையான உலகை நிர்மாணிப்பதில் பங்கு கொள்கிறான்.


திங்கள், 11 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-4


  1. உன்னிடம் இருப்பதே உனக்குப் போதும். மற்றவனோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்பட்டால், அது மனநலக் கேட்டுக்கு இட்டுச் செல்லும்.
  2. மரம் மழை தருகிறது. நிழல் தருகிறது. மண் காக்கிறது. பறவைகளுக்கு வீடாகிறது. பயணிகளுக்கு நிழற்குடையாகிறது. நட்புணர்வோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கும் மரத்தை வெட்டலாமா?
  3. இலட்ச, இலட்சமாய் செலவழித்து சாலை அமைக்கிறார்கள். அது நம் சாலை. நமது வரிப் பணத்தில் அமைக்கப்பட்டது. அதில் கட்சிக் கொடிகள் நடவும் அலங்கார வளைவுகள் அமைக்கவும் குழி தோண்டி சாலையைச் சிதைக்கிறோம். இது நியாயமா?
  4. எச்சில் துப்பி, குப்பை கொட்டி பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் திருத்துவதில் தவறேதுமில்லை.
  5. சொல்லித் திருந்தாத சில பிறவிகள் கடுமையான சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் மட்டுமே அச்சப்படுவார்கள்.
  6. நல்ல நண்பர்களைப் பார்க்கும்பொழுது, பேசும்பொழுது, சுக, துக்கங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் பொழுது நமது கவலைகள் எல்லாம் கதிரொளி பட்ட காலைப் பனி போல் ஓடி ஒளிந்து கொள்கின்றன.
  7. உண்மையான நட்பு சாதி,மத,இன வேற்றுமைகள் பார்க்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் அதற்கு இல்லை.துன்பத்திலும்,இன்பத்திலும் தொடர்ந்து வரும்.
  8. ஒவ்வொரு முறை உங்களுக்கு இலாபம் கிட்டும் பொழுதும் அதில் ஒரு சிறு பகுதியை நோயாளிகளின் மருத்துவத்திற்காகவோ, ஏழைகளின் கல்விக்காகவோ ஒதுக்குங்கள். உங்களைச் சுற்றி ஒரு நல்ல சமூகம் உருவாக அது வழிவகுக்கும்.
  9. நீங்கள் எப்பொழுதும், எதிலும் ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்ந்தால், உங்கள் குழந்தைகள் நல்ல குடிமக்களாக உருவாவர்.
  10. சோதனைகள் வரும் பொழுது வேதனைப்படுவது விவேகமல்ல. அவற்றிலிருந்து மீள்தல் பற்றிய வழிகளை யோசிப்பதே அறிவுடைமை.  

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து-3


  1. கொடுப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது; ஈரமான மனமும் வேண்டும்.
  2. உறவுகள் வலுப்பட கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உண்மையான நேசம் வேண்டும். மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். ஒப்பீட்டைத் தவிர்க்க வேண்டும். சாதி,மதம்,பொருளாதார ஏற்றத் தாழ்வு இவை தாண்டி அன்பை மட்டுமே அளவீடாகக் கொள்ள வேண்டும்.
  3. சின்னச் சின்ன சில்லரைக் காரணங்களுக்காகப் பிரிதல் என்பது பக்குவமற்ற மனத்தையே காட்டும்.
  4. பொது நலச் சேவை  செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அருகி விட்டனர். ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
  5. பை நிறைய ஊதியம் வாங்கியும் மனம் நிறையாததால் கையூட்டு வாங்குகிறார்கள்.
  6. வாழ்க்கை சிலருக்கு வசந்த மாளிகை. பெரும்பாலோருக்கு போர்க்களம். சிலர் மாளிகையில். பலர் குடிசைகளில். இன்னும் சிலரோ நடைபாதைகளில். இந்த ஏற்றத் தாழ்வு இருக்கும் வரை 'ஒன்று பட்ட தேசம்' என்பது வெற்றுக் கனவே.
  7. எல்லோருக்கும் எல்லாமும் சமம் என்று சட்டம் சொல்வதைக் காட்டிலும் வேடிக்கை வேறொன்று இருக்க முடியாது.
  8. தோற்ற பிறகும் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதிலிருந்து பாடம் படிக்காதவன் என்றுமே வெற்றி பெற முடியாது.
  9. எப்படி வெற்றி நிரந்தரம் இல்லையோ, அது போல தோல்வியும் நிரந்தரமல்ல. மீண்டும் வெல்லலாம்.
  10. பதவிக்கு வருவது என்பது பொது மக்களுக்கு உழைப்பதற்கே;தம் மக்களுக்கு அல்ல.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -2


  1. பாடுபட்டால் மட்டும் போதாது; படும் பாட்டில் ஈடுபாடு வேண்டும். அப்பொழுது தான் அதில் பலனிருக்கும்.
  2. நேற்றைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாது இருந்திருக்கலாம். அதையே நினைத்துப் புலம்பி இன்றைய வாழ்க்கையை துயரமாக்கிக் கொள்வது முட்டாள்தனம்.
  3. நேற்று விதைத்தது இன்று முளைக்காதது பற்றிக் கவலைப்படாதே. நாளை முளைக்கலாம். நாளை மறுநாள் முளைக்கலாம். அப்படியும் முளைக்காவிட்டால் மீண்டும் விதை. மீண்டும் மீண்டும் விதை. நம்பிக்கையும் தொடர் முயற்சியும் தான் வாழ்க்கை.
  4. பல முறை அடித்தும் அம்மி நகரவில்லையா? அடி போதவில்லை. மீண்டும் அடி.தொடர்ந்து அடி. ஏதோ ஒரு அடியில் அம்மி கண்டிப்பாய் நகரும்.
  5. இரவாமல் இருப்பது நன்று.இரந்தும் ஈயாமல் இருப்பது கொடுமை.
  6. தேவைகளைக் குறைத்துக் கொள். சேமிப்பதை தேவை உள்ளவனுக்குக் கொடு.
  7. உன் வழித்தோன்றல்களுக்கு நீ விட்டுச் செல்ல வேண்டியது பணமல்ல-ஒரு நல்ல பாரம்பரியம்.
  8. இயற்கையை அழிப்பதன் மூலம் மனிதன் தானே தனக்கான புதைகுழியைத் தோண்டிக் கொள்கிறான்.
  9. ஒரு பக்கம் கடவுள் சிலைக்கு பாலாபிசேகம். மறுபக்கம் பாலுக்கு அழும் பாலகர்கள். இதன் பேர் தான் சமூக அநீதி.
  10. யாரையும் புண்படுத்தாமல் இருப்பதே உயர்ந்த பண்பாடு.

புதன், 6 பிப்ரவரி, 2013

சிந்தனை பத்து -1

  1. இதயங்கள் இணையும் பொழுது உறவுக்குப் பதியம் போடப்படுகிறது.
  2. மதியை இழக்கும் பொழுது விதி மீது நம்பிக்கை ஏற்படுகிறது.
  3. அறிவின் தொடர்ச்சி ஆக்கம். படிப்பின் தொடர்ச்சி படைப்பு.
  4. கத்தி எடுப்பது மட்டுமா வன்முறை? கடுஞ் சொல்லும் ஒருவகை வன்முறையே.
  5. வளர்பிறையும் தேய்பிறையும் வெறும் காட்சிப் பிழைகளே.
  6. நல்லது யார்க்கும் பணிவு. என்றும் வேண்டும் துணிவு.
  7. செல்வத்தில் சிறந்தது அறிவு. அறிந்ததில் வேண்டும் தெளிவு.
  8. கல்லாகிப் போன மண்ணில் காய்க்காது செடி கொடிகள்.
  9. இருளாகிப் போன மனதில் முளைவிடாது கற்பனைகள்.
  10. எண்ணங்கள் நல்லதானால் ஏற்றங்கள் ஓடி வரும்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

அது போதும்

குபேரனாகாட்டிப் பரவாயில்லை,
கூழாவது கிடைக்கணும்
ஒவ்வொரு நாளும் .
ராஜ வாழ்க்கை
கிடைக்காட்டிப் போகட்டும் ;
ராப்பட்டினி கெடக்காம
இருந்தாப் போதும். 

இதயத்தின் குரல்

'அது முடியாது'என்றது கர்வம்.
'அது ஆபத்தானது'என்றது அனுபவம்.
'அது அர்த்தமில்லாதது'என்றது அறிவு.
'முயற்சித்துப் பார்ப்போமே'என்றது இதயம்.
                                                                      -யாரோ 

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மூன்று குறுங் கவிதைகள்

                            ஆசை
ஆசைப் படாத
மனம் வேண்டும்
என்பதே
என்னாசை
                              பற்று
பற்றறுக்க வேண்டும்
எனும் நினைப்பைப்
பற்றிக் கொண்டிருக்கிறேன்
கெட்டியாக.
                               எழுத்து
எழுத முடியவில்லை
எனும் என் இயலாமை பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
தற்சமயம்.

                             .




சனி, 2 பிப்ரவரி, 2013

எழுதுதல்

எழுத வேண்டுமெனப்
பீறிடும் ஆசை
வெகு நாளாய்.
எதை எழுதுவதென
தீர்மானிக்க இயலவில்லை.
எதைப் பற்றி வேண்டுமானாலும்
எழுதலாம் என்கின்றனர்
ஏற்கெனவே எழுதியவர்கள்.
என்றாலும்
அச்சமாய் இருக்கிறது,
யாரேனும் எழுதியதை
எழுதி விடுவேனோவென்று.

திங்கள், 24 டிசம்பர், 2012

என்ன கிழித்தோம்?

என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்?
             மரங்களை வெட்டி மழையைத் தடுத்தோம்
             மக்களைச் சுரண்டி பைகளை நிறைத்தோம்
             கல்வியின் பெயரால் வணிகம் செய்தோம்
              கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்தோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய்  ஆர்ப்பாட்டம்?
               இயற்கையை அழித்து இல்லம் சமைத்தோம்
               இல்லாதவரின் எண்ணிக்கை பெருக்கினோம்
                வீதிகள் எங்கும் குழிகளைத் தோண்டி
                விதவிதமாகக் கொடிகள் நட்டோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்/?
                 ஆங்கிலச் சொற்களை அதிகம் கலந்து
                  அன்னைத் தமிழின் அழகைக் குலைத்தோம்
                  அயல் மொழிப் பள்ளிக்கு ஆரத்தி எடுத்து
                   தாய்மொழிப் பள்ளிக்கு தாழ்ப்பாள் போட்டோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்?
                   இயற்கையை விட்டு எங்கோ சென்றோம்
                   இதயம் தன்னை வெறுப்பால் நிறைத்தோம்
                    சாதியின் பெயரால் ரத்தம் சிந்தினோம்
                    மதம் பிடித்ததால் மக்களைப் பிரித்தோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம்?
                     மூத்தோர் சொல்லை ஏற்க மறுத்தோம்
                         
                     முதியோர் இல்லம் பெருகச் செய்தோம்
                      அன்பை இழந்து அன்னியரானோம்
                      அறிவை எதற்கோ அடகு வைத்தோம்
என்ன கிழித்தோம் பெரிதாக?
எதற்கு வீணாய் ஆர்ப்பாட்டம் ?
                         
                                                                                 


























சனி, 22 டிசம்பர், 2012

கனவுகள்

கனவுகளைக்
கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்
ஏனெனில்
கனவுகள் மரணித்தால்
வாழ்க்கை
இறக்கை    ஒடிந்த
பறக்கவியலா
பறவை.
கனவுகளைக்
கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
கனவுகள் போய்விட்டால்
வாழ்க்கை
உறைந்த பனிமூடிய
தரிசு நிலம்.
                  -------லேங்க்ஸ்டன் ஹியுக்ஸ்    

புதன், 31 அக்டோபர், 2012

அன்பு வெல்லும்

ஏழைக்கு
என்றென்றும்
நேசம் காட்டு.
எதிரிக்கும்
நட்புடனே
கரத்தை நீட்டு..
எவ்வுயிரும்
இன்பமுற
அன்பை மீட்டு.
'என்றுமே
அன்பு வெல்லும்'
எனும் தமிழ்பாட்டு.
வார்த்தைகளால்
யாரையுமே
 பழிக்காதே.
வசவுகளால்
இதயங்களைக்
 கிழிக்காதே.
நல்லுறவை
வன்முறையால்
 இழக்காதே.
நட்புணர்வை
இழிமொழியால்
 துளைக்காதே.
அன்பாலே
எல்லாமும் முடியும்.
ஆனந்தம்
வாழ்க்கையிலே விடியும்.
ஒரு கோடி
துயரங்கள் வடியும்.
ஓயாத
நோயெல்லாம் மடியும்.


செவ்வாய், 16 அக்டோபர், 2012

தேர்தல்

நல்லவர்கள்
வரிசையாக நின்றார்கள்
வாக்குச்சாவடிகளில்.....
நல்லவர்கள்
அல்லாதவர்களைத்
தெரிவு செய்வதற்காக.

மழை

விழவேண்டிய நேரத்தில்
விழவேண்டிய இடத்தில்
விழாமல் பொய்த்ததால்
விழுந்து போனது
விவசாயம்.

புதன், 3 அக்டோபர், 2012

தமிழும் நானும்

அன்னைத் தமிழே,
உன்னை நினைத்தால்
ஆனந்தம் பாய்கிறது.
கன்னித் தமிழே,
உன்னைப் படித்தால்
கன்னலும் தோற்கிறது.
என்னில் நுழைந்து
இதயம் நிரம்பி
பொங்கி வழிகிறாய்.
நின்னை வணங்கி
நெஞ்சில் இருத்தி
பொன்னாய்ப் போற்றிடுவேன்!

உயிராய் எம்முள் நிறைந்தவளே,
உணர்வாய் குருதியில் கரைந்தவளே,
பயிராய் எம் வயல் படர்ந்தவளே,
பாகாய் மனதில் இனிப்பவளே,
கயிறாய் தமிழரை இணைப்பவளே,
கானகத் தேனாய் சுவைப்பவளே,
துயரை இசையால் துடைப்பவளே,
தொழுது உன்னைப் போற்றிடுவேன்!


இரத்தம்...புத்தம்...கச்சாமி!

ஒரே புத்தன்
இந்தியாவில் ஒரு மாதிரி...
இலங்கையில் வேறு மாதிரி...
இந்திய புத்தன்
யுத்த வெறி பிடித்த
அசோக மன்னனை
சாந்த சொரூபியாய்
மாற்றம் செய்தான்.
இலங்கைக்குப் போன
இறக்குமதி புத்தனோ
இரக்கமில்லா ராஜபக்சேயை
ரத்தம் குடிக்கும் அரக்கனாக்கி
அகம் மகிழ்கின்றான்.
ஒரே புத்தன்
இருவேறு நாடுகளில்
வெவ்வேறு மாதிரி!

வியாழன், 27 செப்டம்பர், 2012

கனவுகள்

அழுகின்ற குழந்தைக்கு
ஆழாக்குப் பால் வாங்கணும்...
ஒழுகும் குடிசைக்கு
ஓலை வாங்கி மேயணும் ....
மெழுகுவர்த்தியில் படிக்கும்
சின்னப் பையனுக்கு
மின்விளக்கு பொருத்தணும்...
அழகான மனைவிக்கு
வரும் பொங்கலுக்காவது
கம்மல் வாங்கித் தரணும்...
இருக்கின்ற மவராசனுக்கு
இவை எல்லாம்
கடுகுச்சோடு விசயங்க தான்.
இல்லாத சம்சாரிக்கோ
மொடாச்சோடு கனவுகள்.

அது வரைக்கும்

தேளாய்க் கொட்டுகிறது வறுமை.
தீயாய் எரிக்கிறது பசி.
சாண் ஏற முழம் சறுக்கும் வாழ்க்கை.
'விழுவது எழுவதற்கே'
கேட்பதற்கு
கவர்ச்சியாகவே இருக்கிறது
உபதேசம்.
எழும் வரைக்கும்
உயிர்த்திருக்க என்ன வழி?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

பாடம்

பகையும் உறவும் பருவங்கள் போல
தேயும்;வளரும் வானத்து நிலவாய்.
கசப்பு என்பது இனிப்பின் மரணம்.
வெறுப்பின் முடிவில் அன்பின் உதயம்.
பொறுமையின் உச்சம் பூமியின் நடுக்கம்.
காற்றின் சினத்தில் கடும்புயல் சீறும்.
கடலின் கொதிப்பில் வெள்ளம் பாயும்.
கதிரவன் சீறின் குளிர்நீர் கொதிக்கும்.
ஏழைகள் எழுந்தால் புரட்சிகள் வெடிக்கும்;
ஆளும் வர்க்கம் அடியோடு  ஒழியும்.
சரித்திரம் சொல்லும் பாடம் இது தான்.
தெரிந்து நடந்தால் வாழ்க்கை பிழைக்கும்.

வாழ்க்கையின் ரகசியம்

கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் அழுகை
அது தான் வாழ்க்கையடா!
இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள்
அதன் பேர் இயற்கையடா!
இனிப்பே தின்றால்
திகட்டிப் போகும்
கசப்பும் வேண்டுமடா!
நிழலின் அருமை
வெயிலில் தெரியும்
பெரியோர் மொழிந்ததடா!
வாழும் வரைக்கும்
மனிதரை நேசி
வாழ்க்கை இனிக்குமடா!
இருப்பதைப் பலர்க்கும்
பகிர்ந்து கொடுத்தால்
இன்பம் கிடைக்குமடா!



வியாழன், 20 செப்டம்பர், 2012

ஒளியிழந்த கண்ணினாய்.

           இருட்டு..இருட்டு...எங்கும் இருட்டு,
           நடுப்பகலின் கூச வைக்கும் ஒளியில் கூட.
           மீளவியலா இருள்;முழுக் கிரகணம்.
           பகலின் நம்பிக்கை துளியுமின்றி.
            [ஹெலன் ஹெல்லருக்குப் பிடித்த ஹோமரின் வரிகள்] 

சிறிது பெரிதாய்.....


                இங்கு
                 இந்தக் கணத்தில்
                 நிகழும்
                 சின்னஞ்சிறிய
                 வண்ணத்துப்பூச்சியின்
                 சிறகசைப்பு
                  நாளை அல்லது
                  பிறிதொரு நாள்
                  வேறொரு இடத்தில்
                   மிகப் பெரிய
                   சூறாவளியைக்
                   கிளப்பக்கூடும்.
                                      ------யாரோ 

புதன், 19 செப்டம்பர், 2012

வெண்பாக்கள்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள்,எழுபதுகளில் இலக்கிய இதழ்களில் வெண்பாப் போட்டிகள் நடைபெற்றன.குறிப்பாக கண்ணதாசனின் தென்றல் இதழில் வெளிவந்த வெண்பாக்கள் தரம் வாய்ந்தவை.தமிழக அரசின் தமிழரசு மாத இதழில் வரும் வெண்பாப் போட்டியில் நானும் என் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களும் கலந்து கொள்வது உண்டு.ஒன்றிரண்டு தடவை எங்கள் பாக்கள் வெளியிடப்பட்டு,நாங்கள் பரவசப்பட்டதுண்டு.
                         ஒரு தடவை கனிச்சோலை என்ற இதழில் வெண்பாப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.'மன்னிப்பே இல்லை உனக்கு' என்ற ஈற்றடிக்கு வெண்பா எழுத வேண்டும்.வழக்கம்போல்நானும் நண்பரும் எழுதி அனுப்பினோம்.அடுத்த இதழில் பத்து வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.நண்பரின் வெண்பா வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் என் வெண்பாவைக் காணோம்.சிறிது ஏமாற்றமாக இருந்தது.மெல்ல புத்தகத்தைப் புரட்டினேன்.என்ன ஆச்சரியம்!நடுப்  பக்கத்தில் என் வெண்பா முத்திரைக் கவிதையாக ஒரு இலக்கிய அணிந்துரையுடன் இடம் பெற்றிருந்தது.
                          பல ஆண்டுகளுக்கு முந்தைய 'தமிழரசு' இதழ் ஒன்றை ஞாபகார்த்தமாக பாதுகாத்து வருகின்றேன்.சில நாட்களுக்கு முன்னால் அதில் இருந்த வெண்பாக்களை பார்வையிட்டேன்.அந்த வெண்பாக்களில் ஒன்று இன்று கவிப்பேரரசர் என்று உலகெங்கும் அறியப்படும் அன்றைய வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டிருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.
                           நான் எழுதிய மூன்று வெண்பாக்கள் பின்வருமாறு:

                  பதியில்லை;கைம்பெண்நான்;பாழும் உலகில்
                  விதியென்று நானிருந்தேன்; ஆனால் --சதிநிலவே
                   இன்னுமெனை நீவேறு வாட்டிநின்றால்,உண்மையாய்
                   மன்னிப்பே யில்லை யுனக்கு.
                                                               [கனிச்சோலை---ஜூலை 1970]
                    பொட்டில்லை;பூச்சூடச் சுற்றத்தார் ஒப்பவில்லை;
                     கட்டினேன் காரிகைக்குப் பொற்றாலி -சுட்டெடுத்த
                     ஆணிப்பொன் பூமுகத்தில் ஆனந்தப் புன்முறுவல்
                      காணக் குளிர்ந்ததே கண்.
                                                                [தமிழரசு ....நவம்பர் 1970]
                       எல்லா நலத்துடனும் ஏற்றம் பலவுற்று
                        வல்லார் மிகச்சிலரே வாழ்கின்றார் - பல்லோர்
                        தலைக்கெண்நெய் இல்லாது தாழ்கின்றார்;இந்த
                        நிலையை ஒழிக்க நினை.
                                                                 [தமிழரசு 16.08.1971]

                

திங்கள், 17 செப்டம்பர், 2012

சாதனை நாயகர் பெரியார்

இன்று செப்டம்பர் 17.மனிதர்களுக்கு முகவரி தந்த மாமேதை தந்தை பெரியார் பிறந்த நாள்.மதமும் சாதியும் மனிதர்களை அவமதித்தபொழுது அதற்கு எதிராக எரிமலையாய்க் கிளர்ந்து  எழுந்தவர் பெரியார்.கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாவிட்டாலும் ஒரு சமூகப் போராளியாய் அவர் புரிந்த சாதனைகள் இன்று பல பேராசிரியர்களின் ஆராய்ச்சிப் பட்ட மேற்படிப்புக்கு பாடப் பொருளாகத் திகழ்கின்றன.மூச்சடங்குகிற வரையிலும் தமிழ் மண்ணெங்கும் சூறாவளியாய் சுற்றி தன்மான முழக்கம் செய்த தந்தை பெரியாரை நினைவுகூர என்றோ எழுதிய ஒரு கவிதையை வாசகர்களுக்கு முன்னர் வைக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

               அறியாமைக் கருக்கிருட்டில் அமிழ்ந்திருந்த தமிழர்களை
                    அறிவென்னும் வெளிச்சத்தால் விடுவித்த ஆதவன் நீ!
                வறியாராய்க் கடுந்துயரில் வதையுண்ட ஏழையரை
                      வாழவைக்க இங்குதித்த வண்ணத்தமிழ் மன்னன் நீ!
                  பறிபோன பழந்தமிழர் பண்பாட்டு மேன்மைதனை
                       பக்குவமாய் மீட்கவந்த பைந்தமிழர் தோழன் நீ!
                  சரியாத தமிழ்மொழியை சாகின்ற கணம்வரைக்கும்
                         சலிக்காமல் ஒலித்திட்ட சாதனையின் நாயகன் நீ!

                    சாதியென்ற சவக்குழிக்குள் சரிந்திட்ட மக்கள்தமை
                         சரிசெய்து எழவைத்து சரித்திரத்தில் இடம்பெற்றாய்!
                     நாதியில்லா நடைப்பிணமாய் நலிவுற்ற பாமரர்க்கு
                          நல்லவழி காட்டுதற்கு நாளெல்லாம் பாடுபட்டாய்!
                      ஆதிமகன் வள்ளுவனின் 'பிறப்பொக்கும் உயிர்க்' கென்ற
                           அழியாத வேதத்தை எல்லோர்க்கும் போதித்தாய்!
                       'நீதிஎலாம் பொது'வென்ற நிறைமொழியின் சத்தியத்தை
                            நின்றொளிரும் தத்துவமாய் இங்கெமக்கு நீ தந்தாய்!
                                                   [தினகரன் 17.09.2003]
                     
                     

காஞ்சி வேந்தே!வாழி!வாழி!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்.அவர் தலை சிறந்த பேச்சாளர்;ஈடு இணையற்ற எழுத்தாளர்.தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் முத்திரை பதித்தவர்.இறுதி வரை படித்துக் கொண்டே இருந்தவர். .பத்திரிக்கையாளர்.நாடக நடிகர்.அரசியலாளர்.பன்முகம் கொண்ட அந்த மனிதாபிமானி இன்று நம்மிடையே இல்லை.எனக்குள் தமிழின் பால் சாகாத காதலை தோற்றுவித்த அந்த மாமனிதனை நினைவுகூர என்றோநான் எழுதிய ஒரு கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன்.கவிதை பின்வருமாறு:

                நூலென்றால் தமிழர்க்குக் குறளாம்;அமுத
                     மொழியென்றால் உயர்தமிழே முன்னே நிற்கும்!
                 பாலென்றால் பசும்பாலே சிறப் புடைத்து!
                      பழமென்றால் இனிக்கின்ற மாவீன் கனியே!
                  ஆறென்றால் காவிரிதான் பாய்ந்து வரும்!
                       அன்பென்றால் அண்ணாவின் அன்பே அன்பு!
                   ஊரென்றால் காஞ்சியைத்தான் ஒப்புக் கொள்வோம்!
                        உறவென்றால் அண்ணாதான் உயர்ந்து நிற்பார்!

                 ஏர்பிடித்து உழுகின்ற உழவர் மக்கள்,
                        ஏற்றமிகு தொழிலாளர்,புலமை மிக்கார்,
                   பார்வியக்கும் தமிழகத்து இளைஞர் கூட்டம்,
                         பைந்தமிழின் நல்லழகுப் பெண்டி ரெல்லாம்
                   கார்ஒக்கும் கலைவல்லார் காஞ்சி வேந்தை
                          கவின்தமிழாள் பெற்றெடுத்த ஆணிப் பொன்னை
                    ஆர்க்கின்ற அன்புடனே வாழ்த்து கின்றார்!
                          அறிஞர்புகழ் தொல்லுலகில் வாழி!வாழி!
                                                         [மாலைமுரசு 15.09.1970]

                  

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

தலைவர்

அவர்தான் எல்லாமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்.
அவர் நன்கறிவார்
அவரில்லை என்பதை.
ஆனாலும் விடுவதாயில்லை
சுற்றிலுமிருப்பவர்கள்.
எப்பொழுதும் போல
இம்முறையும்
ஏற்றிவிட்டார்கள்
பலிபீடத்தில்.
.

இயற்கை

யாருக்குத்
தெரியப் போகிறது
என்ற தைரியத்தில்
நாம் செய்யும் காரியங்கள்
யாருக்கோ
தெரிந்துவிடுகிறது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆப்ரிக்காவின் வேண்டுகோள்

நீயல்ல நான்...
ஆனாலும் நீ
எனக்கொரு சந்தர்ப்பம்
தர மறுக்கிறாய்;
நான் நானாக இருக்க
விடமாட்டேன் என்கிறாய்.
"நான் நீயாக இருந்தால்...."என
பிலாக்கணம் பாடுகிறாய்.
நான் நீயல்ல என்பது
உனக்குத் தெரிந்திருந்தும்
என்னை நானாக இருக்க விடாது
அடம் பிடிக்கிறாய்.
நீதான் நான் என்றும்
என் செயல்கள் நினதென்றும் கருதி
அவற்றில் குறுக்கிடுகிறாய்;
உள்ளே நுழைகிறாய்.
நியாயமில்லாமல்
அறிவில்லாமல்
முட்டாள்தனமாக
நான் நீயாக முடியுமென்றும்
உன்னைப் போல
பேச,சிந்திக்க,செயல்பட
என்னால் முடியுமென்றும்
நீ எண்ணுகிறாய்!
எல்லாம் தெரிந்த இறைவன்
என்னை நானாகவும்
உன்னை நீயாகவும்
தெளிந்து படைத்துள்ளார்!
அந்த இறைக்காகவேனும்,
என்னை நானாய் இருக்க
அனுமதி நண்பா!
                         ---ரோலண்ட் டாம்பெகெய் டெம்ப்ஸ்டர்




வியாழன், 13 செப்டம்பர், 2012

எங்கே வானவில் முடிகிறதோ.....

எங்கே வானவில் முடிகிறதோ அங்கே,
ஒரு இடம் அமையப்போகிறது,சகோதரனே!
அங்கே உலகம் எல்லாவிதப் பாடல்களையும் பாடப்போகிறது.
அங்கே நாம் சேர்ந்து பாடப்போகிறோம்,சகோதரனே!
நானும் நீயுமாகச் சேர்ந்து--
நீ வெள்ளையன் ...நான் அவ்வாறு இல்லாவிடினும் கூட.
அது ஒரு சோகமான பாடலாக இருக்கும்,என் சகோதரனே!
ஏனெனில் அதன் மெட்டு நாம் அறியோம்.
கற்பதற்கு கடினமான மெட்டு அது.
ஆனாலும் என் சகோதரனே,
நீயும் நானுமாகச் சேர்ந்து
நாம் கற்றுக் கொள்ளமுடியும் அதனை.
கருப்பு மெட்டு என்று ஒன்று எங்கும் இல்லை.
வெள்ளை மெட்டு என்பதும் இல்லவே இல்லை.
இசை மட்டுமே இருக்கிறது,சகோதரனே.இசை மட்டுமே.
ஆம்,நாம் இசையை மட்டுமே பாடப் போகிறோம்-
வானவில் எங்கு முடிகிறதோ,அங்கே.
                                              ---ரிச்சார்டு ரைவ்(தென்னாப்பிரிக்கக் கவிஞர்)

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நன்றாகக் கற்றுக் கொடுங்கள்

எல்லோரும் கடிதம் எழுதுகிறார்கள்.அவற்றில் பல படித்து முடித்ததும் கிழித்து வீசப்படுகின்றன.ஆனால்,சில கடிதங்கள் என்றும் சாகாத இலக்கியங்களாக சரித்திரத்தில் பதிவு செய்யப்படுகின்றன.அப்படிப்பட்ட ஒரு கடிதத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்து வாசகர்களுக்குத் தருவதில் மகிழ்வுறுகிறேன்.அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய அற்புதக் கடிதம் அது.ஆசிரியர்கள் அனைவரும் படித்துப்  பின்பற்ற வேண்டிய கற்பித்தல் தத்துவம்.

"எல்லா மனிதர்களும் நியாயவான்கள் அல்ல;எல்லா மனிதர்களும் வாய்மையாளர்கள் அல்ல என்பதை அவன் கற்றுக் கொள்ளட்டும் .

சுயநலமே உருவான ஒரு அரசியல்வாதிக்குக் கூட அர்ப்பணிப்பு உணர்வுள்ள தலைவன் இருக்கக் கூடும் என்பதையும் ஒரு கயவனுக்குக் கூட கதாநாயகன் இருக்கக் கூடும் என்பதையும்,அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

ஒவ்வொரு பகைவனுக்கும் ஒரு நண்பன்  இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தானாகக் கிடைக்கும் ஐந்து டாலர்களைக் காட்டிலும் உழைத்துப் பெறப்படும் ஒரு டாலர் அதிக மதிப்புள்ளது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இழப்பதற்கு அவன் கற்றுக் கொள்ளட்டும்.அதே  சமயத்தில் வெற்றிகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளட்டும்.

பொறாமைத் தீயிலிருந்து அவனை நெடுந்தொலைவு தள்ளிச் செல்லுங்கள்.அமைதியான சிரிப்பு என்னும் ரகசியத்தை அவனுக்குப் புகட்டுங்கள்.

அடக்கியாள்பவன் வெகு சுலபமாக அடிமையாகி விடுவான் என்பதை அவனுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக் கொடுங்கள்

புத்தகங்களின் அற்புதத்தை அவனுக்குக் காட்டுங்கள்.அதே சமயத்தில்,வானில் பறக்கும் பறவைகள்,சூரிய ஒளியில் நனையும் தேன் ஈ க்கள்,மலையோரத்துப் பூக்கள் ஆகியன பற்றிய முடிவற்ற ரகசியங்களைச் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.

ஏமாற்றிப் பிழைத்தலை விட தோல்வியுறுதல் பெருமைக்கு உரியது என்பதைப் பள்ளியில் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

தன்னுடைய கருத்துக்களில் முழு நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள் ----எல்லோரும் ஒட்டு மொத்தமாக அவை தவறு எனக் குற்றம் சாட்டினாலும் கூட

ஒரு பெரும் கூட்டத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றிச் செல்லாதிருப் பதற்கான வல்லமையை அவனுள் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.

எவர் சொல்வதையும் செவிமடுக்கக் கற்றுக்  கொடுங்கள்..ஆனால்கேட்டவற்றை உண்மை எனும் திரையில் வடித்தெடுக்கவும் கூடவே கற்றுக் கொடுங்கள்

துயரமான பொழுதுகளில்  சிரிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.கண்ணீர் வடிப்பதில் அவமானம் ஏதுமில்லை என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

எதிலும் எப்பொழுதும் குறை காண்பவர்களைப் பரிகசித்து ஒதுக்கவும் அளவுக்கு மீறி இனிப்பாகப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் கற்றுக் கொடுங்கள்.

அதிக விலை நிர்ணயிப்போருக்கே உடல் வலிமையையும் மூளையையும் விற்க வேண்டும் என அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.அதே சமயத்தில் அவனுடைய இதயத்திற்கும் ஆத்மாவிற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

வெறுமனே ஊளையிடும் கூட்டத்தின் முன் காதுகளை இறுக மூடிக் கொள்ளவும் சரியான ஒன்றுக்காக துணிவோடு போராடவும் அவனுக்கு வழிகாட்டுங்கள்.

மென்மையாகச் சொல்லிக் கொடுங்கள்.அதற்காக அவனை ஆரத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்பது அவசியமில்லை.ஏனென்றால் நெருப்புச் சோதனையில் தான் அருமையான இரும்பு உருவாக முடியும்.

விரைந்து செயல்படுவதற்கான துணிவை அவன் பெறட்டும்.அதே சமயத்தில் துணிவாக இருப்பதற்கான பொறுமையையும் சேர்த்தே அவன் பெறட்டும்.

எப்பொழுதும் தன் மீது உயர்ந்த நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்---அப்பொழுது தான் அவனால் மானுடத்தின் மேல் அபார நம்பிக்கை வைக்க முடியும்.
.
.

 .

.

   

சனி, 28 ஜூலை, 2012

மலரட்டும் சமத்துவம்

மனிதனை மனிதன் நேசிக்கும்
மகத்துவம் மண்ணில் நிகழட்டும்.
புனிதன் காந்தி வழியினிலே
புதிய உலகம் அமையட்டும்.
இனிமை எங்கும் நிலவட்டும் .
இன்னாச் செயல்கள் ஒழியட்டும்.
கனியாய் வாழ்க்கை எல்லோர்க்கும்
காலம் முழுதும் இனிக்கட்டும்.


பெரியவர் சிறியவர் பேதமில்லை.
பிறவியில் அனைவரும் சரிசமமே.
அரியும் சிவனும் நமக்கொன்றே.
அல்லா ஏசு அது போன்றே.
மரியும் மாரியும் இரண்டல்ல.
மனிதர் தனித்தனி கூறல்ல.
சரிநிகர் சமமாய் வாழ்ந்திடுவோம்
சமத்துவம் எங்கும் மலர்ந்திடவே!

ஆறாம் அறிவைப் பெற்றிருந்தும்
அறிவிலி யாய்சிலர் வாழ்கின்றார்.
தேராச் செயல்கள் புரிகின்றார்.
தேய்ந்து வாழ்வில் உழல்கின்றார்.
மாறா எவர்க்கும் வெற்றியில்லை.
மருந்துக்குக் கூட வளர்ச்சியில்லை.
கூராய் அறிவைத் துணைகொண்டே
குறியாய்ப் பாரில் உயர்ந்திடுவோம்.

எத்தனை செல்வம் குவித்தாலும்
என்றும் பணிவு நன்றாகும்.
நித்திரை நீங்கி செயல்பட்டால்
நிம்மதி நாட்டில் பூப்பூக்கும்.
இத்தரை முழுதும் இனிதாகும்;
இன்மை என்பது அரிதாகும்.
பத்தரை மாற்றுப் பொன்னாக
பாரினில் தேசம் ஒளிர்ந்திடுமே!

கடந்தது போகட்டும் விட்டுவிடு.
கண்ணீர் வடித்து என்னபயன்?
நடப்பது நன்றாய் அமையட்டும்.
நாசங்கள் அடியோடு  ஒழியட்டும்.
அடக்கமா யிருப்பதில் தவறில்லை.
அடிமையா யிருப்பதே அவமானம் .
ஒடித்திடு தடைகளைக் காலத்தே.
உயர்ந்திடு உலகில் எப்போதும்!
 


திங்கள், 23 ஜூலை, 2012

திண்டாட்டம்

மழை வேண்டி
தவங் கிடக்கும்
உழவன்.
வேண்டாமென்று
இறைஞ்சும்
குயவன்.
இருவருக்கும்
இடையிலே
செய்வதறியாமல்
இறைவன்!

சனி, 21 ஜூலை, 2012

எரிச்சல்

'பாத்து நட'
தடுக்கி விழப் போன
என்னை
எச்சரித்தார் தாத்தா;
எரிச்சலாக வந்தது.

'பாத்து செலவு செய்யக்கூடாதா/?'
பிளாக்கில்
பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு
முப்பது கொடுத்து
சினிமா பார்த்ததற்கு
அறிவுரை கூறினார் அப்பா;
எரிச்சலாக வந்தது.

'பாத்துப் போ மகனே'
அசுர வேகத்தில்
பைக்கைக் கிளப்பியபொழுது
பதறினாள் அம்மா;
எரிச்சலாக வந்தது.

இன்று
இதையே நாங்கள்
எங்கள் மகனிடம்
சொல்லும்பொழுது
எரிச்சலாய் வருகிறது
அவனுக்கும்.  

உள்ளுக்குள்ளே

செதுக்காத வரைக்கும்
கல்லுக்குள்
சிலையிருப்பது தெரியாது.

பிழியாத வரைக்கும்
கரும்புக்குள்
சாறிருப்பது தெரியாது.

கடையாத வரைக்கும்
தயிருக்குள்
நெய்யிருப்பது தெரியாது.

எரியாத வரைக்கும்
மெழுகுக்குள்
ஒளியிருப்பது தெரியாது.

செயல்படாத வரைக்கும்
உனக்குள்
ஆற்றலிருப்பது தெரியாது.

வெள்ளி, 20 ஜூலை, 2012

கோபம் ....கோபம்.....கோபம்

கோபங்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் விதவிதம்.

கண்ணகியின் கோபம்
மதுரையை எரித்தது ;
கூடலனை கூடாக்கியது.
துரோபதையின் கோபம்
குருசேத்திரம் நிகழ்த்தியது.
சிவனின் ரௌத்திரம்
திரிபுரம் எரித்தது;
தக்கனின் யாகத்தை
தவிடு பொடியாக்கியது.

சிலரது கோபம்
வெற்று வெடி போல.
ஏழையின் கோபம்
சபிப்பதோடு முடிவுறும்.

சிலர் கோபத்திலும்
அழகாக இருப்பார்கள்.

மீசை துடிப்பது
ஒரு வகைக் கோபம்.
கண்கள் சிவப்பது
பிறிதொரு வகையாம்.

கோபத்தின் உச்சத்தில்
சிலருக்கு பேச்சு வராது.
சில சமயம்
மூச்சு நின்று விடுதல்
நிகழ்தலும் உண்டு.

சினிமாக் கோபக்காரர்களின்
கண்கள் பிதுங்கும்;
பற்கள் நற  நறக்கும்;
கழுத்து நரம்புகளில்
மின்னல் தெறிக்கும்;

கோபம் இருக்குமிடத்தில்
குணமிருக்கும் என்பது பழமொழி.
பணக்காரனின் கோபம்
சற்றே வலியது தான்.
எது எப்படியாயினும்
சிரித்தபடி கோபப்படுபவன்
சந்தேகமின்றி ஆபத்தானவனே

மனிதனுக்கே கோபமெனில்
படைத்த இயற்கைக்கு
இல்லாமலிருக்குமா
பொல்லாத கோபம்?
கடலின் கோபம் வெள்ளம்.
காற்றின் கோபம் புயல்.
பூமியின் கோபம் நடுக்கம்.

சேர்ந்தாரைக் கொல்லி என்றான்
சினந் தன்னை வள்ளுவன்.
சினப்பதற்கு முன்,மனிதா ,
சற்றிதை நீ சிந்தித்தல் நலமே!  .

புதன், 14 மார்ச், 2012

அரும்புகளுக்கு அறிவுரைகள்

சின்னஞ் சிறிய குழந்தைகளே,
தேன்மொழி பேசும் குயிலினமே,
கன்னலின் இனித்திடும் நற்சாறாய்
கவலைகள் தீர்த்திடும் மருந்தமுதே!

நல்லதை என்றும் எண்ணிடுவீர்
நற்செயல் புரிந்தே உயர்ந்திடுவீர்
அல்லதைப் புறத்தே ஒதுக்கிடுவீர்
ஆன்றோர் நல்வழி நடந்திடுவீர்

தேசம் தன்னை நேசித்தே
தினமும் கடமைகள் ஆற்றிடுவீர்
பாசத்துடனே தமிழ் மொழியை
பாங்காய் நாளும் வளர்த்திடுவீர்

கல்வியைக் கண்ணாய்ப் போற்றிடுவீர்
கணினி இயலைக் கற்றிடுவீர்
பல்மொழி ஞானம் பெறுவதனால்
பாரினில் எங்கும் சென்றிடலாம்

எல்லா உயிரும் சமமென்ற
உணர்வை நெஞ்சினில் கொள்வீரே
அல்லா ஏசு ராமபிரான்
அனைவரும் நமக்கு ஒன்றேதான்.

வேண்டாம் நமக்குள் பிரிவினைகள்
வெறுப்பின் வேர்களை அறுத்தெறிவீர்
ஆண்டவன் பேரால் நமக்குள்ளே
அடிதடி நிகழ்தலை தடுத்திடுவீர்.

சொல்லும் செயலும் ஒன்றானால்
சொர்க்கம் நம்முன் உருவாகும்
கல்லும் கூட கனியாகும்.
கனவுகள் எல்லாம் நனவாகும்.

வாழும் நாட்கள் மிகக்குறைவு
வாழ்க்கை நீண்ட கடும்பயணம்
சூழும் தடைகளைப் பொடியாக்கி
சுறுசுறுப்புடனே உழைத்திடுவீர்.

நம்பிக்கை தீபம் எரியட்டும்
நாளைய உலகம் உம்கையில்
தெம்புடன் செயல்கள் புரிந்திடுவீர்
தேசம் தன்னை உயர்த்திடுவீர்.
உடலை நன்கு போற்றுங்கள்
உணவை மென்று தின்னுங்கள்
திடமாய் காரியம் செய்திடுவீர்
துணிவால் நெஞ்சை நிரப்பிடுவீர்.

மரங்களை நட்பாய் மதித்திடுவீர்
மண்ணில் வனங்களைப் பெருக்கிடுவீர்.
விண்மழை இங்கே கொட்டட்டும்
வசந்தம் வாழ்வில் கிட்டட்டும்.

வறுமை தடைஎனல் அறிவீனம்
வாழ்க்கையில் சோம்பல் பலவீனம்
எருமையாய் சோம்பி இருக்காமல்
எருதென உழைத்தால் பிரகாசம்.

தோல்விகள் தொகையாய் படையெடுக்கும்
துவண்டு நின்றால் அடிசறுக்கும்
ஆல்போல் நிமிர்ந்து நின்றிடுவீர்
அடிக்கும் புயலை வென்றிடுவீர்.

அறிவியல் உலகை முன்னேற்றும்
ஆயுதம் முற்றிலும் விலக்கிடுவீர்
வெறிப் போருணர்வை வெறுத்திடுவோம்
வெல்வோம் உலகை அன்பாலே.

உணவைப் பெருக்கும் வழிகாண்போம்
உழைக்கும் மக்களைப் போற்றிடுவோம்
பணம்தான் எல்லாம் என்றெண்ணி
பண்புகள் தம்மை இழக்காதீர்.

புதுப்புது கலைகள் கற்றிடுவீர்
புதுமைகள் பலபல கொணர்ந்திடுவீர்
கற்றலை என்றும் தொடர்ந்திடுவீர்
கடைசி வரைக்கும் படைத்திடுவீர்

ஆயிரம் பட்டங்கள் பெற்றாலும்
அடக்கம் இல்லார் அறிவில்லார்
பணிதல் யார்க்கும் நன்றென்ற
பொய்யா மொழியை மறவாதீர்.

தோல்வியைக் கண்டு துவளாதீர்
துணிந்து நின்றால் வென்றிடலாம்.
ஆல்போல் வாழ்க்கை தழைத்திடுமே!
அகிலாய் எங்கும் மணந்திடுமே!

ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்திடுவீர்
ஒற்றுமை பலமென உணர்ந்திடுவீர்.
பிரிந்து நிற்றல் பலவீனம்.
பின்னப் படுதல் அறிவீனம்.

கூட்டாய் மேய்ந்த எருதுகளை
கொல்ல முடியலை சிங்கத்தால்.
பாட்டினில் படித்த பாடத்தை
பகுத் தறிவோடு சிந்திப்பீர்.

பழமையில் நல்லதை எடுத்துக்கொள்.
புதுமையை அதனில் குழைத்துக்கொள்.
செழுமையில் வாழ்வு சிறக்கட்டும்.
சாதனை செயலில் பிறக்கட்டும்.

பணவெறி என்றும் நன்றல்ல
பண்புகள் தாமே பெருஞ்செல்வம்.
குணமே என்றும் பிரதானம்.
குற்றம் களைந்து வாழ்ந்திடுவீர்.

பதவி வெறியில் மூழ்காதீர்.
பாவச் செயல்கள் புரியாதீர்..
உதவி கேட்டு வருவோரை
உதறித் தள்ள முயலாதீர்.

ஏசுவைப் போல மானுடத்தை
நேசிக்க வேண்டும் எந்நாளும்.
புத்தனைப் போல வாழ்வினிலே
போக்கிட வேண்டும் பேராசை.

முகமது நபிகள் சொன்னபடி
முயன்று நல்வழி சென்றிடுவீர்.
காந்தி காட்டிய பாதையிலே
காத்திடு வீரே சத்தியத்தை.

முன்னைப் போர்கள் இனிவேண்டாம்.
முயன்று கொணர்வோம் நல்லுறவை.
அன்னை தெரசா அடியொற்றி
அணைப்போம் அன்பால் அகிலத்தை.

முதுமையை என்றும் இகழாதீர்.
முன்னோர் சொற்களைத் தள்ளாதீர்.
அக்கறை அவர்மேல் கொண்டிடுவீர்.
அன்பாய் அவர்களைப் புரந்திடுவீர்.

வீரம் மட்டும் நெஞ்சினிலே
இருந்தால் மட்டும் போதாது.
ஈரம் அதிலே சுரக்கட்டும்.
இரக்கத்தால் அது நிரம்பட்டும்.

ஏழையர் தம்மை எந்நாளும்
அணைத்திட வேண்டும் அன்போடு.
கீழாய் எவரையும் நடத்தாதே
மானுடர் யாவரும் சரிசமமே.

வேர்வை சிந்தி பெறப்பட்ட
ஒவ்வொரு பொருளும் வைரம்தான்.
ஆர்வத்துடனே உழைப்ப தனால்
ஆயிரம் சாதனைப் பூப்பூக்கும்.

மூடப் பழக்கம் ஒழித்திடுவீர்
முட்டாள்தனத்தை மாய்த்திடுவீர்.
பகுத்து அறிவீர் என்றென்றும்;
படைப்பீர் புதிய உலகத்தை.

.

சனி, 18 பிப்ரவரி, 2012

பெண்

கல்யாணத்திற்கு முன்
தினந்தோறும்
இரண்டுமுறை குளித்து
பல தடவை முகங்கழுவி
பொருத்தமாய் பொட்டிட்டு
கண்ணுக்கு மையப்பி
மணிக்கணக்காய் ஆராய்ந்து
ஆடை தேர்ந்து
உடுத்திப் பார்த்து
பிடிக்காமல் போய்
மீண்டும் மாற்றி
கோதிய தலையில்
கொத்துப் பூச்சூடி
மருதாணிச் சாயத்தை
நகம் கை பூசி
தன்னை அழகாக்கிக் கொள்வாள்.
கல்யாணத்திற்குப் பின்
அரைத் தூக்கத்தில்
அதிகாலை துயிலெழுந்து
வாசல் பெருக்கி
வண்ணக் கோலமிட்டு
சமையல் பண்ணி
வீடு பெருக்கித் துடைத்து
சலவை செய்து
குளிக்கக் கூட நேரமில்லாமல்
தன்னை அழுக்காக்கிக் கொள்வாள்.

சனி, 11 பிப்ரவரி, 2012

காத்திருக்கிறார்கள்

வானம் பார்த்து
விவசாயி.
தேர்வு முடிவுக்கு
மாணவன்.
அடுத்த தேர்தலுக்கு
அரசியல்வாதி.
பிள்ளைகளை
கல்லூரியில் சேர்க்க
நீண்ட வரிசையில்
பெற்றவர்கள்.
முதல் தேதிக்காக
அரசு ஊழியர்.
திருமணத்திற்கு
முதிர்கன்னி.
பேருந்துக்கும்
புகை வண்டிக்கும்
பயணிகள்.
மரணத்திற்கு
அதி முதியோர்.

சனி, 4 பிப்ரவரி, 2012

நானும் அமெரிக்கனே

நானும் கூட அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்!
நான்தான் அந்தக் கறுப்புச் சகோதரன்.
விருந்தினர் வரும்பொழுது
சாப்பிடுவதற்கு
அவர்கள் என்னை
சமயலறைக்கு அனுப்புகின்றனர்.
சிரித்தபடியே நான்,
நன்றாகச் சாப்பிட்டு
பலசாலியாக வளருகிறேன்!
நாளைக்கு
விருந்தினர் வரும்பொழுது
அவர்களோடு உட்காருவேன்.
யாருக்கும்
தைரியம் இருக்காது
“சமையலறையில் சாப்பிடு”
என்று சொல்ல.
மாறாக,
எவ்வளவு அழகாக இருக்கிறேன்
என்பதைப் பார்த்து
அவமானத்தில் ஆழ்வார்கள்.
நானும் கூட
அமெரிக்காவைத் தான் பாடுகிறேன்!
____ லாங்ஷ்டன் ஹ்யுக்ஸ்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

நாளை நமதே

இப்படியே போகாது காலம்
வெளிச்சம் வரும்
விடியல் மலரும்.
வாழும் நாளெல்லாம்
கோடையே கொளுத்தாது.
சோகங்கள் மட்டுமே
கொண்டதல்ல வாழ்க்கை.
சுகங்களும் தாலாட்டும்.
பாலைவனங்களிலும்
சோலைகள் உண்டு.
வீழ்ச்சியிலும்
பாடம் படிக்கலாம்.
யோசிக்கையில்
வழிகள் கிடைக்கும்.
அடி தரும் காலம்
அள்ளித் தந்து
அணைக்கவும் செய்யும்.
நம்பிக்கையோடு செயல்படு.
நல்லது நடக்கும்.
நாளை நமதே!

சனி, 28 ஜனவரி, 2012

இடமாற்றம்

மதபோதகர்கள்
எங்கள் நாட்டில்
நுழைந்த பொழுது
அவர்களிடம்
பைபிளும்
எங்களிடம்
எங்கள் மண்ணும்
இருந்தன.
அவர்கள் சொன்னார்கள்,
“நாம் எல்லோரும்
ஒன்றாய்
இறைவனைத்
துதிப்போம்!”
நாங்களும்
கண்களை மூடி
உளமாரப்
பிரார்த்தித்தோம்.
கண்களைத்
திறந்த பொழுது
பைபிள்

எங்களிடமும்
எங்கள் மண்
அவர்களிடமும்
இடம் மாறியிருந்தன!
____பிசப் டேஷ்மான்ட் ட்யூட்டு

வியாழன், 7 ஜூலை, 2011

இரவும் மனமும்

ஆயிரம்
கண்கள்
இரவுக்கு.
ஒன்று
மட்டுமே
பகலுக்கு.
எனினும்
சூரியன்
மறைந்ததும்
பூமியில்
மரித்துப் போகிறது
பிரகாசம்.
மனத்திற்கு
ஆயிரம்
கண்கள்.
இதயத்திற்கு
ஒன்று மட்டுமே.
எனினும்
காதல்
மறைந்ததும்
செத்துப் போகிறது
வாழ்க்கையின்
பேரொளி
ஆங்கில மூலம்: பிரான்சிஸ் வில்லியம் போர்டில்லான் !

புதன், 6 ஜூலை, 2011

காலம்

காலம்......
காத்திருப்போருக்கு
மெதுவாய்
நகரும்_
நத்தைபோல.
அச்சத்தில்
அமிழ்ந்திருப்போர்க்கு
வேகமாய்
விரையும்,
வான ஊர்தியாய்.
வேதனையில்
உழல்வோர்க்கு
நீண்டு செல்லும்

சங்கப் பலகை.
மகிழ்ச்சியில்
திளைப்போர்க்கு
குறுகிச்
சிறுக்கும்,
குறளின்
அளவாய்.
காதல் வயப்பட்டோர்க்கோ,
காலம்
அழிவற்ற
முடிவிலி!

பிம்பங்கள் தெரிவதில்லை

அவளுக்கே
தெரியாது
அவளின்
அழகு.
கறுப்புக்கு
எந்தச் சிறப்பும்
இல்லையென்பது
அவளின் கணிப்பு.
ஆடைகள் ஏதுமின்றி
பனைகளுக்கடியில்
நடனமாடியபடி
ஆற்று நீருக்குள்
தன் பிம்பத்தை
பார்த்திருப்பாளாயின்
புலப்பட்டிருக்கும்
அவளுக்கு
அவளழகு.
அவளின் வீதியில்
பனைகளுமில்லை;
பாத்திரங்கழுவிய
அழுக்கு நீரில்
பிம்பங்களும்
தெரிவதில்லை.
_வாரிங் குனே

செவ்வாய், 14 ஜூன், 2011

இளஞ்சிவப்பு உடையணிந்து...

உலக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் கென்னடி. அவர் படுகொலை செய்யப்பட்டபோது உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. குறிப்பாக கருப்பின மக்கள் கென்னடி மூலம் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என நம்பிக் கொண்டிருந்தனர். கென்னடியின் மரணம் அவர்களை ஏமாற்றத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியது. அதன் வெளிப்பாடாக எழுந்த ஒரு அற்புதமான கவிதை தான் “இளம்சிவப்பு ஆடையணிந்து .....” என்ற தலைப்பில் டட்லி ரேண்டால் என்ற புகழ்பெற்ற கறுப்பின கவிஞனின் படைப்பாகும். இசைப் பாடலாகப் பாடப்படும் இந்தப் பாடல் வெளிப்படுத்தும் சோகம் கேட்பவரின் உள்ளங்களை கலங்கடிக்கும் இயல்புடையது. அந்தக் கவிதையின் சாராம்சம் பின்வருமாறு:
மழைநாள் ஒன்றில் மகிழ்வுந்தில் அமர்ந்து
மன்னவன் பயணம் செய்கிறான்.
அது அவனின் இறுதிப் பயணம் !
ஆமாம், அதுதான் அவனின் இறுதிப் பயணம்.
ஆளுநர் அருகே அவன் அமர்ந்திருக்கிறான்.
அரசியும் அவனுடன் பயணம் செய்கிறாள்.

“மூடிய உந்தில் செல்லலாம்” என்று ஆலோசனை சொல்கிறார் ஆளுநர்.
“திறந்த உந்தில் சென்றால் மட்டுமே
கையசைத்து நண்பர்களுடன் பேசிட முடியும்”
என்றே மன்னன் பயணம் தொடர்கிறான்.

ஆர்பரித்த மக்கள் நடுவே ஆனந்தமாக
மன்னனும் அரசியும் பயணிக்கிறார்கள்.
ஆளுநர் சொல்கிறார், “பாருங்கள் வெளியே!
சிரித்தபடி மக்கள் உமை வரவேற்பதை.”

மன்னன் ஆளுநரோட பயணம் செய்கிறான்
அருகில் அரசியும் அமர்ந்திருக்கின்றாள்.
மணமகள் சூடிய ரோஜா மலரின்
இளஞ்சிவப்பு ஆடையை உடுத்திய வண்ணம்.

இளஞ்சிவப்பு ரோஜாவாய் அரசி பவனி வருகிறாள்
எங்கிருந்தோ பாய்ந்து வருகின்றன தோட்டாக்கள்.
இறங்குகின்றன மன்னன் தலையில் இடியாக.
பீறிட்டு பாயும் ஊற்றென ரத்தம் கொப்பளித்தே.
அரசி குனிந்து அன்பனின் தலையை மடிமேல் கிடத்துகிறாள்
இளஞ்சிவப்பாடை ரத்தச்சிவப்பாய் உருமாறியதங்கே!

மன்னன் ஆளுநரோடு பயணம் செய்கிறான்
அருகில் அரசியும் அமர்ந்திருக்கின்றாள்....
அவளின் இளஞ்சிவப்பு ஆடை முழுதும்
ரத்தத்தின் அடர் சிவப்பு நிறம் ஏற்றப்பட்டு!

வெள்ளி, 3 ஜூன், 2011

பிர்மிங்காம் கதைப் பாடல்

படித்ததில் பிடித்ததும் பெருமளவில் என்னைப் பாதித்ததுமான ஒரு கவிதை பிர்மிங்காம் கதைப் பாடல். கருப்பு இன மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பொழுது, அலபாமா மாநிலத்தில் பிர்மிங்காம் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் குண்டு வெடித்தது. கள்ளங்கபடில்லாத சிறுமியர் நான்கு பேர் மடிந்துபோயினர். அந்த துயர நிகழ்வை மையமாகக் கொண்டு டட்லி ரேண்டால் என்ற அற்புதமான கறுப்பினக் கவிஞர் வரைந்த கவிதை ஓவியம் தான் பிர்மிங்காம் கதைப்பாடல் சோகம் சொட்டும் இந்தக் கவிதை, “பாதுகாப்பானது என்று நாம் கருதும் ஒரு இடம் உண்மையில் பாதுகாப்பானது அல்ல” என்ற மையக் கருத்தையும் கொண்டுள்ளது.கவிதையின் சாராம்சம் பின்வருமாறு:
“அம்மா, அம்மா, உனையொன்று கேட்பேன்
அனுமதி தந்தால் அகம் மகிழ்ந்திடுவேன்
பிர்மிங்காம் வீதி விடுதலை ஊர்வலத்தில்
கலந்து கொள்ள அனுப்பி வைப்பாயா?”
“வேண்டாம் என் செல்லமே! வீண்வம்பு எதற்கு?
வெறிபிடித்த நாய்கள் விரட்டிடும், கண்ணே!
விலங்கும் நீர்பீச்சியும் துப்பாக்கியும் சிறையும்
சின்னக் குழந்தையுனக்குப் பொருந்தாது பெண்ணே!”
“ஆனால்....அம்மா, தனியாய் நான் போகவில்லை;
அருமைத் தோழிகள் உடன் வருகின்றனர் .
அடிமை நிலையிலிருந்து நாட்டை வென்றெடுக்க
பிர்மிங்காம் வீதிகளில் ஊர்வலம் செல்கிறோம்.”
“வேண்டாம் செல்லமே,சொல்வதைக் கேள்;
தேவாலயம் சென்று மாதாவை வணங்கிடுவாய்
குழந்தைகள் இசைக் குழுவில் பாடிக் களித்திடுவாய்!”
அருமை அம்மா ஆசைமகளை அருகில் அழைத்தாள்;
கருமைவண்ண முடியை நன்கு கோதி முடித்தாள்;
ரோஜாமுகம் பளபளக்க நீரால் கழுவினாள்;
வெண்ணிறக் கையுறை கரங்களில் மாட்டினாள்;
சின்னப் பாதங்களில் காலணி அணிவித்தாள்.
ஆலயம் நோக்கி அனுப்பி வைத்தாள்.
அன்னையின் மனதில் அளவிலா ஆறுதல்.
ஆலயம் தன்னில் அருமைக் கண்மணி
பாதுகாப்பாய் இருப்பதை எண்ணி
அம்மா முகமெங்கும் ஆனந்தப் புன்முறுவல்!
அந்தோ, பரிதாபம்! அப்பாவி அம்மாவுக்கு
அப்போது தெரியவில்லை
அது தான் அவளின்
கடைசிப் புன்முறுவல் என்று.
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே முடிந்துபோனது.
குண்டு வெடித்ததில் சிதறியது தேவாலயம்.
நெஞ்சம் பதைபதைக்க
கண்ணீர் பெருக்கெடுக்க
தேவாலயம் நோக்கி
பிர்மிங்காம் வீதிகளில்
ஓட்டமாய் ஓடினாள்
அந்த அபலைத் தாய்!
குழந்தையின் பெயரைக் கூவியபடி
குவிந்திருந்த கண்ணாடி, செங்கல் துண்டுகளுக்கிடையே
கைவிட்டுத் துழாவினாள்.
அய்யோ, கடவுளே!
கைக்குக் கிடைத்தது ஒரு காலணி மட்டுமே –
ஆசை மகளின் ஒற்றைக் காலணி!
வெறி கொண்டவளாய் கத்தினாள்,
“இதோ, என் கண்மணியின் காலணி!
ஆனால்... எங்கே, என்னாசைக் கண்மணி?
ஐயோ! எங்கே, என் செல்ல மகள்?”

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

உண்டு! உண்டு! உண்டு!

கொட்டுகின்ற வியர்வைக்கு கூலி உண்டு!
கோலமயில் ஆட்டத்தில் கவர்ச்சி உண்டு!
தட்டுகின்ற முரசத்தில் தாளம் உண்டு!
தாமரை மலரினிலே வாசம் உண்டு!
வட்டநிலா ஒளியினிலே குளிர்ச்சி உண்டு!
வாகைமலர் வண்ணத்தில் வெற்றி உண்டு!
மெட்டிஒலி தாளத்தில் சேதி உண்டு!
மேகத்தின் அழுகையிலே அமிழ்தம் உண்டு!

திங்கள், 3 ஜனவரி, 2011

காதலிப்பது பற்றி

காதலித்தே ஆகவேண்டும்
என்பது
அப்படியொன்றும்
சாப்பிட்டே ஆகவேண்டும்
எனுமளவுக்கு
கட்டாயம் இல்லை.
பிறகொரு நாள்
பார்க்கலாம்
கடமைகள் எல்லாம் முடிந்து.
இப்போதைக்கு
அடமானத்தில் இருக்கும்
அம்மா நகையை
திருப்பவேண்டும்.
மாதக் கணக்காய்
தள்ளிப்போகும்
அப்பாவின் கண்புரைக்கு
அறுவை சிகிச்சை
செய்யவேண்டும்.
தங்கையின் காதுக்கு
கம்மல் வாங்கவேண்டும்.
பொறியியல் படிக்கும்
தம்பிக்கு
விடுதிக் கட்டணம்
கட்டவேண்டும்.
எல்லாம் முடித்து
அதற்குப் பிறகும்
வயசிருந்து
உணர்ச்சியிருந்து
நேசிக்கவும்
நேசிக்கப்படவும்
ஆண் மகன் ஒருவன்
அகப்பட்டால்
யோசிக்கலாம்
காதலிப்பது பற்றி!

புதன், 22 டிசம்பர், 2010

நிறுத்து அழுகையை

இழப்புகள்
அழுகையால்
சரியாகாது.

ஏழ்மை
புலம்பலால்
விலகிடாது.

கவலைகள்
கதறலால்
கரைந்திடாது.

வீழ்ச்சிகள்
நோவதால்
விடைபெறாது.

இறப்பென்ன
பார்க்காத
புது நிகழ்வா?

இழப்பென்ன
நடக்காத
அதிசயமா?

வாழ்வென்ன
வற்றாத
பேராறா?

நிறுத்து
அழுகையை!
உயர்த்து
கரங்களை!
துணிவு கொள்
நெஞ்சில்!
தொடர்ந்து நட
நேர்வழியில்!

தொகை தொகையாய்
தொடரும்
துயரங்கள்
பொடிப் பொடியாய்ப்
போகும்
விரைவில்.

நம்பிக்கை தான்
வாழ்க்கை!
அது தான்
புதிய வேதம்!
உள்ளத்தில்
பதிக்க வேண்டிய
இனிய கீதம்!

சனி, 18 டிசம்பர், 2010

மாணவர்-பெற்றோர்-ஆசிரியர்

அளவுக்கு மீறி உணவு ஊட்டினால், குழந்தையின் உடல் நலத்துக்கு ஊறு வந்து சேரும். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால், குழந்தையின் மனதிற்கு ஊறு வந்து சேரும்.

பூ போன்ற மனதில் புயல் வேகத்தில் எண்ணங்களைத் திணித்தால் பட்டுப் போவது குழந்தைகள் மட்டுமல்ல... தேசமும் தான்.

புத்தகங்களின் கனத்தால் குழந்தையின் மனம் அழுத்தப்படக் கூடாது.

பாடமானாலும் பாலானாலும் அளவறிந்து புகட்டுதலே அறிவுடைமை.

பாடப் பொருளோடு அன்பையும் குழைத்துக் கற்றுத் தரும் ஆசிரியரே குழந்தையின் உற்ற நண்பராவார்.

ஆசிரியரைப் பார்த்து குழந்தை அச்சப்படும் பொழுது அந்த இடத்தில் கற்பித்தல் தோற்றுப் போகிறது.

கல்வி சரியான காலத்தில், சரியான அர்த்தத்தில் புகட்டப்படாத பொழுது தான் பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும், வன்முறையாளர்களும், சமூக விரோதிகளும் நாட்டில் உருவாகிறார்கள்.

சாதி, மதம், நிறம், இனம், மொழி இவற்றைத் தாண்டி, எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கிற மனிதர்களை உருவாக்குவதே சரியான கல்வி முறை.

இயற்கையை நேசிக்கவும் ரசிக்கவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். அப்பொழுது தான் இந்த பூமியில் எப்பொழுதும் இயற்கை எழில் நிரம்பி வழியும்.

குழந்தையிடம் ஏராளமான ஆற்றல்களும் திறமைகளும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை முழு வீச்சில் வெளிக் கொணர்வது ஒரு சிறந்த ஆசிரியனின் கடமையாகும்.

குழந்தைகளுக்கு அன்போடு சேர்த்து, அறிவைப் புகட்டும் பொழுது, நாட்டிற்கு எல்லோரையும் நேசிக்கிற அறிவாளிகள் கிடைக்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு எல்லாம் தெரியும் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாத வண்ணம் ஆசிரியர்கள் தங்கள் அறிவை நாள்தோறும் விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

எப்பொழுதும் ஆசிரியர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் தற்கால குழந்தைகளின் உள்ளங்களில் கேள்விகளும் ஐயங்களும் முளைத்த வண்ணம் உள்ளன.

குழந்தைகளின் வயது, மனது, ஈர்க்கும் சக்தி, உடல்நலம், தனிநபர் வேறுபாடுகள் ஆகிவற்றைக் கருத்தில் கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்களே கற்பித்தலில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு சராசரியான குழந்தையின் மனதில் அன்றைய பாடப்பொருளை வெற்றிகரமாகப் பதிய வைக்கும் ஆசிரியாருக்கு அன்றைய பொழுது அர்த்தமுள்ள பொழுதாக அமைகிறது. அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியை விட அவருக்கு வேறு எந்தப் பரிசும் தேவையில்லை.

பின் தங்கிய குழந்தைகளை அறிவாளிகளாக மாற்றுதல் என்பது வறண்ட களர் நிலத்தை வளமான விளைநிலமாக மாற்றுவதற்கு ஒப்பாகும்.

கல்வி என்னும் அகல் விளக்கால் மட்டுமே அறியாமை என்னும் காரிருளை அகற்ற முடியும்.

கல்வி இல்லாத தேசத்தின் மீது வறுமையும் அறியாமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மூட நம்பிக்கைகளும் படையெடுத்துப் பாழ்படுத்தும்.

ஒரு கல்வி முறை வன்முறையாளர்களையும், தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும் உருவாக்குமானால் அந்தக் கல்வி முறையை ஒழித்துக் கட்டுவோம்.

எந்தக் கல்வி முறை மனிதநேயம் மிக்க மனிதர்களை உருவாக்குமோ அந்தக் கல்வி முறையை மலர் தூவி வரவேற்போம்.

கல்வி தேர்ந்த மருத்துவர்களையும், திறமையுள்ள பொறியியலாளர்களையும், அறிவுக் கூர்மையுடைய விஞ்ஞானிகளையும், நல்ல மெய்ஞானிகளையும் உருவாக்கட்டும்; கூடவே, அவர்களை மனிதநேயம் மிக்கவர்களாகவும் மாற்றட்டும்.

தலை நிமிரச் செய்வதும், தன்மானம் ஊட்டக்கூடியதும், தன்னம்பிக்கை தழைக்கச் செய்வதும் வாழ்வதற்கான தகுதிகளை வளர்ப்பதும் உண்மையான கல்வியின் மேன்மையான நோக்கமாகும்.

வியாழன், 9 டிசம்பர், 2010

மானுடம் பாடிய குயில்

பாரதி-
இந்திய தேசக்கவி
நம் நேசக்கவி
வெளிவேச மனிதரின்
முகத்திரை கிழித்த
ஆவேசக் கவி.

மனிதனை
மனிதனே ஒதுக்கும்
இப்பாவ பூமியில்
“காக்கை குருவி எங்கள் சாதி”
என
எல்லா உயிரையும்
தன்னோடணைத்த
நேசமிக்க மகாத்மா.

கூழுக்காகவும்
மன்னவரின்
குதூகலத்திற்காகவும்
ஆளுக்காகவும்
ஆழாக்குப் பாலுக்காகவும்
பாட்டெழுதிய
கவிஞர் நடுவில்
இவன்
ஒருவன் மட்டுமே
மானுடம் பாடிய குயில்.
மனித ஜீவன்களுக்காக
ஜெபித்த ஞானாசிரியன்.

பண்டிதர்களின்
பாதாளச் சிறையில்
தண்டிக்கப் பட்ட
அன்னைத் தமிழை
பாமரரின்
செவிகளில் ஒலித்தவன்.
அதனாலேயே
இன்று
வகுப்பறையில்
மாணவன்
வண்டமிழை
அஞ்சாமல் கற்கிறான்.

பாரதியின் கவிதைகள்
வெறிச்சோடிப் போன
மனப்பாதைகளில்
வெளிச்சம் காட்டிய
விளக்குகள்
நிஜத்தின்
பிரவேச வாயில்கள்
உள்ளத் துடிப்புகளின்
பிரசவ சாலைகள்.

பாரதி
வெறும்
தமிழ்க்கவி மட்டுமல்ல
தாகூர் சுட்டிய
“குறுகிய உட்சுவர்” களை
கடந்து வெளிவந்த
தேசியக் கவி:
சர்வதேசக் கவி.
அதனால் தான்
பாரதம் முழுவதும்
பாரதியின்
பா ரதோற்சவம் நடக்கிறது
பொதுவுடைமை மண்ணிலும்
அவனின் புகழ்க்கொடி பறக்கிறது.

பாரதி
அடங்காத
பேராசை நோயில்
சிக்கி
அலைபாயும் மனதினர்க்கு
காணி நிலந்தன்னில்
கட்டாக வாழும் வித்தை
கண்டு தெளிவித்த
கண்கண்ட மருத்துவன்.
சுரண்டிக் கொழுத்து
சுகத்தில் மிதப்பவனை
அண்டிப் பிழைத்தும்
அடிமையின் பசி
அடங்காதது கண்டு
ஜெகத்தினை
அழிக்கக் கிளம்பிய
செந்தீக் கவிஞன்.

இந்த
தேசபக்திப் பாடகன்
பொன்னில் புரள
ஒருபோதும் நினைத்தவனில்லை
மாறாக
மண்ணில் விழுந்து
அன்னையின்
மடியில் புரண்டதாக
ஆனந்தித்தவன்.

காலங்காலமாக
யுக யுகாந்திரங்களாக
பிள்ளை பெறும்
வெறும்
பண்ணைகளாக இருந்த
பெண்களை
நாய் நிலையிலிருந்து
மீட்க
இவன் தன்
கவிதைச் சவுக்குகளை
சுழற்றிய பொழுது தான்
ஆணினத்தின்
எருமை மனங்களில்
வெட்கக் கோடுகள்
இழுக்கப்பட்டன
விவேக ரேகைகள்
மலரத் துவங்கின.

இந்த
ராஜாளிக் கவிஞனின்
ராட்சதச் சிறகுகள்
படபடத்த பொழுது
எழுந்த
உரிமை உணர்வுச் சூறாவளியில்
அடிமை மரங்களின்
சரிவுகள்
ஆரம்பமாகின.

சுற்றிலும் இருந்த
சமுதாயத்தை
உற்றுப் பார்த்துவிட்டு,
பேனாவில் இருந்த மையை
கீழே ஊற்றிவிட்டு
தன் ரத்தத்தை நிரப்பி
பாரதி
எழுதத் துவங்கிய பொழுது
“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாடலின்
பிரசவம் நிகழ்ந்தது
சத்தியமூர்த்திகளையே
நடுங்க வைத்த
இந்த
ருத்ரமூர்த்தி
இன்னும் இருந்திருந்தால்...
இலக்கியத்திற்காக
நோபல் பரிசு பெற்ற
இந்தியரின் எண்ணிக்கை
இரண்டாக
உயர்ந்திருக்கும்!

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வேண்டாமே தீண்டாமை!

*இது முட்செடி
அது முந்திரி
என
வேற்றுமை பார்த்தா
வீசுகிறது
காற்று?

*பாவியின்
நிலமென்றும்
பரிசுத்தவானின்
நிலமென்றும்
பாகுபடுத்திப் பார்த்தா
பொழிகிறது
மழை?

*கருப்பாயிருந்தாலும்
சிவப்பாயிருந்தாலும்
வெளுப்பாயிருந்தாலும்
படும்
ஒளியிடத்தில் உண்டா
ஓரவஞ்சகம்?

*இன்னார்க்கு
மட்டுமே
விளைவேன் என்று
மண்ணும்
இவர்கட்கு மட்டுமே
பெய்வேன் என்று
விண்ணும்
அடம் பிடித்ததை
யாரேனும்
கண்டதுண்டா?

*யார் நட்டாலென்ன,
முளைக்கவா
மறுக்கிறது
விதை?

*எல்லோர்க்கும்
அல்லவா
தாகம் தீர்க்கிறது
தண்ணீர்!

*இயற்கையில்
இயங்கும்
உறவின் தத்துவத்தை
எங்கோ
தொலைத்துவிட்டு
செயற்கையாய்
நமக்குள்
நெடிய சுவர்களை
எழுப்பிக் கொண்டோம்.

*மாக்களில்
உண்டா
தீண்டாமை?
வண்ணம் கொஞ்சும்
மலர்களில்
உண்டா
நெருங்காமை?
மாந்தரில் மட்டும்
ஏனிந்த
மனப்பான்மை?

*இது கணினி யுகம்
உலகின்
எதிர் எதிர் மூலைகளில்
வசிக்கின்ற
மனிதர்க்கு நடுவில்
நிறம் கடந்து
மொழி தாண்டி
இனம் விலக்கி
மதம் தப்பி
நெருக்கம் பூக்கும்
புதுமை யுகம்.

*மண்ணுக்குள்
புதைக்க வேண்டிய
கற்காலத் தீண்டாமையை
மனதிற்குள்
புற்றாய்
வளர்க்கலாமா?

*மதத்தைத்
தீண்டோம்
எனச் சொல்வோம்
அது தான்
மனதின் பக்குவம்.
சாதியைத் தீண்டோம்
எனச் சொல்வோம்
அதுவே
தமிழ் நாகரிகம்.
மனிதனைத் தீண்டோம்
என்போமானால்
அது மகா அநாகரிகம்.

புதன், 6 அக்டோபர், 2010

நம்பிக்கை

நேற்றுப் போல்
இன்று இல்லை.
நாளை எப்படியென
நமக்குத் தெரியாது.
நல்லது நடக்கும்.
இன்னல் ஒழியும்.
இனிமை மலரும்.
இன்பம் பெருகும்.
நம்பிக்கை தான்
வாழ்க்கை.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனவு மெய்ப்பட வேண்டும்!

இடி விழுந்தாலும்
இடியாத
மனம் வேண்டும்.
எதிரியையும்
நேசிக்கும்
இதயம் வேண்டும்.
நல்லதே
நடக்குமென்ற
நம்பிக்கை வேண்டும்.
நினைத்ததை
நடத்தியே
தீர்வதென்ற
உறுதி வேண்டும்.
எல்லாமும்
எனக்கென்ற
எண்ணம் நீங்கி
'எல்லார்க்கும்
எல்லாமும்'
எனும் எண்ணம்
ஓங்க வேண்டும்.
'முடியாது'
என்ற சொல்
விடை பெற்று
ஓட வேண்டும்.
முயலாத பேர்களுக்கு
இடமில்லை
மண்ணகத்தில்
என்று விதி
இயற்றல் வேண்டும்.
கூராக வேண்டும்
சிந்தனை.
நேராக வேண்டும்
பார்வை.
யாராண்டால்
என்ன எனும்
அலட்சியம்
இனியேனும்
நமைவிட்டு
அகல வேண்டும்.
தமிழ் மீது
என்றென்றும்
சரியாத
காதல் வேண்டும்.
தேசத்தின் பால்
தணியாத
பாசம் வேண்டும்.
சாதி மதப்
பிரிவினைகள்
நிரந்தரமாய்
ஒழிய வேண்டும்.
மண்ணெல்லாம்
மழை
கொட்ட வேண்டும்.
ஆறெல்லாம்
கரை புரண்டு
ஓட வேண்டும்.
வயலெல்லாம்
செந்நெல்லாய்ச்
சிரிக்க வேண்டும்.
வயிறெல்லாம்
பசியாறிக்
குளிர வேண்டும்.

புதன், 16 செப்டம்பர், 2009

மழை

மழை இல்லையேல் மன்னுயிர் இல்லை

மழை பொழிந்தால் மண் சிரிக்கும்
மண் சிரித்தால் பொன் விளையும்.

மேகம் அழும் பொழுது மண்ணின்
தாகம் தணிகிறது.

மழையும் மரங்களும் நல்ல நண்பர்கள்.
மழை பொழிய மரங்கள் வளரும்.
மரங்கள் வளர மழை பொழியும்.

தேவர் உலகில் அமிழ்தம் உண்டோ இல்லையோ
தெரியாது.ஆனால், வானத்தில் அமிழ்தம் உள்ளது.
அதன் பெயர் மழை.

குளிர்விக்கும் மழைக்கு கொதிப்பேறி விட்டால்
நாட்கணக்கில் கொட்டோ கொட்டென்று கொட்டும்;
வெள்ளம் பெருக , விரயமாகும் மண்.

மழை சொட்டவும் செய்யும்; கொட்டவும் செய்யும்.

மழைநீரைத் தேக்கி வைக்க குயவன் பானைகள்
செய்துகொண்டிருந்தான். மழை பெய்து மண் பானைகள்
கரைந்து காணாமல் போயின.

பெய்யாமல் கெடுப்பது மட்டுமின்றி பெய்தும் கெடுக்கும்
ஆற்றல் மழைக்கு உண்டு என்பர் தமிழ் ஆன்றோர்.

மழை பொழிந்து மண்ணில் ஈரம் கசிந்தால் தான்
மக்கள் மனம் நிறைந்து மகிழ்வார்கள்.

மழுங்காகி.....மழுங்காகி

"ஏங்க, உங்களத்தான்,
படியில நிக்காதீங்க
ஏறி, எறங்கறவங்களுக்கு
எடஞ்சல் பண்ணாதீங்க",
நடத்துனர்
நயமாகவும்
நாகரீகமாகவும் வேண்டினார்,
பயனேதும் இல்லாது.
"ஒன்னத் தானப்பா
படிய விட்டு மேலேறு,"
இம்முறை
நடத்துனர் குரலில்
காரமும்
கண்டிப்பும் தெறித்தது.
ஆனாலும்
நம் ஆசாமி
அசைய மறுத்தான்.
"ஏறுடா மேலே
கத்திகிட்டே இருக்கேன்
புடிச்சி வெச்ச
புளி மாதிரி
நிக்கிறியே."
இந்த மொழி
நன்கு புரிந்ததால்
அவசர அவசரமாக
மேலேறினான் ரோசக்காரன் (?)

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

கிரேண்ட் கேன்யன்


கிரேண்ட் கேன்யன்,
நீரும் வளியும்
குளிரும் வெப்பமும்
கல்லையும் மண்ணையும்
கடைந்தும் கரைத்தும்
எழுதிய அற்புதம்!
உலக மகா அதிசயம்!
இயற்கை படைத்த
எழில் மிகு காவியம்!

வெறி பிடித்த
கொலராடோவின்
திமிர் பிடித்த வெள்ளம்
வடித்தெடுத்த
வண்ணக்காட்சிதான்
கிரேண்ட் கேன்யன்!

செம்மாந்து நிற்கும்
செங்குத்துப் பாறைகள் நடுவில்
ஆழ ஆழமாய்
பள்ளத்தாக்கு........
அதற்குள்ளே
நீலப் பெரும்பாம்பாய்
வளைந்து வளைந்து
விரைந்து ஓடும்
கொலராடோ நதி!

எத்தனை விதமாய்
பாறைகள்.
காலங்காலமாய்
இயற்கையின்
இடைவிடாத செதுக்கலில்
எத்தனை விதமாய்
வடிவங்கள்!
வடிவத்திற்கு ஏற்ப
வைக்கப்பட்ட பெயர்கள்!
அமெரிக்கப் பாறைகளில்
இந்தியக் கடவுளரை
செதுக்கியுள்ள
இயற்கையின் விளையாட்டை
என்னென்று நாம் சொல்ல!
குளிர் காலம்
பாறை உச்சிகளில்
பனிப் பூக்களால்
முடி சூட்டி மகிழும்!

உதயத்தின் பொழுதும்
மறையும் பொழுதும்
கிரணக் கற்றைகளை
கிரேண்ட் கேன்யனில் தெளித்து
பாறை முகடுகளில்
சூரியன் செய்யும்
வர்ண ஜாலங்களை
வார்த்தைகள் கொண்டு
வர்ணிக்க முடியாது.
இருண்ட அதன் ரகசியங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
வெளிக் கொணரும்
காலைக் கதிரவனின்
கலை விளையாட்டை
ரசிப்பதற்கென்று
வெவ்வேறு நாடுகளிலிருந்து
வித விதமாய் மனிதர்கள்!

வானமும் வளியும்
ஞயிற்றின் ஒளியும்
மண்ணும் காலமும்
மழை நீர் பெருக்கும்
ஒன்றிணைந்த
பேரானந்தப் பெருவெளி தான்
கிரேண்ட் கேன்யன்!

மனிதன் அமைத்ததல்ல-
மயன் சமைத்ததல்ல-
யாருடைய ஆணைக்கும்
அடங்காமல்
எவ்விதத் திட்டமும்
இல்லாமல்
யுக யுகங்களாக
இயற்கை பாடிய
இணையற்ற காவியமே
கிரேண்ட் கேன்யன்!

ஆறு மில்லியன் ஆண்டுகள்
வரலாறு கொண்ட
கிரேண்ட் கேன்யனின்
ததும்பி வழியும் அழகையும்
தன்னில் ஒளித்து வைத்திருக்கும்
இரகசியங்களையும்
ஒரு நாளில் பார்த்து
சொல்லவும் முடியாது......
ஒரு பக்கத்தில் எழுதி
புரிய வைக்கவும் முடியாது!

[ 2004 அக்டோபர் 29 மாலையிலும் 30 காலையிலும்
மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன்
கிரேண்ட் கேன்யனை ரசித்த பொழுது மனதில்
கிளர்ந்த உண்ர்வுகளின் பதிவுகளே
மேற் கண்ட வரிகள் ]

புதன், 9 செப்டம்பர், 2009

பயணம்

அந்த வண்ணத்துப் பூச்சி
நான் பயணித்த
இரவுப் பேருந்தில்
மெல்லிய
இறக்கைகளை
அசைத்தவண்ணம்
பறந்து கொண்டிருந்தது
பறந்து பறந்து
சலித்தது போல்
யாருடைய சட்டையிலோ
அல்லது
சேலையிலோ
ஒட்டிக்கொண்டது
அதை
மறந்திருந்த பொழுது
மீண்டும்
பறக்க ஆரம்பித்தது.
அம்மா மடியில் இருந்த
சின்னக் குழந்தை
கையை நீட்டிப்
பிடிக்க முயன்று
தோற்று
அழுதது.
இடையில் நான்
இறங்கிக் கொண்டாலும்
அந்த வண்ணத்துப் பூச்சி
என்னவாகியிருக்குமோவென
சின்னக்கேள்வி
மனதில்
ஒரு பெரிய
சுமையாய்.........
யாருடைய
பூட்ஸ் காலிலும்
நசுங்காமல்
இருந்தால் போதும்!

சனி, 5 செப்டம்பர், 2009

காதலின் தத்துவம்

ஊற்றுகள்
நதிகளோடு
சங்கமிக்கின்றன.
நதிகள்
கடலோடு
ஐக்கியமாகின்றன.
வானத்திலுள்ள
வாயுக்கள் அனைத்தும்
இனிமையான
உணர்ச்சிப் பெருக்கில்
என்றென்றும்
ஒன்றோடொன்று
கலக்கின்றன.
உலகத்தில்
தனித்ததென
ஒன்றுமேயில்லை.
எல்லாப் பொருள்களும்
ஒரு புனித விதியின் கீழ்
ஒன்றையொன்று
சந்தித்து
ஒன்றாகக் கலக்கின்றன.
நான் மட்டும்
ஏன்
உன்னோடு
கலத்தல் கூடாது?
நன்றாகப் பார்,
அந்த மலைகள்
வான் முகட்டை
முத்தமிடுவதையும்
இந்தக் கடலலைகள்
ஒன்றோடொன்று
பின்னிப் பிணைவதையும்.
மன்னிக்கப் படுவதேயில்லை
எந்தப் பூவும்
சகப் பூவை
வெறுக்கும் பட்சத்தில்.
பூமியை
இறுகப் பற்றுகிறது
ஞாயிற்றின் ஒளி வீச்சு.
கடலை
முத்தமிடுகிறது
சந்திரனின்
கிரணக் கற்றை.
இனிய இந்த
வேலைகளுக்கெல்லாம்
என்ன மதிப்பு,
என்னை
நீ
முத்தமிடாவிட்டால்?

ஆங்கில மூலம்:ஷெல்லி
தமிழில் பெயர்ப்பு:ஜகன்

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

புத்தகங்கள்

மனிதர்களை இணைக்கக்கூடிய வலிமையான பாலங்கள் புத்தகங்கள் .
உலகில் நிகழ்ந்த போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும்
தூண்டுகோல்களாக இருந்தவை புத்தகங்களே.
சமூகத்தை தலைகீழாகப் புரட்டியெடுக்கும் ஆற்றல் வாய்ந்த
நெம்புகோல்கள் புத்தகங்கள்.
புத்தகங்கள் வாழ்க்கையில் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும்
கொண்டுவருகின்றன.
புத்தகங்கள் நம்முடைய நிரந்தர நண்பர்கள்.
படைத்தவர்களையும் படிப்பவர்களையும் ஒருங்கிணைக்கின்றன புத்தகங்கள்.
அருவி நீரைக்கொட்டுவதைப்போல புத்தகங்கள் அறிவைக்கொட்டுகின்றன.
பல புத்தகங்களை வாசிக்கிறோம்; சில புத்தகங்களில் மட்டுமே வசிக்கிறோம்.
புத்தகங்களை நேசிப்பவனால் மட்டுமே மனித குலத்தை
நேசிக்கமுடியும்.
படிப்பது மட்டும் போதாது; படித்தபடி நடப்பது முக்கியம்.
படிப்பதற்குக் கேட்டால் மகிழ்ச்சியோடு புத்தகங்களைக் கொடுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள்.
உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்.
வீட்டில் ஒரு நூலக அறை அமையும் பொழுது, வீடு
கூடுதல் அழகு பெறுகிறது.
ஒரு குழந்தையிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால்,
மனிதகுலத்தை நேசிக்கும் ஒரு மனிதன் உருவாவது திண்ணம்.
படைப்பாளிகளே! குழந்தைகளுக்காக நிறையப் புத்தகங்களை எழுதுங்கள்.
உங்கள் வருங்காலச் சந்ததிக்கு மண்ணும் பொன்னும் சேர்த்துவிட்டுச் செல்லும் பொழுது,
கொஞ்சம் புத்தகங்களையும் விட்டுச் செல்லலாமே!

புதன், 2 செப்டம்பர், 2009

பூக்களைப் பறிக்காதீர்

பூ என்றால்
உங்களில்
பல பேர்க்கு
அழகும்
மணமும் தான்
ஞாபகத்தில்
தெறிக்கும்
தலையில் சூடி
அழகூட்ட
அறிவீர்கள்
பூக்களைக்
காய்ச்சிக்
கஷாயமும்
அத்தரும்
சென்ட்டும்
தயாரிப்பீர்.
உங்களைப்
பொறுத்தமட்டில்
பூ என்பது
உங்களுக்காகவே
படைக்கப்பட்ட
நுகர்பொருள்!
ஆனால்
யாராவது
ஒரு கணமேனும்
இந்தப் பூக்களைப்
பூப்பதற்கு
தாவரம் புரிந்த
தவம் பற்றி
யோசித்ததுண்டா?
தன்னின்
உறுதியான
வேர்களைச் செலுத்தி
நெடும்
பாறைகளையும்
கடும்
மண்ணடுக்குகளையும்
பிளந்து சென்று
தண்ணீர்
கொண்டு வர
தாவரம் செய்த
பகீரதப்
பிரயத்தனம் பற்றி
சிந்தித்ததுண்டா?
மரங்களில்
பூக்களை
ரசிக்கும்
நீங்கள்
பூக்களில் உள்ள
மரங்களை
நினைப்பதுண்டா?